வேலைக்கு வெல்கம்!



உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உன்னதத் தொடர்!

பயிற்சியில் எந்தக் குதிரை வேண்டுமானாலும் முன்னே வரலாம்... போட்டியில் வெல்லும் குதிரைக்குத்தான் கோப்பை. நாலு சுவர்களுக்குள் நன்றாகப் பாடுகிறவர்களும், டி.வி முன் ஆடி பிரபுதேவாவை தோற்கடிப்பவர்களும் நம்மில் நிறைய. ஆனால், கரகோஷங்கள் முழங்க கலர் விளக்குகள் கண்ணடிக்க மேடையில் ஏறி நிற்கும்போது சப்த நாடிகளும் சத்தம் காட்டாமல் ஒதுங்கும். ‘அய்யோ! இதுதான் லைஃப்... நல்லா பண்ணணுமே’ என்ற நினைப்பு போதும்... அதுவே நம்மை ‘நல்லா பண்ண’ விடாமல் பார்த்துக்கொள்ளும்.

இதைத்தான் பதற்றம் என்பார்கள். நம் ஊரில் பெரும்பாலானவர்களின் தோல்விக்குக் காரணம், திறமையின்மை அல்ல... அலட்சியம் அல்ல... இந்தப் பதற்றம்தான். இதை வெல்ல என்ன வழி?
இதுவரை நாம் பார்த்த இன்டர்வியூ டிப்ஸ் எல்லாவற்றையுமே கடைப்பிடிப்பது சுலபம். பதற்றத்தைக் கட்டுப்படுத்துவதுதான் கஷ்டத்திலும் கஷ்டம். சும்மா வழக்கம் போல, ‘எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். வாழ்வில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது...

இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை’ என்று இளைஞர்களுக்கு எக்குத்தப்பாய் வழி காட்ட முடியாது. பதற்றம் என்பது நாம் நினைப்பதை விட ஆழமானது. சுலபத்தில் கிள்ளி எறிய முடியாதபடி சிக்கலானது. கிட்டத்தட்ட புற்றுநோயைப் போல பதற்றம் ரொம்ப சீரியஸான மேட்டர்.

‘அட, ஏங்க இதுக்குப் போய் இப்படியொரு உதாரணம்..?’ என்கிறீர்களா. நிஜத்திலேயே கேன்சரும் பதற்றமும் ஒன்றுதான். மருத்துவ உலகம் எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்து விடுகிறது. ஆனால், கேன்சருக்கு எதிராக மட்டும் போராடிக் கஷ்டப்படு கிறதே... அதற்குக் காரணம் என்ன தெரியுமா? மற்ற நோய்களைப் போல வெளியிலிருந்து வரும் நோய்க்கிருமியால் உண்டாவதல்ல கேன்சர். நம் உடலின் திசுக்களே நமக்கெதிராகத் திரும்பி நிற்பதுதான் புற்றுநோயின் அடிப்படை.

பாக்டீரியாவைக் கொல்ல நம்மிடம் மருந்து இருக்கிறது... வைரஸைக் கட்டுப்படுத்தக் கூட மருந்து இருக்கிறது... ஆனால், நம் சொந்த செல்களே வில்லன்களாகி நிற்கும்போது அதைக் கொல்ல என்ன மருந்து? ‘தங்கப்பதக்கம்’ போன்ற இதே தர்மசங்கடம்தான் பதற்றத்தை வெல்வதிலும் வருகிறது. பதற்றம் என்பது நமக்கு முழுக்க முழுக்க வேண்டாத விருந்தாளி அல்ல. சொல்லப் போனால் அது பொறுப்புணர்ச்சியின் குறியீடு. ‘அடடா, இது அடுத்தவன் பொருள்...

ஜாக்கிரதையாய் வை’ என்ற பதைபதைப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டிய குணம். பொறுப்பே இல்லாத மனிதனுக்குத்தான் பதற்றம் இல்லாதிருக்கும். ‘அடடா, இது ரொம்ப முக்கியமான மேட்டர்’ என நமக்குள் அலாரம் அடிக்கும் பொறுப்புணர்ச்சிதான் கொஞ்சம் எல்லை மீறிப் போகும்போது பதற்றமாகி, நம் எதிர்காலத்தைப் பதம் பார்த்து விடுகிறது.

