இந்திய உணவுக் கழகத்தில் வேலை!



4,318 பேருக்கு வாய்ப்பு

இந்திய உணவுக் கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. என்று அழைக்கப்படுகிறது. இதில் 4,318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எஞ்சினியரிங் மற்றும் இதர பட்டப் படிப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு இதில் பணி வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த நிறுவனத் தில் ஜூனியர் எஞ்சினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடக்கு மண்டலத்தில் 1702 பணியிடங்களும் தெற்கு மண்டலத்தில் 1194 இடங்களும் கிழக்கு மண்டலத்தில் 473 இடங்களும் மேற்கு மண்டலத்தில் 779 இடங்களும் வட கிழக்கு மண்டலத்தில் 170 இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதில் வர்த்தகம், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஏராளமான பணிகள் உள்ளன.

கல்வித் தகுதி: சிவில் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் எஞ்சினியரிங் படித்தவர்கள் அந்தந்த பிரிவு ஜூனியர் எஞ்சினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதே பிரிவுகளில் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் ஓராண்டு பணி அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டென்ட் கிரேடு (இந்தி) பணிக்கு இந்தியை ஒரு பாடமாக எடுத்து பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழி பெயர்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.

டைப்பிஸ்ட் இந்தி பணிக்கு, பட்டப்படிப்புடன், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி அறிவும் அவசியம்.

அசிஸ்டென்ட் கிரேடு 3 (ஜெனரல்) பணிக்கு பட்டப்படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டென்ட் கிரேடு3 (அக்கவுன்ட்ஸ்) பணிக்கு வர்த்தக பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டென்ட் கிரேடு (டெக்னிக்கல்) பணிக்கு பி.எஸ்சி. அக்ரிகல்சர், தாவரவியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், பயோ கெமிஸ்ட்ரி,மைக்ரோபயாலஜி, ஃபுட் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டென்ட் கிரேடு 3 (டெப்போ) பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. ஊனமுற்றவர், முன்னாள் படைவீரர்களுக்கும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சில பணிகளுக்கு திறமைத் தேர்வு நடத்தப்படும்.

கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.350 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஒருவர் ஒரு மண்டலத்திற்கான காலியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். உபயோகத்தில் இருக்கும் இ-மெயில் முகவரி, தொடர்பு தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
17.3.2015

கூடுதல் விவரங்கள் அறிய:
www.fcijobsportal.com