ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?



விழிப்புணர்வுத் தொடர்

-‘ஆயிஷா’  இரா. நடராசன்

“நம் கல்வி உருவாக்க வேண்டியது, அஞ்சி ஒளியும் பிரஜையை அல்ல... வலிமை, சுயகட்டுப்பாடு, ஆளுமை, தலைமைப் பண்பு மிக்க இளைஞர்களை..!”
 - டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

சென்ற இதழில், ராகவன் என்னும் மாணவனின் வகுப்பறை செயல்பாடுகள், ஆசிரியை சரஸ்வதி அதை எதிர்கொண்ட விதம் பற்றிப் பார்த்தோம். எத்தகைய வன்முறை கலாசாரக் கூறுமின்றி, முழு வகுப்பின் ஒத்துழைப்போடும் எப்படி அவர் ராகவனைத் தன் வழிக்குக் கொண்டுவந்தார் என்பதையும் கண்டோம். அதன் அடிப்படைப் கூறுகளை நாம் ஆராய்ந்தால் நமக்கு நெறிப்படுத்தல் குறித்த சில புரிதல்கள் கிடைக்கும். தண்டித்தல் வேறு, நெறிப்படுத்தல் வேறு என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.



1. ஒரு குழந்தையை முழுமையாகக் கட்டுப்படுத்தி வைக்க தண்டித்தல் முறை முயற்சி செய்கிறது. நெறிப்படுத்தலோ அந்தக் குழந்தையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து, அக்குழந்தைச் சுய கட்டுப்பாடு கொண்டவராக மாற்ற உதவுகிறது. சில ஆசிரியர்கள், குழந்தைகள் தங்களாகவே அமைதியாக, எந்த பிரச்னையும் இன்றி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். “நான் ‘அமைதி’ என்று கட்டளையிட்டால் அமைதியாக இருக்க வேண்டும். அதன்பிறகும் அமைதியைக் கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் என் வகுப்பறைக்கே லாயக்கு அற்றவர்கள். இவர்களுக்கு எல்லாம் பள்ளியே தேவை கிடையாது” என்று நினைக்கிறார்கள்.

அது சரியா..? எந்தப் பிரச்னையும் இன்றி வந்து உட்கார்ந்திருப்பவர்கள், முதல்முறை சொல்லும்போதே அடிபணிபவர்கள், முதல்முறை விளக்கும்போதே பாடத்தைப் புரிந்துகொள்பவர்கள்... இவர்களுக்கானது மட்டுமே அல்ல வகுப்பறைகள். அவ்விதம் இல்லாதவர்கள்தான் கற்பித்தல் நடவடிக்கைக்கே அர்த்தம் உண்டாக்குபவர்கள். ‘நமது வகுப்பறைகளின் ரத்த ஓட்டமே குறும்புக்கார குழந்தைகள்தான்’ என்கிறார் கல்வியாளர் யஷ்பால்.

ராகவனின் ஒழுங்கீன செயலுக்குப்பின் இருந்த உண்மையான காரணத்தை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். தன் தாயைப் பிரிந்து சித்தி வீட்டிலிருந்து படிக்க அவன் விரும்பவில்லை. ஏதாவது பிரச்னை செய்து பள்ளியிலிருந்து வெளியேறி விடுவதே அவன் நோக்கம். இது நமக்கு மிகப்பெரிய உண்மையை விளக்குகிறது. இதேமாதிரி ஒரு சம்பவம், வேறொரு பள்ளியில் நடந்தபோது அங்கே அந்த மாணவனை வேறுமாதிரி நடத்தியிருந்தார்கள். அங்கிருந்த ஆசிரியரின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. அந்த ஆசிரியர் நிறைய அட்டைகளை வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களை அடிக்க மாட்டார், திட்டமாட்டார். தான் வைத்திருக்கும் அட்டையில் மார்க்கர் பேனாவில், ‘லேட் கம்மர்’, ‘லையர்’, ‘வகுப்பில் பேசுபவர்’, ‘பேனா திருடி’ என்றெல்லாம் எழுதி சம்பந்தப்பட்ட மாணவர்களின் கழுத்தில் மாட்டிவிடுவார். அன்றைய நாள் முழுதும் அவர்கள் அந்த அட்டையோடு இருக்க வேண்டும். இது உண்மையில் நடந்த சம்பவம். மனஉளைச்சல் தாங்காமல் மாணவர்களில் ஒருவர் தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பத்திரிகை செய்தி ஆனது. “நான் அந்த மாணவனை எந்தவிதத்திலும் (உடல் ரீதியில்) காயப்படுத்தவில்லையே” என்றார் அந்த ஆசிரியர். குழந்தை அனுபவித்த வலி மனதளவிலானது. அதனால் இதற்கு வலிமை அதிகம். இதற்கும் தண்டனை என்றுதான் பெயர். இது நெறிப்படுத்தல் அல்ல.

