ஏசி வகுப்பறை... ஸ்மார்ட் கிளாஸ்... சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...ஒரு ஹைடெக் அரசுப்பள்ளிபுதுமை

‘முகநூல் (Facebook) இளைஞர்களின் திறமையை வீணடிக்கிறது’ என்ற குரல் எல்லாத் திக்குகளிலும் ஒலிக்கிறது. ஆனால், ஒரு ஆக்கப்பூர்வமான இளைஞர் கையில் கிடைக்கும் எல்லாத் தொழில்நுட்பமும் சமூகத்தை மேம்படுத்தவே செய்யும் என்ற உண்மையை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் வசந்தன். முகநூல் மூலம் உலகெங்கும் இருக்கும் மக்களிடம் உதவிபெற்று ஒரு அரசுப்பள்ளியை சர்வதேச தரத்தோடு ஹைடெக் பள்ளியாக மாற்றி அமைத்திருக்கிறார் வசந்தன். விருத்தாசலம் அருகேயுள்ள கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. ஏ.சி. வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பரந்து விரிந்த நூலகம், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் இருப்பதைப் போல வகுப்பறைகள்... ஸ்பீக்கர், மைக்... என பள்ளியின் சூழல் ஈர்க்கிறது. கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 110 மாணவர்கள் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர் எண்ணிக்கை தேய்ந்துவரும் நிலையில், இப்பள்ளியில் ஆண்டுக்காண்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை தரணி. இவரோடு சேர்த்து 6 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அத்தனை பேரும் பள்ளியை மேம்படுத்தும் பணியில் ஒருகை கோர்த்து நிற்கிறார்கள். இவர்களின் உற்சாகத்தில் மக்களும் கலந்திருக்கிறார்கள்.

வசந்தன் 2008ல் இந்தப் பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். அக்காலக் கட்டத்தில்தான் இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ‘‘ரொம்பவும் எதிர்பார்ப்போட ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தவன் நான். இன்னைக்கு மிகப்பெரும் பொறுப்புல இருக்கிற நிறைய பேர் அரசுப்பள்ளியில படிச்சு மேம்பட்டவங்கதான். அந்த சூழலைத் திரும்பவும் கொண்டு வரணும். அரசுப்பள்ளின்னா விலகிப்போற மக்களை பள்ளியோட இணைக்கணும். பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பிறகு, பள்ளியோட சூழலையும் மாத்தணுன்னு நினைச்சோம். தனியார் பள்ளிகளை நாடிப்போற பெற்றோரை அரசுப்பள்ளிக்குக் கொண்டுவர ஒரே வழி, பள்ளியோட உள்கட்டமைப்பை மேம்படுத்துறதுதான்.

சமூக ஊடகங்கள் இன்னைக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கு. வெறும் பொழுதுபோக்கா மட்டுமில்லாம ஆக்கப்பூர்வமாவும் அதை உபயோகிக்க முடியும், பள்ளியோட வளர்ச்சிக்கு அதையே பயன்படுத்துனேன். முகநூல் மூலமா, இந்தியாவுலயும், வெளிநாட்டுலயும் இருக்கிற நண்பர்கள்கிட்ட உதவி கேட்டோம். நிறைய பேர் இந்தமாதிரி விஷயங்களுக்கு உதவ தயாரா இருந்தாங்க. முகம் தெரியாதவங்க கூட பெரிய தொகையைக் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. 6 லட்ச ரூபாய் செலவுல வகுப்பறைகள்ல ஏ.சி போட்டோம். ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பாடம் நடத்த புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக், டேபிள், சேர், தளவாடப் பொருட்கள்ன்னு பள்ளியோட முகத்தையே மாத்தினோம். நம்ம நோக்கத்தை மக்களுக்கு உணர்த்திட்டா அவங்களும் நம்ம கூட இணைஞ்சு நிற்க தயாராத்தான் இருக்காங்க. எங்க உத்வேகத்தைப் பாத்து, இந்த ஊரைச் சேர்ந்த குமார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சாதனம் வாங்கித் தந்தார்.மதுரை, திண்டுக்கல், கோவைன்னு பல ஊர்கள்ல இருந்து உதவிகள் குவிஞ்சுச்சு. மதுரை ரமேஷ்குமார், 20 சேர்கள் வாங்கித் தந்தார்... இந்த மாற்றம் என் ஒருவனால சாத்தியப்படலே. அத்தனை ஆசிரியர்களுக்கும் இதுல பங்கிருக்கு. பலநூறு மனிதர்கள் இதுக்காக உதவி செஞ்சிருக்காங்க...” என்று நெகிழ்கிறார் வசந்தன். ஒரு நல்ல ஆசிரியரின் பணி பள்ளியோடு முடிவடைவதில்லை. மாணவர்களின் வாழ்க்கை முழுவதும் அவரின் பங்களிப்பு தொடரும். வசந்தனும் அப்படித்தான் செயல்படுகிறார். குடிப்பழக்கத்திற்கு ஆளான மாணவர்களின் தந்தைகளை சந்தித்துப் பேசுகிறார். ‘அன்புள்ள அப்பாவுக்கு ஒரு கடிதம்’ என்ற தலைப்பில் கடிதம் எழுத பயிற்சியளித்து அந்தக் கடிதத்தை அவர்களின் தந்தைக்கு அனுப்புகிறார்.

பிள்ளையின் கடிதத்தைக் கண்டு பல தந்தைகள் மனம் பதைபதைத்து குடியை விட்டு விலகியிருக்கிறார்கள். ‘‘அப்பாக்கள்தான் பிள்ளைகளோட ரோல்மாடல். அவர்களோட ஒவ்வொரு செயலும் பிள்ளைகளின் மனநிலையை பாதிக்கும். அதனால அவங்க பொறுப்பா நடந்துக்கணும். அதை உணர்த்துற மாதிரி, பிள்ளைகளை லெட்டர் எழுத வைக்கிறேன். அது அப்பாக்களோட மனதை தொடுது...” என்று சிரிக்கிற வசந்தன் “அரசுப்பள்ளிகள்ல இல்லாத வசதிகள் இல்லை. ஆசிரியர்கள் மனசு வச்சா பள்ளியோட முகத்தை மாத்தலாம். பிள்ளைகளை ஈர்க்கலாம். இந்தப் பள்ளியை மாத்திட்டோம். இன்னும் நிறைய பள்ளிகளுக்கு இந்த மாதிரி தேவைகள் இருக்கு. அடுத்து, பின்தங்கியிருக்கிற ஒரு பள்ளிக்கு மாற்றல் வாங்கிட்டுப் போகணும். அந்தப் பள்ளியையும் இதே மாதிரி மாத்தணும்...” என்று கனவுகளை விரிக்கிறார். ஒரே ஒரு வசந்தன் ஒரு அரசுப் பள்ளியை உலகத் தரத்துக்கு மாற்றிவிட்டார். எல்லா அரசுப்பள்ளி ஆசிரியர்களும் வசந்தனாக மாறினால்...! அந்த மாற்றத்தைத்தான் நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது..!

எம்.நாகமணி
படங்கள்:  ரங்கப்பிள்ளை