சுலபமாக செய்யலாம் சுயதொழில்



சணல்  பொருட்களால்  சம்பாதிக்கலாம்

படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொண்டு காலத்தைக் கழிக்காமல், படிக்காமல் விட்டுவிட்டோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல், சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உழைப்பையும் முயற்சியையும் மூலதனமாக்க  முன்வந்தால் யாரும் தொழில்
முனைவோர் ஆகமுடியும். சுயதொழில் செய்வதற்கான வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சணல் பொருட்கள் தயாரிப்பு. சணல் மூலம் கோணிப் பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த காலம் போய், தற்போது பல்வேறு ஃபேன்சி பொருட்கள் சணலில் தயாராகின்றன.

‘‘சணல் பொருட்கள் சூழலுக்கு உகந்ததாகவும் கலை நயத்துடனும் இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சணல் பொருட்கள் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. எனவே, சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’’ என்கிறார் மத்திய அரசின் ‘நேஷனல் ஜூட் போர்டு’ நிறுவனத்தின் சதர்ன் ரீஜன் மார்க்கெட்டிங் ப்ரமோஷன் ஆபிஸர் ஐயப்பன்.

‘‘சணல் பொருட்கள் தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும் மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள இலவசமாக இடம் அளிக்கப்படுகிறது. தென்னை, வாழை நார் மூலமாக பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அந்தப் பொருட்களின் தரம் வேறு. சணல் பொருட்கள் தனித்துவம் வாய்ந்தவை. நீடித்து உழைக்கக்கூடிய திடத்தன்மையே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்தத் தொழிலைச் செய்யலாம். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களும், சணல் பொருட்கள் தயாரிப்பை கற்றுக்கொண்டு சொந்தமாக தொழில் செய்ய லாம். இதற்கு அடிப்படையாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது தையல் பயிற்சி மட்டும்தான்.

பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்ட மெஷின்கள் இருபதாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது.  இரண்டு, மூன்று மெஷின்களை வாங்கி வேலைக்கு இரண்டு ஆட்களை அமர்த்தி சணல் பொருட்களை  உற்பத்தி செய்து மார்க்கெட்டிங் செய்தால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். சணல் துணியைக் கொண்டு ஹேண்ட் பேக், தாம்பூலப் பை, காலேஜ் பேக், வாட்டர்பேக், லெட்டர் பேட், லஞ்ச் பேக், பர்ஸ், பைல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், சுருக்குப் பை, பென்சில் பவுச், கிட் பவுச், மொபைல் பவுச் என விதவிதமாகத் தயாரிக்க முடியும்.

சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. எப்படி சந்தைப்படுத்துவது என்று தயங்க வேண்டியதில்லை. வீட்டில் வைத்தே கூட தெரிந்தவர்கள் வட்டாரத்தில் விற்பனை செய்யலாம். தனியாக கடை போட்டும் விற்கலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில், புத்தகங்கள் எடுத்துச் செல்லும் பை, லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூலப் பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் பிரத்தியேக ஹேண்ட் பேக் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.

தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாட்களிலும் சணல் பொருட்கள் தயாரிக்கக் கற்றுக் கொள்ளலாம். மேலும் சணல் தொழிலில் தேர்ந்த பயிற்சி பெற, சென்னை அல்லது கோவையில் உள்ள ‘நேஷனல் ஜூட் போர்டு’ (National Jute Board)  அலுவலகத்தை அணுகலாம். இங்கு தேவையான பயிற்சிகளை வழங்கி வருகிறார்கள். இங்கு வழங்கப்படும் பயிற்சியின் சிறப்பு அம்சம், சணல் பொருட்கள் செய்ய மட்டும் கற்றுக்கொடுக்காமல், அதைத் தொழிலாகத் தொடங்க மூலப்பொருள் சணல் மற்றும் இதர உபகரணப்  பொருட்கள் எங்கு கிடைக்கும் என வழிகாட்டுவதும், எங்கு விற்பனை செய்யலாம் என்ற அனைத்து ஆலோசனைகளையும் தருவது தான்! இந்த அமைப்பினர், தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கிறார்கள்’’ என்று நம்பிக்கை தரும்விதமாகப்  பேசுகிறார் ஐயப்பன். ஆர்வமுள்ளவர்கள்
தொடர்பு கொள்ள: நேஷனல் ஜூட் போர்டு, 25, கோடம்பாக்கம் ஹை ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. தொலைபேசி: 044-2822 4967.

- எம்.நாகமணி