முறை



அப்பாவின் கம்பெனி என்றாலும், அதில் பதவியேற்க தனக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டமும் எம்.பி.ஏவும் தேவை என்பதை உணர்ந்திருந்தான்  சரவணன். முறையாக அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அவன் பதவி ஏற்றபோது அப்பா மோகனசுந்தரம் பூரித்துப் போனார். ‘‘சரவணா, நம்  சொந்தங்கள் எல்லாரும் உன் கல்யாண விஷயமா தொந்தரவு செய்யறாங்க! நல்ல பொண்ணா பார்த்துடலாமா?’’ கேட்டார் மகனிடம்.

‘‘செய்யலாம்பா! ஆனா அதுக்கு முன்னாடி முறைப்படி சில விஷயங்களை முடிக்க வேண்டியிருக்கு. நான் படிக்கும்போதே கூடப் படிச்ச வந்தனா  என்கிற பொண்ணைக் காதலிச்சி, ரகசியமா பதிவுத் திருமணமும் செய்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாம  விலகிட்டோம்! அவள் மும்பைல வேலை கிடைச்சு போயிட்டா.

இப்ப எங்களுக்குள்ள எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தாலும் எதிர்காலத்தில் சட்டச்சிக்கல் வரக்கூடாது இல்லையா? அவ அட்ரஸ் இருக்கு... நீங்க  ஒருமுறை போய் விவரம் சொல்லி ‘டைவர்ஸ்க்கு அனுமதி வாங்கிட்டு வந்திடுங்கப்பா! ஏன்னா, எதையும் முறையா செய்யணும் இல்லையா!’’ என்று  சொல்லி ஷாக் கொடுத்து முடித்தான் சரவணன்.‘முறையே இல்லாம எல்லாம் நடத்தி முடிச்சுட்டு முறையைப் பற்றி பேசுறியாடா?’ என்ற கேள்வி  அப்பா மனதில் எழுந்து நின்றது.

துடுப்பதி ரகுநாதன்