2. தண்டித்தல், தான்செய்த தவறை தொடர்ந்து குழந்தைகளை ஞாபகம் வைத்துக்கொண்டே இருக்குமாறு செய்துவிடுகிறது. நெறிப்படுத்தல் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதல்ல... மாற்று வழியை ஒரு குழந்தை தானே தேர்வு செய்து அந்த தவறை நொடியில் கடந்துவிட உதவுவதே ஆகும். குழந்தைகளை நெறிப்படுத்துவது என்பது, ‘குழந்தைகள் செய்யும் தவறை ஆசிரியர்கள் செய்யாதிருத்தல்’ என்கிற இடத்தில் தொடங்குகிறது. ‘எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது’ என கட்டளை இடுவதில் ஒன்றுமில்லை. ‘எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது’ என வாழ்ந்து வழிகாட்டுவதுதான் ஆசிரியர்களின் வழி. நல்ல ஆசிரியர் என்பவர் ஆசிரியராய் வாழ்பவர் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.



“இதெல்லாம் உன் நன்மைக்காகத்தான்...” - எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியரின் பாணி இது. “உனக்காகத்தான் சொல்றேன்” என தொடங்குவார். “எந்தக் குற்றம் இருந்தாலும் சரி, தண்டனைனு ஒன்று இருக்கணும்... இல்லைன்னா மனசு மறுபடி அலைபாயும்.” என்பார். ‘மாணவர் நன்மைக்காக அவர் தந்த தண்டனை, ‘இனி ஒருபோதும் லவ் பண்ண மாட்டேன்’ என 500 முறை எழுதுவது. இப்படி எழுதிவிட்டால், இனி எந்த மாணவிக்கும் அந்த மாணவன் லவ் லெட்டர் தரமாட்டான் என்பது அவரது கணிப்பு. அந்த மாணவன், தன் வயதுக்கு இப்படியான ஒரு செயலில் இறங்கியிருக்கக்கூடாது தான். ஆனால் இந்த 500 முறை எழுதும் வலி அவரது மனதிலும், உடம்பிலும் செயலிலும் உலகைக் குறித்த அவரது பார்வையிலும் எத்தகைய முரண் முறிவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இது நெறிப்படுத்தல் அல்ல.

3. தண்டித்தல் ஒரு குழந்தை தனது சுயமரியாதையை இழந்து கூனிக்குறுகிப் போக வைக்கிறது. நெறிப்படுத்தலோ நம்பிக்கை அளித்து அச்செயலின் பின்விளைவுகளை ஆராய்ந்து தவறைக் கைவிட உதவுகிறது. மனவலியும் சுயவெறுப்பும் கொண்ட ஒரு குழந்தை உடனடியாக அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து மனரீதியில் விலகிவிடுகிறது. அவரைப் பழிவாங்கத் துடிக்கிறது. அல்லது, அவரது நடவடிக்கைகள் அனைத்தையுமே வெறுக்கிறது. இதன்மூலம் மாணவரின் மனம் அந்த ஆசிரியரின் பாடத்தையும் வெறுத்து, தனக்குத்தானே பெரிய தீங்கை ஏற்படுத்திக்கொள்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியரின் தொடர் தண்டிப்பு முறைகளால் நடந்த பின்விளைவு ஞாபகத்திற்கு வருகிறது. அவர் வாங்கிய (லோனில்தான்) புதிய இருசக்கர வாகனத்தின் சீட் பிளேடு போடப்பட்டு, டயர் ஓட்டையாகி நின்றபோது அவர் கொதித்து விட்டார். முதல்நாள், கரும்பலகை பக்கம் திரும்பி எதையோ எழுதியபோது யாரோ கத்திப் பேசியதற்காக வகுப்பில் ‘ருத்ர தாண்டவம்’ ஆடியதன் பின் விளைவு.

4. தண்டித்தல் ஒருவகை தொடர் வன்முறையாகவும் வெறுப்பை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. நெறிப்படுத்தல் நபர்கள் மீது கவனம் கொள்ளாமல் நடத்தையைச் சரிசெய்வதில் கவனம் கொள்வதால் இந்த ஆபத்து அதில் இல்லை. அந்த ஆசிரியர் நினைத்திருந்தால் “இது எவ்வளவு முக்கிய பாடம். இப்போது பேசலாமா?” என மட்டும் சொல்லி அந்த சூழலை கடந்து வந்திருக்க முடியும். இத்தனை வன்முறையையும் தவிர்த்திருக்கலாம். குழந்தைகளைத் தண்டிக்கும்போது, குழந்தையின் தவறான நடத்தையைக் கவனப்படுத்தாமல் நாம் குழந்தை மீது கவனத்தைக் கொள்கிறோம். தவறான நடத்தையை மாற்ற வழிகாட்டுவதில்லை. மாறாக, நடந்து முடிந்துவிட்ட ஒரு சம்பவத்திற்கு நீதி கற்பிப்பதாக நினைத்து குழந்தை மீது பாய்கிறோம். இதனால் மறுமுறை அச்சம்பவம் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தண்டிப்பவர் தலைமறைந்ததும் அது தொடரும். ‘அதைச் செய்யக்கூடாது, தவறு’ எனக் குழந்தை உணர்வதற்குப் பதில், ‘அந்த ஆசிரியர் முன் அப்படிச் செய்யக்கூடாது’ என்ற முடிவுக்கு வருகிறது. வகுப்பு அமைதியாக இருக்கும்போதெல்லாம் வகுப்பைப் பாராட்டுதல். கற்றலில் கவனம் செலுத்துவதைப் பாராட்டி ஊக்கப்படுத்துதல் என்பன போன்ற நெறிப்படுத்துதலைச் செய்திருந்தால் ஆசிரியர் கரும்பலகை பக்கம் திரும்பியபோதும் வகுப்பு அமைதி காத்திருக்கும்.

