நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.



இந்த பிரபஞ்சம் பிரமாண்ட சக்திகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. அதன் ஒவ்வொரு படைப்பும் அர்த்தமுள்ளது. தேவையில்லாத எதையும் அது படைப்பதில்லை. மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தைகள். மனிதர்களில் வீணான மனிதர், வெற்றி மனிதர் என்றெல்லாம் வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டவர்கள்தான். திறமை எல்லோருக்கும் பொதுவானது. வாழும் சூழலும் வளரும் விதமுமே மனிதர்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன.

ஒரே மாதிரி குடும்பச்சூழலில் வளரும் இருவரில் ஒருவர் ஒரு துறையில் உச்சத்தில் இருக்கிறார். மற்றொருவர் கீழ்மட்டத்தில் இருக்கிறார். இதற்குக் காரணம் என்ன? மனோபாவம். வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் ஆகப்பெரிய காரணி, மனோபாவம்தான். எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்ப்பது, எல்லாவற்றிலும் இருக்கிற எதிர்மறைச் சூழ்நிலையை நினைத்துப் பதற்றப்படுவது இரண்டுமே மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. நேர்மறையாகப் பார்ப்பவர் வெகு எளிதாக எல்லாத் தடைகளையும் உடைத்து நொறுக்கி இலக்கைத் தொட்டுவிடுகிறார். தன் சுயபலத்தை அறியாமல் எதிர்மறையில் ஆழ்ந்து கிடப்பவர் தடைகளில் தேங்கிவிடுகிறார்.

எல்லாருக்குள்ளுமே ஆற்றல் இருக்கிறது. அதை உணர்ந்து தக்க சமயத்தில் பயன்படுத்துபவர் தான் ஜெயிக்கிறார். நம்பிக்கை, முன்னோக்கி நகர்த்துகிற முக்கிய துடுப்பு. கொலம்பஸ் தன் சாகசங்களைப் பற்றி எழுதும்போது, தான் கொண்டிருந்த நம்பிக்கைதான் நட்சத்திரங்களை பகுத்தாராய்ந்து புதியதொரு உலகத்தை கண்டுபிடிக்க உதவியதாகக் குறிப்பிடுகிறார். யாருமற்ற கடல்வெளி... சுற்றிலும் அச்சுறுத்தும் நீர்ச்சுழல்... நம்பிக்கை கொலம்பஸை வழிநடத்தியது. கல்வியின் நோக்கமே நம்பிக்கையை விதைப்பதுதான்.

தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இல்லாத அற்புத ஆற்றல் மனிதர்களுக்கு இருக்கிறது. தாவரமும் விலங்கும் சூழலுக்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கின்றன; மனிதன் தனக்கேற்ப சூழலை மாற்றுகிறான். ஆக, மனிதன் மிகப்பெரும் ஆக்கசக்தி. ‘‘நீ எதுவாக வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்’’ என்கிற விவேகானந்தரின் வார்த்தைகள் சத்தியமானவை. மனிதனின் ஆற்றல் அத்தகையது. நம் அப்துல் கலாம் ‘கனவு காணுங்கள்’ என்று அதை வேறு மொழிநடையில் சொன்னார்.

தொழில்நுட்பத்தின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லோருக்கும் எல்லாம் சாத்தியம் என்றான காலகட்டம் இது. யாருடைய பாதையையும் யாரும் மறிக்க முடியாது. எவருடைய பங்கையும் எவரும் பிடுங்க முடியாது. உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளும் மனத்தடையைத் தவிர, வெற்றி பெறுவதற்கு இந்த உலகத்தில் வேறெந்த தடையும் இல்லை.

