இது ஆக்‌ஷன் சாகசம்!



பிரசாந்த் Feeling Proud!

‘‘பொதுவா ஒவ்வொரு ப்ராஜெக்டுக்கும் ரொம்ப அவகாசம் எடுத்துக்கிற மாதிரி ஆகிடும். அதுவும் சமீபமா வருஷக் கணக்கில் டைம் எடுத்துக்கிற  படங்களா பண்ணிட்டு இருந்தேன். அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு வரிசையா விதவிதமா பிரசாந்தை காட்டப் போறேன்.

ஆர் யூ ரெடி ஃபார் தி ஷோ!’’ - ஜிம் பாடியில் ஜம்மென்று வந்து அமர்கிறார் பிரசாந்த். நுங்கம்பாக்கம் வீட்டில் அமைதி  சில்லிடுகிறது. இதோ, ‘சாஹசம்’ அடுத்த ரிலீஸாகக் காத்திருக்கிறது.

‘‘என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகனோட முதல் சந்தோஷம் என்ன தெரியுமா? சவால்ல ஜெயிக்கிறது! ஒரு கேரக்டர்ல நுழைஞ்சு, அதை அப்படியே  100 சதவீதம் எடுத்திட்டு வந்திட்டா, அதுதான் சந்தோஷத்தின் உச்சம். அந்த மகிழ்ச்சியை நான் அனுபவிச்சிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

என்  கேரியர்ல இந்த ‘சாஹசம்’ எனக்கான நல்ல விஷயம்.என் சினிமா பயணத்தை யோசிச்சுப் பார்த்தா அழகா இருக்கும். பாலுமகேந்திரா,  ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர்னு செய்தது எல்லாமே  வேற வேற படங்கள். எல்லோரும் எனக்குப் பல வண்ணங்கள் கொடுத்து அழகு  பார்த்தாங்க.

இன்னிக்கு டிரெண்டா ஆகியிருக்கற பேய்ப் படங்களுக்கு முன்னமே ‘ஷாக்’னு ஒரு படம் கொடுத்தோம். அப்புறம் ‘பொன்னர் சங்கர்’ கலைஞர் ஐயா  கைவண்ணத்தில் வந்தது. அப்புறம் அப்பா நடித்த அதே வேடத்தை இந்தியாவிலேயே யாரும் செய்யாத விதமாக மகனான நானே நடிச்சு  ‘மம்பட்டியான்’ வந்தது. இப்போ ‘சாஹசம்’ என்னுடைய கேரியரில் மற்றுமொரு முக்கியமான படம்!’’‘‘காஸ்ட்யூம்ஸ், நடனம்னு வேற தினுசில்  இருக்கீங்க போல...’’

‘‘அப்பா பாடல்களில் ஆரம்பித்து எல்லாத்திலும் தன் உழைப்பை எக்கச்சக்கமாகக் கொட்டினார். இன்னிக்கு தெலுங்கில் பெரிய இடத்தில் இருக்கிற  தமன் ஐந்து பாடல்களைக் கொடுத்தார். எனக்கு, அப்பாவுக்கு, அவருக்குனு எல்லாருக்கும் திருப்தியா வந்த பாடல்கள் அவை. சிம்பு, அனிருத், ஷங்கர்  மகாதேவன், ஸ்ரேயா கோஷல்னு பாடல் பாட தமன் கேட்டவரை எல்லாம் வரவழைச்சு கொடுத்தார் அப்பா. லட்சுமி மேனனுக்கும் ஒரு பாட்டு...  கைவரிசையைக் காட்டியிருக்கார். எங்கே ஷூட்டிங், எப்படி செட், எந்த நாட்டுக்குப் போகணும்... எது கேட்டாலும் ‘ரைட்... ரைட் போகலாம்’னு பதில்  வந்தது.

ஹீரோவோட லவ், சென்டிமென்ட், ஃபேமிலி இவற்றுக்கு இடையில் வருகிற வில்லன்... இப்படிப் போகும் கதை. இதுவரை நீங்க பார்க்கவே பார்க்காத  கதைனு சொல்லமாட்டேன். ஆனா, திரைக்கதைனு ஒண்ணு பரபரனு இருக்கணும் இல்லையா, அது அப்படியே இருக்கும். அடுத்தது என்னனு ஆர்வமா  கண் இமைக்காம எதிர்பார்க்கற மாதிரி இருக்கும்.

