மொழிக்கு வளம் சேர்க்கும் www.tamilvu.org



படிக்கலாம் எழுதலாம் தகவல் அறியலாம்

தமிழின் பெருமையை உலகெங்கும் உரக்கச் சொல்லும் அரும்பணியைச் செய்து வருகிறது www.tamilvu.org  இணையதளம். வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும், தமிழைக் கற்றுக்கொள்ள விரும்பும் பிற நாட்டவர்களுக்கும் முழுமையான அறிவைப் புகட்டும் வகையில் தகவல்களைக் குவித்து வைத்துள்ளது இந்த இணையதளம்.

1999ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி தமிழக அரசால் நிறுவப்பெற்ற தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இணையதளம் இது. முன்பு ‘தமிழ் இணையப் பல்கலைக்கழ கம்’ என்று அழைக்கப்பட்டது. உலகின் 40 நாடுகளில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கும், தமிழியலில் ஈடுபாடு கொண்ட பிற நாட்டினருக்கும் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை பாடத்திட்டங்களாக வகுத்து வழங்குகிறது.

 இந்த இணையதளத்தில் தகவல்களைப் படிக்கலாம். இணைந்து படித்து பட்டமும் பெறலாம். மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை சான்றிதழ், பட்டம், பட்டயப் படிப்புகளைப் படிக்க முடியும். பி.ஏ. தமிழியல் படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் பட்டம் வழங்குகிறது.

மழலையர் கல்வியில், குழந்தைகள் பார்த்தும் கேட்டும் சுயமாக கற்றுக்கொள்ளும் விதமாக பாடல்கள், காட்சிகள், கதைகள் என அனிமேஷனில் அழகாக பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எழுத்துக்கள், உரையாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள் ஆகியவற்றையும் ஒளி, ஒலிக்காட்சிகள் வாயிலாக கற்றுக்கொள்ள முடியும். சான்றிதழ் படிப்புகள் பல நிலைகளில் வழங்கப்படுகின்றன. அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை, மேற்சான்றிதழ் நிலை ஆகிய நிலைகளில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் சேர முன் கல்வித்தகுதியோ, வயது வரம்போ தேவையில்லை. மேற்சான்றிதழ் நிலை முடித்தவர்கள் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேரலாம். இந்தப் படிப்புகளுக்கான இரு தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவும் ஒரு தேர்வை நேரடியாக தொடர்பு மையத்திலும் எழுத வேண்டும். இதற்கு உலகெங்கும் 68 தொடர்பு மையங்கள் உண்டு.

வெறும் பயிற்றுவிப்பு மட்டுமின்றி, ஆவணப்படுத்தும் பணியையும் மேற்கொள்கிறது இந்த இணையதளம். 2700 நூல்கள் அடங்கிய மின்நூலகம் ஒன்று இந்த இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அனைத்து நூல்களையும் இந்த இணையதளத்தில் நல்ல தரத்தில் வாசிக்கலாம். பி.டி.எப் மற்றும் யூனிகோடு ஃபார்மேட்டில் கிடைக்கிறது. ‘‘தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கு 4 முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து விடாமல் பண்பாட்டோடு தொடர்பு வைத்துக் கொள்ள உதவும் வகையில் பண்பாடு, கலை, விளையாட்டு, வாழ்க்கை முறைகள் சார்ந்து கல்விச் சாதனங்களை உருவாக்குகிறோம். இலக்கியம், இலக்கணம் என மொழி சார்ந்த எல்லா வகையான அம்சங்களையும் இதில் இணைத்திருக்கிறோம். குறிப்பாக பாடத்திட்டத்திற்கான அளவுகோல் ஏதுமின்றி செய்திகள் அனைத்தும் முழுமையாக இடம்பெற்றுள்ளன. 

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிக்கல்களில் ஒன்று, ‘ரெஃபரன்ஸ்’ புத்தகங்கள் கிடைக்காதது. அதை மனதில் கொண்டே மின் நூலகத்தை அமைத்திருக்கிறோம். நூல்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் நாட்டுடமை ஆக்கப்பட்ட எல்லா நூல்களும் இடம்பெற்றுள்ளன.

ஒரு ஆவணக் காப்பகத்தையும் உருவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பழமையான 400 கோயில்கள் பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புறக் கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. குழந்தை விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளையும் ஆவணமாக்கி பண்பாட்டு காட்சியகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

இதுதவிர தமிழ் மென்பொருட் களை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். ஒரு வரியை எழுதினால் அதன் இலக்கணத்தை எடுத்துரைக்கும் தகவல் தளமும் இடம் பெற்றிருக்கிறது. எந்திர மொழி மாற்றத்துக்கான மென்பொருளும் உருவாக்கியிருக்கிறோம். இதுவரை வெளிவந்த எல்லா அகராதிகளும் இதற்குள் இருக்கின்றன.

மேலும் தகவல்களை விரிவுபடுத்தவும், இணையத்தை மேம்படுத்தவும், உயர்கல்வி வகுப்புகளை ஏற்படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறோம்...’’ என்கிறார் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குனர் முனைவர் ப.அர.நக்கீரன்.

சங்க இலக்கியங்கள், மழலைப்பாடல்களை குறுந்தகடாக்கி இணையத்தில் விற்பனையும் செய்கிறார்கள். உ.வே.சா படித்த, பதிப்பித்த சுவடிகளுக்கான காட்சியரங்கு ஒன்றும் இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா மற்றும் வரலாற்றுத் தலங்கள், உலகெங்கும் உள்ள தமிழ்ப்பள்ளிகள், தமிழ் எழுத்துருக்களின் தொகுப்புகளும் உண்டு.

உலகெங்கும் இருந்து 14,500 மாணவர்கள் இந்த இணையத்தை உபயோகித்து தமிழ் படிக்கிறார்கள். தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டுக் கலை வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றுகிறது இந்த
இணையதளம்.

-வெ.நீலகண்டன்