TNPSC GroupIV



பொது அறிவில் தேர்ச்சி பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - IV தேர்வு பொதுத் தமிழில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இப்போது, பொது அறிவுத் தேர்வில் வெற்றி பெறும் வழிமுறைகள் பற்றி விளக்குகிறார், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்ற எஸ்.வடிவேல்.

பொதுத் தமிழுக்கு தமிழை மட்டும் முழுமையாக பயிற்சி செய்தால் போதும். பொது அறிவு அப்படியல்ல. இதற்கு பல்வேறு பாடங்களைப் படிக்க வேண்டும். பாடங்களை முழுமையாக சேகரித்து கையில் வைத்துக்கொண்டே படிக்கத் தொடங்க வேண்டும்.

இதில், கீழ்க்கண்ட பாடப்பிரிவுகள் இடம் பெறுகின்றன.


* வரலாறு பிரிவில், சிந்து சமவெளி நாகரிகம், இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் சுதந்திரக்காலம்...

* இந்திய அரசியலமைப்பு பிரிவில், முகப்புரை முதல் உள்ளாட்சி அமைப்புகள், தேர்தல் ஆணையம் வரை.

* இந்திய பொருளாதாரம் பிரிவில் ஐந்தாண்டுத் திட்டம் முதல் வேளாண் வளர்ச்சியில் அறிவியலின் பயன்பாடு வரை.

* புவியியல் பிரிவில் முக்கிய இயற்கை வளம் முதல் இந்திய புவியியல் வரை.

* அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பகுதிகள்.

* சமீப நிகழ்வுகள் என்ற பகுதியில் மாநிலம், இந்தியா மற்றும் உலக நிகழ்வுகள் தொடர்பான செய்திகள்.

* அறிவுக்கூர்மை மற்றும் அறிவுத்திறன் பகுதியில் பல்வேறு எண்களின் வரிசை, அட்டவணை, தொடர் முதலியன...

* பொது அறிவு பிரிவில் இந்திய முதன்மைகள், மாநில, உலக முதன்மைகள், நூல்கள், விளையாட்டு முதலியன இடம்பெறும். இவை தவிர தமிழ்நாடு என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், புவியியல் நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன.

என்ன... கண்ணைக் கட்டுகிறதா...? சரி... எந்தப் பாடத்தில் எத்தனை கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பார்ப்போம்.

* அறிவுக்கூர்மை மற்றும் அறிவுத்திறன் பகுதியில் 25 கேள்விகள் கேட்கப்படும்.

* அறிவியல் பகுதியில் இயற்பியலில் 2 முதல் 3 கேள்விகள்... வேதியியலில் 3 முதல் 4 கேள்விகள்... தாவரவியலில் 2 கேள்விகள்... உயிரியலில் 5 முதல் 6 கேள்விகள்... ஆக 15 கேள்விகள் வரை கேட்கப்படும். உடற்செயலியல் பகுதியில் மட்டுமே 2 முதல் 3 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

* வரலாறு பகுதியில் முற்கால இந்திய வரலாறு பாடத்தில் சிந்து சமவெளி நாகரிகம், குப்த பேரரசு ஆகிய பாடங்களில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் 3 கேள்விகள் கேட்கப்படலாம்.

இடைக்கால இந்திய வரலாறில் 5 கேள்விகளும், நவீன இந்திய வரலாறில் 3 கேள்விகளும், இந்திய விடுதலைப் போராட்டம் பிரிவில் 4 கேள்விகளும் - ஆக, 14 முதல் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

* பொருளாதாரம் பிரிவில் 4 முதல் 7 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்பு பாடத்தில் 7 முதல் 9 கேள்விகளும், புவியியல் பாடத்தில் 6 முதல் 8 கேள்விகளும், சமீப நிகழ்வுகள் பகுதியில் 5 முதல் 6 கேள்விகளும் கேட்கப்படும். பொது அறிவு சார்ந்து  4 முதல் 5 கேள்விகளும், தமிழ்நாடு தொடர்பாக 5 முதல் 10 கேள்விகளும் கேட்கப்படலாம். மொத்தம் 100 கேள்விகள். 150 மதிப்பெண்கள்.

சரி... பாடங்களை எப்படி படிப்பது...?


* அறிவுக்கூர்மை மற்றும் அறிவுத்திறன் பகுதிக்கு தினமும் 2 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். கேள்வி கேட்கப்படும் முறையை அறிந்து படிப்பது நல்லது. tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இடதுபுறம் உள்ள மெனுவில் Examination என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் previous year Question Paper என்ற பகுதி வரும். அதில் கடந்த 10 தேர்வுகளுக்கான வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.

* அறிவுக்கூர்மை மற்றும் அறிவுத்திறன் பாடத்தை சிலருக்குப் பிடிப்பதில்லை.  ஆனால் இந்தப் பகுதியிலும் எளிமையான கேள்விகள் கேட்கப்படும். பகடை, எண்களின் வரிசை, பிசிதி, லிசிவி,  தனிவட்டி, கூட்டுவட்டி போன்ற பாடங்கள் எளிமையானவை. 

* வரலாறு படிக்கும்போது இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக படிக்க வேண்டும். அப்படி படித்தால்தான் ஆண்டுகளும், நிகழ்வுகளும் மனதில் பதியும்.

* பொருளாதாரம் பிரிவில் ஐந்தாண்டுத்திட்டம், பட்ஜெட், நிதிக்குழு, அரசுநலத் திட்டங்கள், மத்திய, மாநில வரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, வங்கிகள், உலக நிறுவனங்கள், முக்கிய மாநாடுகள் போன்றவையே அதிகமாக கேட்கப்படும்.

* பொது அறிவு மற்றும் சமீப நிகழ்வுகள் பிரிவைப் பொறுத்தவரை மாநில தகவல்கள், தேசிய கீதம், கொடி, உலக முதன்மைகள், விருதுகள், நூல்கள், விளையாட்டு நிகழ்வுகள், முக்கிய மாநாடுகள் ஆகியவை இடம்பெறும்.    

பொது அறிவு தாளில் தேர்ச்சி பெற கூடுதலாக படிக்க வேண்டியவை

* சமச்சீர் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்கள்

* 11, 12ம் வகுப்புகளுக்கான பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் புத்தகங்கள்

* வெங்கடேசன் எழுதிய இந்திய வரலாறு நூல்

* ஆர்.எஸ்.அகர்வால் எழுதிய Mental  Ability நூல்

* லட்சுமிகாந்த் எழுதிய இந்திய அரசியலமைப்பு நூல்

* பொது அறிவு சார்ந்த ஏதேனும் ஒரு இயர் புக்

* அன்றாட செய்தித்தாள்கள்