சிசாட் போராட்டம்... சிக்கலில் சிவில் சர்வீஸ்?



சிசாட்... நாடாளுமன்றத்தின் இரு அவையினையும் முடங்கச் செய்திருக்கும் வார்த்தை. சிவில் சர்வீஸ் தேர்வில் இருக்கும் சிசாட் 2 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வட இந்திய மாணவர்களும், அந்த மாநில எம்.பிக்களும் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். இன்னொரு புறம் மற்ற மாநில எம்.பிக்கள் ‘அந்தந்த மாநில மொழிகளில் தேர்வை நடத்த வேண்டும்’ எனும் கோரிக்கையை முன்மொழிகின்றனர்.

என்னதான் பிரச்னை?

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல்நிலைத் தேர்வை, ‘சிவில் சர்வீஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்’ என்கிறார்கள். சுருக்கமாக சிசாட் (CSAT). இதில், சிசாட் 1, சிசாட் 2 என இரண்டு தாள்கள். சிசாட் 1 முழுவதும் பொது அறிவு சம்பந்தமானவை. சிசாட் 2ல் ஆப்டிடியூட் எனப்படும் திறனறி கேள்விகளும், ஆங்கிலப் புலமையைச் சோதிக்கும் பகுதிகளும் வருகின்றன.

‘இந்த சிசாட் 2 தேர்வை ஆங்கில வழியில் படித்தவர்களாலும், எஞ்சினியரிங் போன்ற தொழிற்கல்வி முடித்த மாணவர்களாலும் மட்டுமே எழுத முடியும்’ என்பது போராட்ட மாணவர்களின் வாதம்.

 தாய்மொழியில் படித்தவர்களால் இதை எளிதாக எழுத முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். பல்வேறு எதிர்ப்புகளால், ‘ஆங்கிலப் புலமையை சோதிக்கும் 8 கேள்விகளுக்கான மதிப்பெண்கள் மட்டும் தகுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது’ எனவும், ‘2011ல் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் 2015ல் வாய்ப்பு வழங்கப்படும்’ எனவும் அறிவித்தது மத்திய அரசு. ஆனால், மாணவர்கள் சிசாட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கா ‘சிசாட் 2’ கஷ்டமானது? தமிழிலும் கேள்வித்தாள் இருந்தால் என்ன நன்மை? சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் சிலரிடம் பேசினோம்...

‘‘கிராமப்புற மாணவர்களுக்கு இந்த சிசாட் 2 தேர்வு உண்மையிலேயே ரொம்ப கஷ்டம்தான் சார். இங்கிலீஷ்ல ஒரு பத்தி கொடுத்து அதை வாசிச்சு பதிலளிக்கும் பகுதி இதில் இருக்கு. அதை வாசிச்சு முடிக்கிறதுக்குள்ள டைம் முடிஞ்சிரும். இதனால, ஆங்கிலப்புலமை இருக்கிறவங்க ஈஸியா மார்க் வாங்கிடுவாங்க. கடந்த ரெண்டு வருஷத்துல ஐ.ஐ.டி, எஞ்சினியரிங் முடிச்சவங்கதான் அதிகம் ஐ.ஏ.எஸ். ஆகியிருக்காங்க’’ என வருத்தத்தோடு பேசுகிறார் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் ஒரு மாணவர். 

‘‘இதில் கேட்கிற திறனறி கேள்விகளெல்லாம் ஐஐடி, ஐஐஎம் தேர்வுக்கானது மாதிரிதாங்க இருக்கு. வட இந்தியாவில் பெரும்பாலும் ஆர்ட்ஸ் கல்லூரிகள்ல படிச்சவங்கதான் இந்தத் தேர்வுகளை எழுதறாங்க. அவங்களுக்கு அதிக சிரமம். முதல்நிலையிலேயே அவுட்னா அப்புறம் எங்கே மெயின் தேர்வுக்கு போறது? ஆனாலும், இந்தத் தேர்வில் ஒரு பகுதியில வர்ற 8 கேள்விகள் மட்டும்தான் முழுக்க முழுக்க ஆங்கிலத்துல கேட்கப்படுது.

