நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா?எனர்ஜி தொடர்

நீங்கள் இடதுசாரியா? வலது சாரியா? அதாவது, உங்கள் மூளை வலதுசாரியா? அல்லது இடதுசாரியா? புரியவில்லையா. உதாரணம் ஒன்றைப் பார்த்துவிட்டு விஷயத்துக்கு வரலாம். சென்ற நூற்றாண்டில் கரடியை வேட்டையாடுவதென்பது அமெரிக்கர்கள் மத்தியில் கௌரவமான விஷயமாக இருந்தது. காரணம், கரடி கொடூரமான விலங்கு. அப்போதைய அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட், ஒருமுறை கரடி வேட்டைக்குச் சென்றார். ஆனால், மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும், ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கரடி கூட கிடைக்கவில்லை. அடுத்த நாள், அவரது உதவியாளர் காட்டினுள் எங்கெங்கோ அலைந்து திரிந்து வேட்டை நாய்களின் உதவியுடன் ஒரு வயதான கரடியைப் பிடித்து இழுத்து வந்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்தக் கரடியை வேட்டை நாய்கள் வேறு பாய்ந்து தாக்கின. பரிதாப உணர்வில் மூழ்கிய ரூஸ்வெல்ட், “இப்படி ஒரு வயதான கரடியைச் சுடுவது அழகல்ல. அதனை விட்டுவிடுங்கள். அதன் காயத்துக்கு வைத்தியம் பாருங்கள்” என உத்தரவிட்டார்.இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட, கிளிஃபோர்ட் பெரிமென் என்ற கார்ட்டூனிஸ்ட், கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கரடி ஒன்றை ஒருவர் பிடித்துக்கொண்டிருப்பது போலவும், ரூஸ்வெல்ட் அதனைச் சுட மறுப்பது போலவும் கார்ட்டூன் ஒன்றை வரைந்தார். அது, ‘வாஷிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் வெளியானது. அதே கார்ட்டூன் மறுநாள் வேறொரு பத்திரிகையில் வெளியானது. அதில் வரையப்பட்ட கரடி, மிகச் சிறியதாகவும், பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. மக்கள் இந்தக் கார்ட்டூனை வெகுவாக ரசித்தார்கள். மோரிஸ் மைக்டாம் (Morris Michtom) என்பவரும் ரசித்தார். அவர், சாக்லேட், பொம்மைகள் விற்கும் கடை ஒன்றை வைத்திருந்தார். அந்தக் கார்ட்டூனிலுள்ள கரடிப் பொம்மையின் அழகு அவரை வேறு விதமாகவும் சிந்திக்க வைத்தது. அன்று இரவே, அவரது மனைவி ரோஸ், பட்டுப் போன்ற துணியை வெட்டி, கரடியின் உருவில் தைத்து, உள்ளே பஞ்சால் அடைத்தார். நீல நிறத்தில் கண்கள் வைத்தார். இரண்டு கரடிப் பொம்மைகள் செய்தார். அந்தக் கார்ட்டூன் கரடி போலவே இந்த பொம்மைக் கரடியும் மிக அழகாக இருந்தது.

மறுநாள் மோரிஸ், தன் கடையின் ஷோ-கேஸில் அந்தக் கரடிப் பொம்மைகளை, கார்ட்டூனோடு சேர்த்து வைத்தார். அவ்வளவுதான். அதுவரை கரடியைக் கொடூர விலங்காகவே பார்த்துப் பழகிய கண்கள், இந்த அழகிய கரடிப் பொம்மையைக் காதலுடன் நோக்கின. எனக்கு, உனக்கு எனப் போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். மோரிஸுக்கு செம குஷி. உடனடியாக அவர் ஒரு காரியம் செய்தார். அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதாவது, அவரது பெயரையே, அந்தக் கரடிப் பொம்மைக்கு வைப்பதற்கு அனுமதி கேட்டு அந்தக் கடிதம். ‘எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் என் பெயர் பொம்மைக்கு வைத்தால் விற்பனை கூடும் என்றெல்லாம் நம்பிக்கையில்லை’ என ரூஸ்வெல்ட் பதில் அனுப்பினார். மோரிஸ், மேலும் கரடிப் பொம்மைகளைச் செய்து, Theodore என்கிற பெயரைச் சுருக்கி, ‘Teddy Bear’ எனப் பெயரிட்டு விற்பனைக்கு வைத்தார்.

இவையெல்லாம் நடந்தது கி.பி. 1902-ல். அடுத்த வருடமே Ideal Novelty and Toy Company என்ற பெயரில் பொம்மை தயாரிக்கும் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து வியாபாரத்தில் ஜெயித்தார் மோரிஸ். ரூஸ்வெல்ட் கூட, அடுத்த அதிபர் தேர்தலில் டெடி பியர்களை வைத்தே பிரசாரம் செய்து ஜெயிக்குமளவுக்கு மக்கள் மத்தியில் அது பெயர் வாங்கியது. இதோ நூறு ஆண்டுகளைத் தாண்டியும் டெடி பியர் உலகின் செல்லப் பொம்மையாக இதயங்களை ஆண்டுகொண்டிருக்கிறது. காரணம், வலதுசாரி மூளைக்காரரான மோரிஸுக்குத் தோன்றிய வித்தியாசமான யோசனைதான்.