‘‘உடலிலும் சரி, மனதிலும் சரி... எந்த இயக்கமும் எல்லை மீறிப் போகக் கூடாது. அதே சமயம் தேவையை விடக் குறைந்துவிடவும் கூடாது. அந்த சமன்பாட்டை யோகா பயிற்சிகள் ஏற்படுத்துகின்றன. பதற்றத்தைக் குறைத்து நம்மை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் யோகாவால் முடியும்’’ என்கிறார் சன்யாசி கிருஷ்ணா யோகம்.

சென்னையில் இயங்கும் ‘சத்யம் யோகா ட்ரஸ்ட்’ அமைப்பைச் சேர்ந்த இவர், ஆன்மிகவாதியும் யோகா பயிற்றுனரும் ஆவார். சென்னை மேற்கு மாம்பலத்தில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் இந்த அமைப்பு, இளைஞர்களின் பதற்றம், வேலை டென்ஷன் போன்றவற்றைக் குறைக்கும் பயிற்சிகளை தங்கள் யோகா பாடத்திட்டத்திலேயே வைத்திருக்கிறது. இனி, சன்யாசி கிருஷ்ணா யோகம் அளிக்கும் டென்ஷன் குறைக்கும் யோகா பயிற்சி...

நாடி சுத்தி பிரணாயாமம்

‘‘ஆர்வத்தோடு யோகாவைக் கற்று அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகிறவர்கள் ஒரு வகை. அப்படி இருக்கச் சொல்லி நாம் எல்லோரையும் கட்டாயப்படுத்த முடியாது. ‘இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு இன்டர்வியூ. அங்கே அதிகம் பதற்றப்பட்டு நான் காரியத்தைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு என்னை நான் எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?’ என்கிறவர்களுக்கு எனது பரிந்துரை, சூரிய நமஸ்காரம். அதுவும் இம்மி பிசகாமல் முழுமையான சூரிய நமஸ்காரத்தைக் கற்றுக்கொண்டு செய்வதெல்லாம் முடியாத காரியம்.

 அதில் உள்ள 7 போஸ்சர்ஸ்... அதாவது, 7 நிலைகளை மட்டும் தினம் ஒன்றாய் செய்தால் போதும் (செய்முறை: பெட்டிச் செய்தியாக). நெற்றித்தசைகளில் தொடங்கி, கால் சுண்டுவிரல் வரை உடலின் அனைத்து பாகங்களும் இந்த 7 நிலை சூரிய நமஸ்காரம் மூலம் இயக்கப்படும். ஏன், உள்ளுறுப்புகளுக்குக் கூட இது உடற்பயிற்சி. மனதில் தன்னம்பிக்கையை விதைத்து, பதற்றத்தைக் குறைக்கும் ஆற்றல் சூரிய நமஸ்காரத்துக்கு உண்டு!’’

நாடி சுத்தி பிராணாயாமம்

‘‘சரி, ‘ஒரு வாரம் கஷ்டப்பட்டு சூரிய நமஸ்காரம் செய்யவெல்லாம் நேரமில்லை. எனக்கு நாளைக்கே இன்டர்வியூ... நான் என்ன செய்வது?’ என்கிற இளைஞர்களுக்கு மூச்சுப் பயிற்சியை பரிந்துரைக்கலாம். யோகாவில் இதை நாடி சுத்தி பிராணாயாமம் என்பார்கள். நமது மூச்சுக்கும் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறது யோக சாஸ்திரம். சாதாரணமாக நமது நாசித் துவாரங்கள் இரண்டிலும் ஒரே மாதிரியாகக் காற்று போய்வராது.

ஏதாவது ஒரு பக்க நாசியில் அதிக அளவில் காற்று போய் வருவதையும் இன்னொரு நாசி சும்மா ஒப்புக்கு கொஞ்சம் காற்றை மட்டும் உள்ளிழுப்பதையும் நீங்களே சோதித்து அறியலாம். அந்த நேரத்தில் அந்த நாசிதான் வலிமை பெற்றிருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலை நிரந்தரமல்ல... அடுத்த ஒன்றரை மணிநேரத்திலேயே மூச்சுப் போக்குவரத்து மறு நாசிக்கு மாறிவிடும்.

அறிவியல் ரீதியாகவே நமது மூளையும் சரி, உடலும் சரி... இடது - வலது எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. எந்த நாசியில் அதிகக் காற்றுப் போக்குவரத்து நடக்கிறது என்பதை வைத்து அந்நேரம் நம் உடலில் எந்த பாகம் வலிமை பெற்றிருக்கிறது என்பதை அறியலாம். உதாரணத்துக்கு வலது நாசியில் அதிகக் காற்றுப் போக்குவரத்து இருந்தால், அச்சமயம் நமது வலது மூளை வலிமை பெற்றிருக்கிறது என்று அர்த்தம். அப்போது நமக்கு கற்பனா சக்தி அதிகம் இருக்குமே தவிர, ஒரு கணக்கு கொடுத்தால் போடத் தெரியாது.