மற்ற பகுதிகள் ஆங்கிலம் மற்றும் இந்தின்னு இரண்டு மொழியிலயும் கொடுத்திருப்பாங்க. இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவங்களுக்குதான் இது ரொம்ப கஷ்டம். அதனால, கேள்வித்தாள் அவங்கவங்க மொழியில இருந்தா என்னை மாதிரி தாய்மொழி வழியில் படிச்ச நிறைய மாணவர்களால புரிஞ்சு தேர்வெழுத முடியும்’’ என்கிறார் சிவில் சர்வீஸ் மாணவரான குமார்.

இருந்தும், இந்த ‘ஆப்டிடியூட்’ தேர்வெல்லாம் மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் வரத்தானே செய்கிறது? ‘‘அடடா, அதுவும் இதுவும் ஒண்ணில்ல சார். சிவில் சர்வீஸ் வினாத்தாள் மற்ற போட்டித் தேர்வுகளை விட தரமாகவும் கடினமாகவும் இருக்கும். ஆனால், நிர்வாகத் திறன் சார்ந்த பணித்தேர்வுக்கு இவ்வளவு ஆப்டிடியூட் தேவையும் இல்லை’’ என்கிறார்கள் ஐ.ஏ.எஸ் பயிற்சி தரும் ஆசிரியர்கள் சிலர்.

சென்னையிலுள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர், இது பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ‘‘இந்த ‘சிசாட்’டில் முதல் தாள், இரண்டாம் தாள் சேர்த்து மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுது. இதுல தோராயமா 210 எடுத்தா பாஸாக முடியும். இந்த சிசாட் 2ல் நகர மாணவர்கள் சாதாரணமா 180 மார்க் வரை வாங்கிருவாங்க.

 முதல்தாளான பொது அறிவுக்கு மனோரமா இயர்புக் படிச்சாலே போதும். 30 மார்க் எடுத்துரலாம். ஆனா, கிராமப்புற மாணவர்கள் பொது அறிவுல 80 மார்க் வாங்கினாலும் ஆப்டிடியூட்ல 120 எடுக்கவே சிரமப்படுவாங்க. சராசரியான 210 மார்க் வராததால, முதல்நிலையிலேயே கிராமப்புற மாணவர்கள் வடிகட்டப்படுறாங்க. இதுதான் பிரச்னை’’ என்றவர் மேலும் சில மைனஸ்களைப் பட்டியலிட்டார்...

‘‘அதே மாதிரி ஆங்கிலம், இந்தி மொழிகள்ல மட்டும்தான் தேர்வு என்பதிலேயே இங்கே சமத்துவம் அடிபட்டுருது. இந்தி பேசாத மாநிலங்கள்ல மாணவர்கள், அவங்க தாய்மொழியிலயே கல்வி கற்கிற சூழல் இங்க இருக்கு. அப்படிப்பட்ட ஒரு நாட்டுல இருமொழி மட்டும் என்பது நியாயமே இல்ல. ஆங்கிலத்துல மட்டும்தான் ஆப்டிடியூட் டெஸ்ட் பண்ண முடியும்னு யார் சொன்னது? எல்லா மொழியிலயும் ஆப்டிடியூட் டெஸ்ட் நடத்த முடியும்’’ என்றவரிடம், ‘‘இதனால், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தரம் குறைந்துவிடாதா?’’ எனக் கேட்டோம்.

‘‘குறைந்தபட்சம் ஆப்டிடியூட் தேவை என்பதையும் நான் மறுக்கல. இதுக்கு ஒரே தீர்வு, சிசாட் 2 தேர்வுல நூறு மார்க் கட்டாயம் எடுக்கணும்னு அறிவிக்கலாம். ஆனா, அதனை ஒரு தகுதியா மட்டும் வச்சுக்கிட்டு, சிசாட் 1 தேர்வை வைத்து ரேங்க் போடணும். அப்பதான் எல்லா மாணவர்களாலும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத முடியும். அந்தந்த மாநில மொழிகள்ல கேள்விகள் கேட்கப்படும்போது தரமான மாணவர்களை தேர்ந்தெடுக்கவும் முடியும்’’ என்றார் அவர் நிறைவாக! 

- பி.கே