8ம் வகுப்பு படித்தவர்களும் பிசினஸ்மேன் ஆகலாம்!



மானியமும் பயிற்சியும் தரும் மாவட்ட தொழில் மையம்

மாவட்ட தொழில் மையம்... வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அடிப்படை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இது. தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் இந்த மையத்தை, தொழில் தொடங்க நினைக்கும் எவரும் அணுகலாம். சுயதொழில், கடனுதவி பற்றிய ஏ டூ இசட் தகவல்களை ஆலோசனைகளோடு நச்சென வழங்கிவிடும் இந்த மையம். படித்த இளைஞர்கள் திசைமாறிச் செல்லாமல் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வழி காட்டும் இம்மையம், அனைத்து மாவட்டத் தலைநகரிலும் அமைந்திருக்கிறது. இதன் முதன்மைப் பணியே சுயதொழிலை ஊக்குவிப்பதுதான். இளம் தொழில் முனைவோருக்காக இந்த மையம் வழங்கும் சில நிதியுதவி திட்டங்கள் இங்கே...

வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

வேலையற்ற இளைஞர்களுக்கு வங்கிக் கடனுதவி மூலம் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம் இது. உற்பத்தித் தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வர்த்தகம் செய்ய ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தகுதியானவராகக் கருதப்படுவார்.

பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓ.பி.சி மற்றும் பி.சி பிரிவினர் போன்றோருக்கு வயதில் 10 வருட தளர்வு உண்டு. அதற்கான சான்றிதழை அவர்கள் கட்டாயம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் வரை விண்ணப்பதாரர் பங்களிப்பு இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு 5 சதவீத பங்களிப்பு இருந்தால் போதும். 15 சதவீத நிதியை தமிழக அரசு மானியமாக வழங்கும். பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு வார கால பயிற்சியை தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனம் வழங்கும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம்:

சுருக்கமாக ‘நீட்ஸ்’ எனப்படும் இந்த நவீனத் திட்டத்தை 2013ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. படித்த முதல் தலைமுறையினர் வங்கிக் கடனுதவி மூலம் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் திட்டம் இது. இதில், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி விண்ணப்பதாரர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதுடையவராக இருத்தல் அவசியம். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர்கள், எம்.பி.சி மற்றும் பி.சி பிரிவினர் போன்றோருக்கு வயது வரம்பில் 45 வரை தளர்வு உண்டு. அதற்கான சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும். திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவீதத்தை தமிழக அரசு மானியமாக வழங்கும். இது 25 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

கிராம மற்றும் நகர இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் இது. இதில், 18 வயது நிரம்பிய எவரும் தொழில் முனைவோர் ஆகலாம். இந்தத் திட்டம் புதியதாக தொழில்முனைவோருக்கு மட்டுமே பொருந்தும். இதில் கல்வித் தகுதி, விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சம் ரூபாய் மேலும், சேவை மற்றும் பிசினஸ் பிரிவுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேலும் நிதியுதவி வழங்கப்படும். பொது பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதத்தை மட்டும் தாங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இதில் நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு 15 சதவீத நிதியை அரசு மானியமாக அளிக்கும். கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 25 சதவீதம் மானியம் கிடைக்கும். இதுவே சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டும் தங்கள் கையில் இருந்து போட்டால் போதும். இவர்களில் நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீதமும், கிராமத்தினருக்கு 35 சதவீதமும் அரசு மானியம் கிடைக்கும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் தொழில் மையத்தை அணுகி பயன் பெறலாம்.

- பேராச்சி கண்ணன்