பி.இ. கவுன்சிலிங்குக்கு ஈஸி ரூட்!



பிளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. அடுத்து... அனைவரும் அதிகம் சேர விரும்புவது மெடிக்கல் மற்றும் என்சினியரிங் படிப்புகள்தான். இவை இரண்டுக்குமே கவுன்சிலிங்கைக் கடக்க வேண்டும். முக்கியமாக என்சினியரிங் கவுன்சிலிங் பற்றிப் புரியாமல் பெரும்பாலானவர்கள் தவிப்பதுண்டு. தற்போது அண்ணா பல்கலைக்கழகம்  என்சினியரிங் கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் அதற்கான வழிகாட்டுதல்கள் இங்கே...

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள்  பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.  அடுத்து, மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுப்பிரிவு மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் உள்பட) 45 சதவீதமும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மெரைன்  என்சினியரிங் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங் விதிமுறைகளின்படி பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் சராசரியாக குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இதற்கான உடல்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பில் தொழில் படிப்புகளான ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல் மெஷினிஸ்ட் அண்ட் அப்ளைய்ண்சஸ், எலெக்ட்ரானிக் எக்யூப்மென்ட்ஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவற்றை படித்தவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் அவர்களும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்களுக்குத் தனியாக கவுன்சிலிங் நடத்தப்படும்.

ஒதுக்கீடும் சான்றிதழ்களும்!

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் 12 இடங்கள் உள்பட மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டு மாணவர்கள், விளையாட்டில் பெற்றுள்ள சாதனைச் சான்றிதழ்களின் நகல்கள், தமிழ்நாட்டிற்காக விளையாடியவர்கள் அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் உரிய தொகைக்கான டிமாண்ட் டிராஃப்ட்டையும் இணைத்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.  அதே போல சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மற்ற பிரிவுகளின்கீழ் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 8,9,10,11,12 ஆகிய வகுப்புகளை தமிழ்நாட்டில் படித்திருந்தால் அந்த மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை. வெளி மாநிலத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழை தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியரிடம் பெற்று, அதன் நகலை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையம் உள்பட தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம், பொதுப் பிரிவினருக்கு ரூ.500. தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், சாதிச் சான்றிதழின் நகலை விண்ணப்பப் படிவம் கொடுக்கும் இடத்தில் அளித்து, ரூ.250 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் கோடிங் ஷீட்டும் கொடுக்கப்படும். கோடிங் ஷீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை விண்ணப்பப் படிவத்தில் உள்ள பதிவு எண் இடத்தில் தெளிவாக எழுதவும். பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை சரியாகவும் தெளிவாகவும் எழுதவும். மாணவர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி, அதில் அட்டஸ்டேஷன் பெற வேண்டும். பத்தாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள, பிறந்த தேதியைத்தான் எழுத வேண்டும்.

விண்ணப்பத்துடன் பூர்த்தி செய்த கோடிங் ஷீட்டையும் மறக்காமல் அனுப்ப வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்பர் சர்டிபிகேட் ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்குரிய சான்றிதழ்களின் நகல்கள், கேட்புக் காசோலை (டி.டி.)ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும். நேட்டிவிட்டி சான்றிதழ் நகல், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தைச் சேர்ந்தவர் எனில் அதற்கான உறுதிமொழிச் சான்றிதழ், இலங்கைத் தமிழ் அகதி என்றால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை அதற்குரிய விண்ணப்பதாரர்கள் இணைத்து அனுப்ப வேண்டும். கவுன்சிலிங்கின்போது மூலச் சான்றிதழ்களைப் கொண்டு செல்லவும்.

முக்கிய தேதிகள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவுத்தேர்வு மையத்தில் விண்ணப்பங்களைப் பெற கடைசித் தேதி: 29.5.2015. தமிழகத்தில் உள்ள மற்ற மையங்களில் விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசித் தேதி: 27.5.2015. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசித் தேதி: 29.5.2015 பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கை, ஜூன் மாதம் இறுதி வாரம் அல்லது ஜூலை 1ம் தேதி துவங்க, அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஜூலை 31க்குள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை முடிக்கவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளைத் துவங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு காண்க: www.annauniv.edu

கவுன்சிலிங்குக்கு ‘ஆன் - லைன்’ அழைப்பு ஆண்டுதோறும் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படும். தபால் சரிவரக் கிடைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலால், நகல் கேட்டு பல்கலைக்கழகத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகம். இதைத் தவிர்க்க இந்த ஆண்டு முதல்,  அழைப்புக் கடிதத்தை ‘ஆன் லைனில்’ அனுப்பப் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்.

- எம்.நாகமணி