5. தண்டித்தல் தவறான நடத்தையை சரிசெய்வது இல்லை. மாறாக அதைத் தண்டிப்பவர் பார்க்கும்போது தவிர்க்கப் பழக்குகிறது. தவறைத் தற்காலிகமாகவே நிறுத்தும். நெறிப்படுத்துதல் அந்த நடத்தையினால் வரும் தீங்குகளைப் பேசி உணரவைத்து மீண்டும் நிகழாமல் தடுத்தலாகும். இன்னொரு சம்பவத்தைப் பரிசீலிப்போம். எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியை ஒரு குறிப்பிட்ட மாணவியை அவரது தவறான நடத்தைக்காக  வகுப்பறையை விட்டு வெளியே நிறுத்தினார். இது சாதாரணமான  ஒன்றாகவே நமக்குப் படும். ஆனால், அந்த ஆசிரியையின் வகுப்பு என்றாலே மாணவி வெளியே மட்டுமே நிற்க வேண்டும். இது தினமும் நடந்தது. எதற்காக இந்தத் தண்டனை என்கிற கேள்விக்கே இடமில்லை. குழந்தை செய்வது குற்றமல்ல. அது தவறு. ஆனால் அதைக் களைய வேண்டிய ஆசிரியர் அவரிடம் பாரபட்சம் காட்டுவதும், தன் வகுப்பு என்றாலே வெளியேறிவிட வேண்டும் எனக் கட்டளையிட்டு அந்த அளவுக்கு வெறுப்பைக் காட்டுவதுமே குற்றம். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.

6. தண்டிப்பது, சமயத்தில் குழந்தையின் தவறைவிட பெரிய குற்றமாகி விடுகிறது. பாரபட்சம் பார்க்கத் தூண்டுகிறது. நெறிப்படுத்தல் தவறுகளை திருத்தும் கலந்தாலோசிப்பாக (Counselling) இருப்பதால் போற்றத்தக்க செயல்பாடாக ஏற்கப்படுகிறது.குழந்தைகளை நெறிப்படுத்துவது ஆசிரியருக்கும் மாணவருக்கும் சிறந்த நிரந்தர பலன்களைத் தரமுடியும். வகுப்பறை அமைதியை, நல்லுறவைத் தூண்ட முடியும். எப்போதும் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், நிறைவான ஒரு செயல் நடக்கும் சமயத்தில் எல்லாம் பாராட்டி, அக்குணத்தையும் நடத்தையையும் தக்க வைப்பதே நெறிப்படுத்தல் ஆகும். பள்ளிக்கல்வியின் நோக்கம், வேறு என்னவாக இருக்கமுடியும்..? இந்த நெறிப்படுத்தலின் விதிகள் யாவை? அதைக் கடைப்பிடிக்கும் வழிகள் என்ன? அடுத்த வகுப்பில் பார்ப்போம்.

அந்த ஆசிரியர் நிறைய அட்டைகளை வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களை அடிக்க மாட்டார், திட்டமாட்டார். தான் வைத்திருக்கும் அட்டையில் மார்க்கர் பேனாவில், ‘லேட்  கம்மர்’, ‘லையர்’, ‘வகுப்பில் பேசுபவர்’, ‘பேனா திருடி’ என்றெல்லாம் எழுதி  சம்பந்தப்பட்ட மாணவர்களின் கழுத்தில் மாட்டி விடுவார். அன்றைய நாள் முழுதும் அவர்கள் அந்த அட்டையோடு இருக்க வேண்டும்.

குழந்தை செய்வது குற்றமல்ல. அது தவறு. ஆனால் அதைக் களைய வேண்டிய ஆசிரியர் பாரபட்சம் காட்டுவதும், தன் வகுப்பு என்றாலே வெளியேறிவிட  வேண்டும் எனக் கட்டளை யிட்டு அந்த அளவுக்கு வெறுப்பை காட்டுவதுமே குற்றம்.

(பன்னிரெண்டாம் பாடவேளை முடிந்தது)

படம்:  புதூர் சரவணன்
நன்றி: எவர்வின் வித்யாஷ்ரம், சென்னை-99