வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்



கடந்த இதழில் SAT, GRE, GMAT தேர்வுகள் பற்றிப் பார்த்தோம்.  இந்த  இதழில் IELTS, TOEFL தேர்வுகள் பற்றிப் பார்க்கலாம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து,  நியூசிலாந்து, ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட ஆங்கிலத்தை பிரதான மொழியாகக் கொண்ட நாடுகளில் படிக்க மற்றும் பணிபுரியச் செல்லும் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத நாட்டைச் சேர்ந்தவர்கள் International English Language Testing System என்று சொல்லப்படும் IELTS தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டும்.

இத்தேர்வு ஆங்கில அறிவைச் சோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. பிரிட்டிஷ் கவுன்சில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த IDB, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் குழுமம் ஆகிய நிறுவனங்கள் இந்தத் தேர்வை ஒருங்கிணைக்கின்றன. இந்தத் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆங்கிலத்தை பிரதானமாகக் கொண்ட நாடுகளுக்குக் கல்வி மற்றும் பணிக்காகச் செல்வதற்கான விசா கிடைக்கும். இந்தத் தேர்வில் Academic Version, General Training System என இரண்டு பிரிவுகள் உண்டு.

கல்விக்காக செல்பவர்கள் Academic Version பிரிவையும், பணிக்காக செல்பவர்கள் General Training System தேர்வையும் எழுத வேண்டும். ஆங்கில உச்சரிப்பு, எழுத்து, கவனிக்கும் திறன் உள்ளிட்டவற்றை இத்தேர்வு சோதிக்கும். இத்தேர்வில் தகுதியான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது, படிக்கச் செல்லும் நாட்டில் பகுதி நேர வேலை செய்வதற்கும், படிப்பு முடிந்ததும் முழு நேரமாக வேலை தேடுவதற்கும் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

ஆங்கிலத்தைப் பேசும் மொழியாகக் கொண்ட நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களை கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. இத்தேர்வுக்கான பயிற்சிகள் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. ஆர்வமும், உழைப்பும் இருந்தால் இத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.இந்தத் தேர்வு Listening, Reading, Writing, Speaking ஆகிய நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது. Listening பிரிவைப் பொறுத்தவரை கேட்டு விடை சொல்லக்கூடிய வகையில் தேர்வு அமையும். இதற்கு 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும். Reading பிரிவில் 3 பத்திகள் கொடுக்கப்பட்டு, அது தொடர்பாக 13 அல்லது 14 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 40 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

Task I, Task II என இரண்டு பிரிவுகள் உண்டு. Task I-ல் படங்கள், வரைபடங்கள், சார்ட், கடிதம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும். Task II-வில் ஒரு விளக்கத்திற்கு Argument உருவாக்க வேண்டும். அல்லது ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

 Listening - 30 நிமிடங்கள், Reading- 60 நிமிடங்கள், Writing- 60 நிமிடங்கள், Speaking- 15 நிமிடங்கள். மொத்தம் 2.45 மணி நேரம். பயிற்சி மற்றும் புத்தகங்கள், தேர்வுக்கான கட்டணம் அனைத்தையும் சேர்த்து 10,000 ரூபாய்க்குள் செலவாகும். ஆண்டுக்கு 26 முறை இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

TOEFL தேர்வு

The Test Of English as a Foreign Language எனப்படும் TOEFL தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ஆங்கில சோதனைத் தேர்வாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா நாடுகளில் உள்ள வணிகத்துறை கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இந்தத் தேர்வை கவனத்தில் கொள்கின்றன. 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், பணியிடங்களிலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ETS எனப்படும் Educational Testing Service என்ற லாபநோக்கமற்ற கல்வி அமைப்பு இந்தத் தேர்வை நடத்துகிறது.

உலகில் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த தேர்வின் முடிவை அங்கீகரிக்கின்றன. இது ஒரு இணையத் வழித் தேர்வாகும். மாணவர் விரும்பினால் எழுத்துத் தேர்வாகவும் எழுதலாம். ஒவ்வொரு ஆண்டும் 50 தடவைக்கும் மேல் இத்தேர்வு நடத்தப்படுகிறது. வெளிநாடு செல்ல விரும்பாத, ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் எவரும் இந்தத் தேர்வை எழுதலாம். இத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து கோடிக்கணக்கான மாணவர்கள் எழுதுகிறார்கள். இத்தேர்வுக்கு ரூ.8000 வரை செலவாகலாம்.

Listening, Reading, Writing, Speaking ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டே இந்த தேர்வும் நடத்தப்படுகிறது. நான்கரை மணி நேரம் வழங்கப்படும். Reading பிரிவில் ஏறக்குறைய 700 வார்த்தைகள் உள்ள கல்வி சார்ந்த 4 அல்லது 6 பத்திகள் கொடுக்கப்பட்டிருக்கும். இப்பத்திகளின் அடிப்படையில், காரணம், விளைவு, ஒப்பிடல், வேறுபடுத்துதல், திறனாய்வு என்ற வகையில் வினாக்கள் கேட்கப்படும். அட்டவணை பூர்த்தி செய்தல், சிறு கட்டுரைகளை நிறைவு செய்தல் போன்ற பகுதிகளும் இதில் உண்டு.

Listening பிரிவில் 3 அல்லது 5 நிமிடம் படிப்பதற்கு ஏற்ப 6 பத்திகள் இருக்கும். இந்தப் பத்திகள் 2 மாணவர்கள், 4 கல்வி சார் விரிவுரைகளைப் பற்றி உரையாடுவதாக அமைந்திருக்கும். அந்த உரையாடலை ஒருமுறை கேட்டு குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கேட்டவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வதைச் சோதிப்பதாக இப்பகுதி அமையும். Speaking பிரிவில் பொதுவான தலைப்புகளைப் பற்றி கருத்துகள் கேட்கப்படும். உரையாற்றக்கூடிய திறன், தெளிவாகவும், திறமையாகவும் மற்றவர்க்குப் புரிய வைக்கும் திறமை ஆகியவற்றை சோதிப்பதாக இப்பகுதி அமையும்.

Writing பிரிவில் கல்வி சார்ந்த தலைப்பைப் பற்றி எழுதும் திறமை சோதிக்கப்படும்.ஆங்கிலத்தை பிரதானமாகக் கொண்ட நாடுகளில் படிக்கச் செல்ல விரும்புகிற மாணவர்கள் இந்த இரண்டு தேர்வுகளில் ஒன்றை கட்டாயமாக எழுத வேண்டும். எந்த படிப்புக்கு எந்த நாடு பெஸ்ட்?

அடுத்த இதழில் அலசுவோம்...