மக்கள் என்கிட்ட எதிர்பார்க்கிற டான்ஸ், ஆக்‌ஷன் நிறைவா வந்திருக்கு. கதை நடக்கிறது எல்லாம் சிட்டிதான். ஆனா, மறக்க முடியாத ஒரு மெசேஜ்  இருக்கு. தம்பி ராமய்யா, ஜான் விஜய், நளினி, ரோபோ சங்கர், கோட்டா சீனிவாசராவ்னு படத்தில் நிறைய நட்சத்திரக் கூட்டம். ஏதோ ஒரு நல்ல  குடும்பத்திற்குள் வந்து பேசிட்டுப் போற மாதிரி இருக்கும்!’’‘‘அழகழகா ரெண்டு க்யூட் பொண்ணுங்களைக் கொண்டு வந்துட்டீங்களே..?’’

‘‘கண்ணு வச்சிட்டீங்களா? சரி, சரி, நீங்கல்லாம் அப்படி கண்ணு வச்சாதானே நல்லது. அமண்டான்னு ஒரு பொண்ணு. விளம்பரங்களில் முதல்  வரிசையில் இருக்கிற பொண்ணு. லண்டனில் வளர்ந்தவங்க. ஆனால், அப்படியே அவங்களை தமிழ்ப் பொண்ணு ரேஞ்சில் கொண்டு வந்துட்டோம்.  இப்பப் பார்த்தா அவங்களை லண்டன் பொண்ணுன்னா யாரும் நம்பத் தயாரா இல்லை. அப்படி ஒரு மாற்றம்.

ஆனால், இங்கே எல்லோருக்கும் ஆச்சரியம்... நர்கீஸ் ஃபக்ரி ஒரு பாட்டுக்கு ஆட வந்ததுதான். இந்தியில் ஒவ்வொரு நாளும் அவங்க கால்ஷீட் கிடைக்க  பெரும்பாடா இருக்கும். பரபரப்பான ஹீரோயின். அப்பா கேட்டதால், மறுக்க முடியாமல் அருமையா ஆறு நாட்கள் வந்து ஆட்டம் போட்டாங்க.  ‘உங்களுக்காக பிரசாந்த்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. அவ்வளவு நறுவிசான ஆட்டம். சும்மா அள்ளும்னு சொல்றதெல்லாம் சாதாரண  வார்த்தைதான். அவங்க உடம்பை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வச்சிருக்காங்கனு அவங்க ஆட்டத்தில் அப்படியே புரியும்.

அதை விடுங்க... ஜப்பானில் 40 டான்ஸர்களோடு போய் பாடல் எடுத்தோம். செலவுக்கு பயந்து எப்பவும் அங்கே ஏழெட்டு பேரோட சிக்கனமாதான்  போவாங்க. ஆனா, நாங்க அப்படியே டூரிஸ்ட் மாதிரி போயிட்டு வந்தோம். ஷாஜிகுமார் கேமராவில் ஃப்ரேம் ஒவ்வொண்ணும் அவ்வளவு புதுசா  இருக்கு!‘நாம் நினைக்கிறதை மக்களுக்குக் கடத்திட்டாலே போதும்’னு நான் நினைப்பேன்.

ஆனா, மனதில் இருந்த காட்சிக்கும், அது காட்சி வடிவமாவதற்கும் நடுவில் ஒரு கெமிஸ்டரி இருக்கு இல்லையா? அதுதான் இதில் கொஞ்சமும்  பிசகாமல் அழகா வந்திருக்கு. மக்கள் பார்த்துட்டு சொல்ற வரைக்கும் நமக்கு திருப்தியே வரக்கூடாதுனு அப்பா சொல்வார். ஆனாலும் இப்படி  சொல்றதுக்கு என் நம்பிக்கைதான் காரணம். ஃபைனல் ரிசல்ட் நல்லா வந்திருப்பதுதான் அற்புதம்!’’

- நா.கதிர்வேலன்