அல்லது அதில் கேர்லஸ் மிஸ்டேக் நிறைய செய்வோம். இந்த மாதிரியான மனநிலை மாற்றங்களை சமன் செய்து ஒரே சீராக்கும் வேலையைத்தான் பிராணாயாமம் செய்கிறது. இதற்காக இலக்கணப்படி ஆசனம் போட்டு அமர்ந்துதான் செய்ய வேண்டும் என்று நாம் கட்டளை இட வேண்டாம். அவரவருக்கு எப்படி வசதியோ அப்படி அமரலாம். இடது கையை சின்முத்திரையோடு இடது தொடையில் வைத்தபடி, வலது கரத்தில் பிராண முத்திரையைக் கொண்டு வரவேண்டும்.

பிராண முத்திரையைப் பொறுத்தவரை உங்கள் கட்டை விரலால் வலது நாசியை மூட முடியும். அதே போல மோதிர விரலால் இடது நாசியை மூட முடியும். மூச்சை நீங்கள் இயல்பாக எப்போது உள்ளிழுக்கிறீர்கள் என்று பாருங்கள்...

சரியாக அந்த நேரத்தில் இடது நாசியை மூடிக் கொண்டுவிடுங்கள். வலது நாசி வழியாக உள்ளே சென்ற மூச்சுக் காற்று இயல்பாக எப்போது வெளியேறுகிறதோ அப்போது இடது நாசியைத் திறந்துவிட்டு வலது நாசியை மூடிவிடுங்கள். இதுதான் நாடி சுத்தி பிராணாயாமம். நம் உடலில் வலது நாடியையும் இடது நாடியையும் சமநிலையில் வைத்து பதற்றத்தையும் ஆக்ரோஷத்தையும் இது குறைக்கும்.’’

சுவாச விழிப்புணர்வு


‘ஒரு நாள் முன்பே உட்கார்ந்து பிராணாயாமம் செய்வது கூட என்னால் முடியாது. இதோ இன்டர்வியூவில் அழைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன். இருப்பது 10, 15 நிமிடங்கள்தான். இதற்குள் பதற்றத்தைக் குறைத்துக்கொள்ள என்ன வழி?’ எனக் கேட்பவர்களுக்கு, யோகாவை விட்டு சுவாச விழிப்புணர்வு என்ற பயிற்சியைக் கற்றுக் கொடுக்கலாம். இது ரொம் பவும் எளிது. எந்தச் சேரிலும் அமர்ந்து அடுத்தவருக்குக் கூடத் தெரியாமல் செய்யலாம். நமது சுவாசத்தை கவனித்துக் கொண்டிருப்பது...

அதாவது, எப்போது நாம் மூச்சை உள்ளிழுக்கிறோம், எவ்வளவு இழுக்கிறோம், எப்போது வெளிவிடுகிறோம் என்பதை உற்று கவனிப்பது. மூச்சை இழுக்கும் போது பிரீத் இன் என்றும் வெளி விடும் போது பிரீத் அவுட் என்றும் மனதுக்குள் சொல் வதும் நன்று. பிரீத் அவேர்னஸ் எனப்படும் இந்த சுவாச விழிப்புணர்வுப் பயிற்சி இன்ஸ்டன்ட்டாக நம் டென்ஷனைக் குறைத்து துல்லியமாக செயல்பட வைக்கும்!’’

இத்தனை இதழ்களாக இன்டர்வியூக்களை வெற்றிகரமாய் எதிர்கொள்ளும் ஸ்மார்ட் வழிகளைப் பார்த்தோம். உலகம் வெற்றியா, தோல்வியா என்று மட்டும்தான் கேட்கும். அந்த வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தேடுவார்கள். இந்தத் தொடரில் நாம் அலசியது முழுக்க அந்தக் காரணங்களைத்தான். வெற்றிக்குக் காரணமான விஷயங்களைக் கடைப் பிடிப்பதும்...

 தோல்விக்குக் காரணமான அம்சங்களை தலை சுற்றித் தூக்கி எறிவதும்தான் நமது நோக்கம். அதை வெற்றிகரமாகச் செய்துவிட்டாலே நாம் வெற்றியாளர்கள்தான். அனைவருமே வெற்றியாளர்களாய் கை குலுக்கிப் பிரிவோம். 

கோகுலவாச நவநீதன்