அவநம்பிக்கையை தகர்த்தது



+2 தமிழ் முதல் தாளில் சென்டம் வாங்கும் வழிமுறைகள் பற்றி எளிமையாக விளக்கியிருந்தார் தமிழாசிரியை ஜெயராணி. தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெறமுடியாது என்ற அவநம்பிக்கையைத் தகர்த்து நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தன அவரின் ஆலோசனைகள்.  - எஸ்.சிவசங்கரி, நெல்லை.

விபத்தை உருவாக்கிய வாகனத்தை அடையாளம் காணும் ‘இ-கிராஷ் கார்டர்’ உபகரணத்தைக் கண்டறிந்த திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களின் பணி மகத்தானது. வாகனங்கள் அதிகரித்து, விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில்,
இக்கருவி பெரிதும் உபயோகமாக இருக்கும்.
- கே.வி.தனபாலன், கோவை.

‘செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர, அங்கே என்னென்ன வேலைகள் நடக்கின்றன என்பது தெரியாது. ‘குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி’ அந்நிறுவனத்தைப் பற்றி விரிவாக எழுதி விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. திருக்குறளை பஞ்சாபி, மணிப்புரி, உருது, அரபி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் பணி மகத்தானது.
- எல்.ஜான்சிராணி, சேலம்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு சுயதொழில் வழிகாட்டி வரும் ‘லேபர்நெட்’ நிறுவனத்தின் சேவை இன்னும் விரிவடைந்தால், வேலையற்ற இளைஞர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.
- பி.கே.ராஜகோபால், கரூர்.

வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி? என்பதைப் பற்றி ‘ஏ டு இஸட்’ தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். விண்ணப்பிக்கும் முறை, எதற்கெல்லாம் பயன்படும், இறங்குரிமைச் சான்றிதழ் என்றால் என்ன என்று சகல கேள்விகளுக்கும் பதில் சொன்னது கட்டுரை. பாராட்டுகள்.
- வீ.ரங்கநாதன், தேனி.

‘குங்குமச் சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி’யை வாங்கியதும் முதலில் பார்ப்பது ‘கேம்பஸ் நியூஸ்’ பகுதியைத்தான். இந்தியாவில் வெளியிடப்படும் ஒட்டுமொத்த கல்வி சார்ந்த செய்திகளையும் கேம்பஸ் நியூஸில் வாசித்து விட முடிகிறது.
- பி.ராதிகா செல்வன், புதுச்சேரி.

உயிர்த் தகவலியல் படிப்பு பற்றி முழுமையாக விளக்கியிருந்தார் முனைவர் உதயகுமார். கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி, நகர்ப்புற மாணவர்களே அறிந்திராத துறைகளை ஒவ்வொரு வாரமும் அறிமுகப்படுத்தி வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு, அத்துறையில் சாதித்த சாதனையாளர்கள் பற்றி முழுமையாக விளக்கும் விதம் அருமை.
 செந்தில்வடிவு,  உடையநாடு.