துணைப் பாடம் இனி மாணவர் கையில்!



பரபரக்கின்றன பிளஸ் டூ தேர்வுகள். எதிர்காலப் படிப்பை முன்னிறுத்தி விறுவிறுப்பாகத் தேர்வெழுதி வருகிறார்கள் மாணவர்கள். இந்நேரத்தில், எஞ்சினியரிங் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் புதிய முறையைப் புகுத்த முடிவெடுத்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். இதுவரை கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த ‘சி.பி.சி.எஸ்’ (Choice Based Credit System) என்கிற முறையை அண்ணா பல்கலைக்கழகமும் பின்பற்ற இருக்கிறது. இதனால், வருகிற கல்வியாண்டு முதல் எஞ்சினியரிங் மாணவர்களும் தங்களுக்குப் பிடித்த விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இதோடு தேர்வு முறையிலும் சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம்.

அது என்ன சி.பி.சி.எஸ்?

சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் எனப்படும் இந்த முறை, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்று. அதாவது, ஒரு படிப்பின் அடிப்படை பாடங்களில் அல்லாமல் துணைப் பாடங்களில் தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளும் முறை இது. முன்பு கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்மை பாடங்கள், துணைப் பாடங்கள் என இரண்டு வகை பாடங்கள் இருந்தன. இதில், துணைப் பாடங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் அளிக்கும் பாடத்தை மட்டுமே படிக்கும் வண்ணம் இருக்கும். ஆனால், இப்படி ஆசிரியர் சார்ந்த கல்வி முறையில் மாணவர்களால் சிறந்து வரமுடியாது என்பதைக் கருத்தில் கொண்ட பல்கலைக்கழக மானியக் குழு, சி.பி.சி.எஸ் முறையை அறிமுகம் செய்தது.

இதில், இயற்பியல் படிக்கும் ஒரு மாணவர் துணைப் பாடத்தில் மொழி, சமூக அறிவியல் உள்ளிட்ட எந்த விருப்பப் பாடங் களையும் படிக்கலாம். அதே போல், ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவன், விரும்பினால் மற்றொரு பல்கலைக்கழகத்தில் இருக்கும் கோர்ஸ் ஒன்றையும் எடுத்து படிக்க முடியும். ஒவ்வொரு பாடத்திற்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அதற்கான கிரெடிட்டைக் கொடுத்துவிடும். இதனை மாணவர்கள், தாங்கள் படிக்கின்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அளித்தால் போதும். அது மொத்த மதிப்பெண்களோடு சேர்த்துக் கொள்ளப்படும். இதில் மற்றொரு அம்சம், மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் எடுத்துக்கொள்ளும் பயிற்சிக்கும் கிரெடிட் வழங்கப்பட்டு, மதிப்பெண் கொடுக்கப்படும்.

இந்த சி.பி.சி.எஸ் வழிமுறை அண்ணா பல்கலைக்கழகத்திலோ தமிழகத்தின் வேறு பொறியியல் கல்லூரிகளிலோ இதுவரை அறிமுகம் செய்யப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ‘‘உயர்கல்வியில் மாணவர்கள் விரும்பிய துணைப்பாடத்தை தேர்வு செய்யும் முறை யை பல்கலைக்கழகங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார். பிறகு, மத்திய அரசின் கல்வித் துறையும் இந்த முறையைக் கொண்டு வர வலியுறுத்தியது. இதனாலேயே, அண்ணா பல் கலைக்கழகம் சி.பி.சி.எஸ் முறையை பொறியியலில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள சுமார் 530 பொறியியல் கல்லூரி மாணவர்களும் தங்களுக்குப் பிடித்த விருப்பப் பாடம் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

‘‘வருகிற கல்வியாண்டு முதல் இந்த சி.பி.சி.எஸ். முறையைக் கொண்டு வரலாம் என்று இருக்கிறோம். ஒரு மாணவன், தான் விரும்பிய பாடத்தை துணைப் பாடங்களில் தேர்ந்தெடுக்க முடியும் என்பது ரொம்ப நல்ல விஷயம். ஆனால், இந்த முறையில் எங்களுக்கு சில பாதகங்களும் இருக்கின்றன!’’ எனத் துவங்கினார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரான பேராசிரியர் எஸ்.கணேசன்.

‘‘இந்த முறையில் எஞ்சினியரிங் மெக்கானிக்கல் படிக்கின்ற ஒரு மாணவன் துணைப் பாடத்தில் சட்ட மேலாண்மை படிக்க நினைத்தால் சட்டக் கல்லூரி சென்று படிக்கலாம். ஐ.ஐ.டியில் ஒரு துணைப் பாடத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் செய்யலாம். வெறும், பொறியியல் என்றில்லாமல் இசை, நடனம் எதையும் தேர்ந்தெடுப்பது சாதகமான அம்சம். அதே நேரத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஆயிரம் மாணவர்கள் துணைப் பாடத்திற்காக இங்கு வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரே விருப்பப் பாடத்தை நிறைய மாணவர்கள் முன்மொழிந்தால் எப்படி சமாளிப்பது? இப்படி சில கேள்விகள் இருக்கின்றன. இதற்காக ஒரு கமிட்டி அமைத்து ஆராய்ந்து வருகிறோம். அதன் பிறகு இந்தத் திட்டம் ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்’’ என்றவர், பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறையும் சில மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாகக் குறிப்பிட்டார்.

‘‘ஒவ்வொரு வருடமும் எஞ்சி னியரிங் படித்து வெளிவரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பலருக்கு வேலை கிடைப்பதில்லை என்கின்றனர். இன்னொருபுறம், பெரிய நிறுவனங்கள் திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க தயாராகவே இருக்கின்றன. எனவே, மாணவர்களின் திறனையும், கிரியேட்டிவிட்டியையும் அதிகரிக்க வேண்டியது கல்லூரிகளின் கடமையாகிறது. இதற்காகவே, மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் தேர்வு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறோம். கேள்வியை புரிந்து பதிலளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் அமையும்!’’ என்றார் அவர் நிறைவாக!

- பேராச்சி கண்ணன்