வேலை பெற்றுத்தரும் சில சான்றிதழ்கள்!



ஆதரவற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பலவகை சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை விதித் தளர்வுகள் உண்டு. இந்தச் சலுகைகளைப் பெற வேண்டுமெனில், உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றாக வேண்டும். அவற்றில், சில சான்றிதழ்களும் அதனைப் பெறும் வழிமுறைகளும் இங்கே...

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெரும்பாலும் இந்தச் சான்றிதழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வழங்கப்படுவதால், குளறுபடிகளுக்கு குறைவில்லை. இதனைத் தடுப்பதற்காகவே தீவிர விசாரணை நடத்தி வருவாய் கோட்டாட்சியர் நேரடியாக சான்றிதழ் வழங்குகிறார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட ஆதரவற்ற விதவைகளுக்கு சில விதிகளைத் தளர்த்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எந்தெந்த இடங்களில் சான்றிதழ் தேவை?

* அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற...
* அரசு வழங்கும் ஆதரவற்ற விதவைக்கான உதவித் தொகை பெற...

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஒரு வெள்ளைத்தாளில் மனு எழுதி, வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இத்துடன் கணவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் இரண்டையும் இணைக்க வேண்டும். வருட வருமானம் 48 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது தற்போதைய விதி. அதாவது, மாதம் நான்காயிரம் ரூபாய் வரை வருமானம் இருக்கலாம். நிலமோ, சொத்துகளோ இருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிறகு, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் ஆகியோரின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். நிறைவில், அவர்கள் அளிக்கும் அறிக்கையை வைத்தே கோட்டாட்சியர் சான்றிதழ் வழங்குவார்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

முப்பது நாட்களில் இந்தச் சான்றிதழ் கிடைத்து விடும் என வருவாய்த் துறையின் மக்கள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் மாவட்ட ஆட்சியரிடம்
முறையிடலாம்.

விதவை சான்றிதழ்

விதவை சான்றிதழுக்கும் ஆதரவற்ற விதவை சான்றிதழுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வேறுபாடு தெரியாத சிலர், ஆதரவற்ற விதவை சான்றிதழ் வாங்க வேண்டிய இடத்தில், வெறும் விதவைச் சான்றிதழ் வேண்டி தவறாக விண்ணப்பித்து விடுகிறார்கள். பிறகு, தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில் முன்னுரிமை இல்லையே எனப் புலம்புவதில் எந்தப் பயனுமில்லை.
தனக்கு எந்த வருமான ஆதரவும் இல்லை என்பதை மட்டும் அழுத்தமாகக் குறிக்கிறது ஆதரவற்ற விதவை சான்றிதழ்.

கணவனை இழந்திருந்தாலும் நிலம், சொந்த வீடு இருக்கிற பெண்கள் ஆதரவற்ற விதவை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இவர்களும் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்கு விதவை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. ஆக, இதில் எந்தச் சான்றிதழ் தங்களுக்குத் தேவை என்பதை கவனமாகப் பார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

ஒரு வெள்ளைத்தாளில் மனு எழுதி, தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இத்துடன் கணவரின் இறப்புச் சான்றிதழை இணைக்க வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பத்தில் பெயர், இருப்பிட முகவரி ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்து 15 நாட்களில் சான்றிதழ் கிடைத்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள். அதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம்.

‘ஆதரவற்ற பெண்’ சான்றிதழ்

கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு அரசு உதவித்தொகையும் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. இதற்கு, ‘ஆதரவற்ற பெண்’ என்கிற சான்றிதழ் அவசியமாகிறது. இதனைப் பெற ஒரு வெள்ளைத் தாளில் மனு எழுதி, முறையாக தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்தின் அருகிலுள்ள கடைகளில் கூட விற்கப்படுகின்றன. அதில் பெயர், இருப்பிட முகவரி, வயது ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோரின் விசாரணைக்குப் பிறகு தாசில்தாருக்கு மனு அனுப்பப்படும். நிறைவாக, தாசில்தார் கையொப்பமிட்டு இந்தச் சான்றிதழை வழங்குவார்.

மக்கள் சாசனத்தின்படி 15 நாட்களுக்குள் இந்தச் சான்றிதழ் கைக்கு வந்துவிடும். சான்றிதழ் வழங்குவதில் குறைபாடு இருப்பின், மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்யலாம். இந்தச் சான்றிதழை வைத்து அரசு தரும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

வேலையில்லா சான்றிதழ்

இறந்த அரசு ஊழியரின் வாரிசுகள் மட்டுமே இந்தச் சான்றிதழைப் பெறத் தகுதியுடையவர்கள். தந்தை அரசு ஊழியராக இருந்திருக்கும் பட்சத்தில், வேலை இன்றி தவிக்கும் அவரின் வாரிசு கருணை அடிப்படையில் அரசுப் பணியைப் பெற இந்தச் சான்றிதழ் உதவுகிறது. இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கு, ஒரு வெள்ளைத்தாளில் மனு எழுதி தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுவுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம், ‘வேலை பெறவில்லை’ என்பதற்கான சான்றிதழ் ஒன்றையும் பெற்று இணைக்க வேண்டும். தாசில்தாரின் விசாரணைக்குப் பிறகு, 15 நாட்களில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

மேற்கண்ட சான்றிதழ்கள் எதுவுமே குறித்த நேரத்துக்குள் வழங்கப்படவில்லை எனில்... மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை எனில்... தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அதிகாரியிடம் ஆர்.டி.ஐ மூலம், ‘ஏன் சான்றிதழ் தர மறுக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பலாம்.  சான்றிதழ்கள் தாமதிக்கப்பட்டால் ஆர்.டி.ஐ மூலம், ‘ஏன் சான்றிதழ் தர மறுக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பலாம்.

பேராச்சி கண்ணன்