பல்கலைப் பார்வை!



தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம்!

‘தமிழ் என்ற சொல்லில் உள்ள பெருமிதமும் தலைநிமிர்வும் தனித்துவமானது. நம் மொழியே ஒரு பல்கலைக்கழகம்தான்... அதற்கென ஒரு பல்கலைக்கழகமும் இருந்தால், இந்த உன்னத மொழியை உலக அரங்கில் நிறுத்தலாமே!’ - தமிழ் அறிஞர்களின் இந்த நெடுநாள் விருப்பத்தின் விளைவுதான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்! இந்தப் பல்கலைக்கழகத்தின் துவக்கம், உள்கட்டமைப்புகள் மற்றும் படிப்புகள் குறித்து விளக்குகிறார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை...

‘‘வடமொழிக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு இசைவையும் பெற்று அத்தகைய பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்மொழிக்கென ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று 1925ம் ஆண்டிலேயே பல தமிழ் அறிஞர்கள் விரும்பினார்கள்.

பெரும் முயற்சிக்குப் பிறகு, 1981ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் (அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று) இந்தப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. 1982ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் கிடைத்தது” என்கிறார் துணைவேந்தர்.

“தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் வாகையூர் என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள கட்டிடங்களின் அமைப்புவானத்திலிருந்து பார்க்கும்போது ‘தமிழ் நாடு’ என்ற எழுத்துக்கள் தோன்றும்படி அமைக்கப்பட்டு வருகின்றன’’ என்கிறார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேஷ்ராம்.

உள்கட்டமைப்பு

பல்கலைக்கழகம் மொத்தம் 800 ஏக்கர் நிலப்பரப்பில் தஞ்சைக்கு மேற்கே திருச்சி சாலையில் (வல்லம் சாலையிலிருந்து சிறிது தொலைவில்) அமைந்துள்ளது. அறிவியல் வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதித் திட்டம், தூயதமிழ் சொல்லாக்க அகர முதலிகள் திட்டம் ஆகியனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம், மூலிகைத் தோட்டம், ஆயிரம் பேர் அமரும் வகையில் கரிகாலன் அரங்கம், ஜிம்னாசியம், உள் விளையாட்டு அரங்கம், மாணவர் விடுதி ஆகியனவும் இதற்குள் அமைந்துள்ளன. அறிவுலகமும் ஆராய்ச்சியுலகமும் பாராட்டிப் போற்றும் பல்வேறு பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.

நூலகம்

இங்குள்ள நூலகத்தில் மொத்தம் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள், பொது மக்கள் என எல்லோருக்கும் பயன்படும் வகையில் பல அரிய நூல்கள் உள்ளன. வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் இந்நூலகம் திறந்திருக்கும்.

செயல்பாடுகள்

இந்தப் பல்கலைக்கழகத்தில் 25 துறைகள் உள்ளன. அவை, 1. சிற்பத் துறை, 2. இசைத் துறை, 3. நாடகத் துறை, 4. ஓலைச்சுவடித் துறை, 5. அரிய கையெழுத்துச்சுவடித் துறை, 6. கல்வெட்டியல் துறை, 7. நீரகழாய்வு மையம், 8. அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை, 9. மொழிபெயர்ப்புத் துறை, 10. அகராதியியல் துறை, 11. சமூக அறிவியல் துறை, 12. அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, 13. இலக்கியத் துறை, 14. மொழியியல் துறை, 15. தத்துவ மையம், 16. பழங்குடி மக்கள் ஆய்வு மையம், 17. இந்திய மொழிகள் பள்ளி, 18. நாட்டுப்புறவியல் துறை, 19. சித்தமருத்துவத் துறை, 20. தொல்லறி வியல் துறை, 21. தொழில், நில அறிவியல் துறை, 22. கணிப்பொறியியல் துறை, 23. கட்டிடக்கலைத் துறை, 24. சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, 25. கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை.

மன்னார் வளைகுடாப் பகுதியில் கடலுக்கடியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கல் நங்கூரங்களை வெளிக்கொணர்ந்து ஆய்ந்த பெருமை இங்குள்ள நீரகழாய்வு மையத்தைச் சாரும். இப்படி ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு இன்றியமையா தமிழ்ப் பணியைச் செய்து வருகின்றன.

சீனா, ஜப்பான், போலந்து, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து தமிழார்வத்தோடு வந்த பல மாணவர்களுக்கு தமிழ் கற்கும் வாய்ப்பை இப்பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. சுமார் 500 நூல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய ஆட்சிப்பணி தேர்வுகளுக்காகத் தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

தனித்துவப் படிப்புகள்!

இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்புகள், சான்றிதழ் என இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் வெறும் தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களையே சார்ந்தில்லாமல், பயன்பாட்டு அடிப்படையில் இருப்பது சிறப்பு. உதாரணமாக, இளநிலை பட்டப் படிப்பாக தமிழ் இலக்கியம், மொழியியல் மட்டுமின்றி, ஆங்கிலம், ஙி.லி.மி.ஷி எனப்படும் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் போன்ற படிப்புகளும் வழங்கப்படுகின்றன. முதுநிலைப் படிப்புகளிலும் சமூகப் பணியியல், M.L.I.S., சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற படிப்புகள் உள்ளன.

ஓராண்டு கால பட்டயப் பிரிவில், சோதிடவியல், கோயில் அர்ச்சகர் பயிற்சி, சுய உதவிக் குழு மேலாண்மை, அனிமேஷன், Visual Communication, Journalism - TV Production, அக்குபங்சர் சிகிச்சை அறிவியல், பேச்சுக் கலை, மிருதங்கம், தவில் ஆகிய கருவி இசை, மரபு வழித் தமிழ் மருத்துவம் மற்றும் சுவடியியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

 இவற்றோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழிப் படிப்புகளும் உண்டு.6 மாத கால சான்றிதழ் படிப்புகளாக DTP எனப்படும் கணினி அச்சுக்கோப்பு, தமிழ்க் கணினித் தொழில்நுட்பம், அக்குபங்சர், கருவி இசை, சுய உதவிக்குழு மேலாண்மை, Animation மற்றும் Visual Communication ஆகிய முதுநிலைப் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

- எம்.நாகமணி