முதலில் மனோபாவத்தை சரிசெய்து கொள்ளுங்கள். அதுதான் எல்லாவற்றுக்குமே அடிப்படை. மிகச் சிறிய சூத்திரம்... ‘யாராலும் முடியாதது என்னால் முடியும்... என்னால் முடியாதது யாராலும் முடியாது...’ இதை நம்பினால் நிச்சயம் நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்.  உயர்கல்வி அதிநுட்பமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. நம் முன்னே ஏராளமான துறைகள் விரிந்து கிடக்கின்றன. எல்லாத் துறைகளுமே ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெற்ற துறையாகவே இருக்கிறது. ஆனால், யாருக்கு எது பொருந்தும் என்பதைத் தேர்வு செய்வதில்தான் வெற்றி இருக்கிறது. ஆர்வமும், உள்ளார்ந்த இயல்பும்தான் துறையைத் தீர்மானிக்கும் காரணி. ஆர்வத்துக்கு முரணாக எதைச் செய்தாலும் அது பயனளிக்காது.
 
எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு மட்டுமே உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடாது. பரந்து விரிந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பொறியாளர், தன் துறைக்குள் மட்டுமே முடங்கினால் அதோடு தேங்கிவிடுவார். அடுத்து அடுத்தென்று தேட வேண்டும். இந்த உலகம் எந்த தொழில்நுட்பத்தின் திசையில் செல்கிறது என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அதைப்பற்றிய அடிப்படை அறிவை மட்டுமேனும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இது, எல்லாத் துறைகளுக்குமே பொருந்தும். பொது நிர்வாகத்துறைக்கும் இதுவே இலக்கணம். எல்லாத் துறைகளைப் பற்றியும் புரிதலும் அறிதலும் தேவை.

சமூகத்தின் அடிநிலை வரைக்கும் ஆராய்ந்து பார்க்கத்தக்க அறிவார்ந்த பார்வையும் அவசியம். அதனால்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., வங்கி உயர் பதவி தேர்வுகளுக்கு பொதுத்திறன்கள் சார்ந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது சமூகத்தையே மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது. அத்தகைய நிர்வாகத்தில் செயல்படுபவர்கள் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும். மன்னராட்சி காலங்களிலேயே உயர் பதவிகளுக்கு வருபவர்களுக்கு பல்வேறு மதிநுட்ப சோதனைகளை வைத்திருந்த நடைமுறைகளை படித்தறிய முடிகிறது.

அந்த வகையில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளை விரும்புபவர்களுக்கான அடிப்படைத் தகுதி, சகல துறைகளையும் பற்றிய அறிவு. இதை எளிதாக வளர்த்துக்கொள்ளலாம். வாசிப்பு, விவாதம், தொலைக்காட்சிகள் என இதற்கு ஏகப்பட்ட களங்கள் உண்டு. ஒரு செய்தியை அதே நோக்கில் புரிந்துகொள்ளாமல் அதன் பின்னணி களை அணுகி உள்ளீடாகப் புரிந்துகொள்வதுதான் மதிநுட்பம். அந்த தனித்த பார்வை சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மிகுந்த பயனளிக்கும். 

இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் அதிகாரங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் அலுவலர்கள் Executive  எனவும், சட்டம் இயற்றுபவர்கள் Legislature எனவும், நீதி பரிபாலன அமைப்பை Judiciary எனவும் பகுக்கிறார்கள். இதில், கொள்கை முடிவுகளை செயல்படுத்தும் அலுவலர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும்
அலுவலர்கள் ஆவர்.

சட்டம், ஒழுங்கு, பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஒரு மாவட்டம் சார்ந்த அனைத்துத்துறை செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பணியை ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் செயல்படுத்துவார்கள். இப்பணி சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் கவனத்தையும் பெற்ற பணியாகும். ஐ.ஏ.எஸ் உள்ளடங்கிய அதன் தகுதிக்கு இணையான பிற பணிகளையும் சேர்த்து சிவில் சர்வீஸ் பணி என்று சொல்வோம். இப்பணிகளுக்கான தேர்வை யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. சிவில் சர்வீஸ் பிரிவில் அடங்கியுள்ள துறைகள், அத்துறைகளின் பண்புகள், அதற்குத் தயாராகும் முறைகள் பற்றி அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம்...


ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் செயல்படுத்துவார்கள். இப்பணி சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் கவனத்தையும் பெற்ற பணியாகும்.