மனிதனின் மூளையை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கலாம். வலது மூளை, இடது மூளை. ஜன்ஸ்டீன் தியரி, நியூட்டனின் மூன்றாவது விதி, முதலாம் பானிபட் போர், நற்றிணை, குறுந்தொகை, சைன், டேன், காஸ் சமாசாரங்கள், பீட்டா, காமா, டெல்டா வஸ்துக்கள், அடுத்த மாதம் பிடித்தம் போக எவ்வளவு சம்பளம் கைக்கு வரும், வாங்கிய ஹோம் லோனில் அடுத்த ஆறு மாதங்களுக்குக் கட்டவேண்டிய தவணை எவ்வளவு - இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமானவற்றையும், வாழ்வியல் சமாச்சாரங்களையும் கவனித்துக் கொள்வது மனிதனின் இடது பக்க மூளை.‘என்ன  கெட்-அப் போட்டா பேன்ஸி டிரெஸ் காம்படிஷன்ல ஜெயிக்கலாம்?’,  ‘இந்த கேள்விக்கு விடை தெரியலையே. என்ன எழுதுனா ரெண்டு மார்க்காவது கிடைக்கும்?’, ‘நாளைக்கு அவளோட பிறந்தநாளுக்கு என்ன கிஃப்ட் கொடுத்து அசத்தலாம்?’, ‘இந்த காளிஃப்ளவரை வைச்சு வித்தியாசமா என்ன சமைக்கலாம்?’, ‘குழந்தைக்குப் புதுசா என்ன கதை சொல்லி தூங்க வைக்கலாம்?’ - இப்படிப் படைப்பு, கற்பனைத் திறன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் குத்தகை எடுத்திருப்பது மனிதனின் வலது பக்க மூளை.

சிலர் இடது பக்க மூளையை அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பர். அவர்களை இடதுசாரிகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இடதுசாரிகள் தங்கள் செயல்களில் ஓர் ஒழுங்கை, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பர். எதையும் அறிவு சார்ந்தே யோசிப்பார்கள். நிரூபிக்கப்படாத ஒன்றை, ஏதேனும் புதிய மாற்றங்களை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் மாற்றி யோசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவர்களின் மண்டையில் ஏறாது. படித்த படிப்புக்குப் பாதுகாப்பான ஒரு வேலை கிடைத்தால் இவர்களுக்குப் போதுமானது. அதிலேயே முடிந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்க முயலுவார்கள்.

சிலர் வலது பக்க மூளையை அதிகம் உபயோகிப்பவர்களாக இருப்பர். அவர்கள் வலதுசாரிகள். இவர்களுக்குக் கற்பனை வளம் ஜாஸ்தி. மீட்டருக்கு மேலே கனவு காண்பவர்களாக இருப்பார்கள். அன்றாட நடவடிக்கைகளில் பெரிதாக ஒழுங்கையெல்லாம் கடைப்பிடிக்க மாட்டார்கள். எதையும் காட்சிப்படுத்திப் பார்க்கும் பழக்கம் இவர்களுக்கு உண்டு. புதிய மாற்றங்களை விரும்புவார்கள். அவற்றைச் சட்டென ஏற்றுக்கொள்வார்கள். படித்த படிப்பு எதுவாக இருந்தாலும், தங்கள் மனதுக்குப் பிடித்த வேலைகளைத்தான் செய்ய விரும்புவார்கள். கலைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

டைம்-டேபிள் போட்டு வாழும் இயல்பான வாழ்க்கைக்கு இடதுசாரி மூளைக்காரனாக இருந்தால் போதும். ஏதோ வாழ்ந்துவிட்டு பல கோடியில் ஒருவனாகத் தொலைந்துபோகலாம். ஆனால், மாற்றி யோசிக்கும் கற்பனைத் திறனான ‘கிரியேட்டிவிட்டி’ என்பது முற்றிலும் வலதுபக்க மூளை சார்ந்த விஷயம். எவன் ஒருவன் மந்தையிலிருந்து விலகி வித்தியாசமாகச் சிந்திக்கிறானோ, அந்தச் சிந்தனையால் தனக்கான புதிய வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறானோ, அவனே கவனிக்கப்படுகிறான். தனித்துவம் பெறுகிறான். பெரிதாகவும் ஜெயிக்கிறான். இப்போது சொல்லுங்கள். நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா?

மனிதனின் மூளையை இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கலாம். வலது மூளை, இடது மூளை. சிலர் இடது பக்க மூளையை அதிகம்  உபயோகிப்பவர்களாக இருப்பர். அவர்களை இடதுசாரிகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இடதுசாரிகள் தங்கள் செயல்களில் ஓர் ஒழுங்கை, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பர். எதையும் அறிவு சார்ந்தே யோசிப்பார்கள். சிலர் வலது பக்க மூளையை அதிகம்  உபயோகிப்பவர்களாக இருப்பர். அவர்கள் வலதுசாரிகள். இவர்களுக்குக் கற்பனை வளம் ஜாஸ்தி. மீட்டருக்கு மேலே கனவு காண்பவர்களாக இருப்பார்கள்.

-முகில்

(வளர்வோம்)