வேலை வேண்டுமா?



புதிய தொடர்

-நெல்லை கவிநேசன்

மனம் நிறைய கனவுகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், படிப்பை நிறைவு செய்து, வளமான எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்துகளும் வரவேற்பும். உலகின் அதிக இளைஞர் வளம் கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றிருக்கும் தேசம் நம்முடையது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் இலக்கு வைத்து வருமளவுக்கு நம் இளைஞர் வளம் மேம்பட்டிருக்கிறது. உலகின் ஆகப்பெரிய பல நிறுவனங்களின் தலைமைப் பீடத்தில் அமர்ந்து வழிநடத்தும் அளவுக்கு நம் இளைஞர்கள் வல்லமை பெற்றிருக்கிறார்கள்.



இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பெரிதும் மேம்பட்டிருக்கின்றன. ஆந்திராவுக்குப் பிறகு, அதிக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதேபோல, கலை, அறிவியல், மேலாண்மை கல்லூரிகளுக்கும் குறைவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் நம் கல்விச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்வேறு நேர்மறை விளைவுகளை உருவாக்கியுள்ளன. பள்ளி இடைநிற்றல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எல்லாத் தரப்பினருக்கும் உயர்கல்வியை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது. கிராமங்களில் பட்டதாரிகள் நிறைந்திருக்கிறார்கள். படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

1975ல் தமிழகத்தில் இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 7. இன்று 575க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் வந்துவிட்டன. ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பொறியாளர்களை இந்தக் கல்வி நிறுவனங்கள் தயார் செய்கின்றன. இதுதவிர, கலை அறிவியல் பட்டதாரிகளையும் சேர்த்தால் ஆண்டுக்குச் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். நேர்மறை விளைவென்று ஒன்று இருக்கும்போது எதிர்மறை விளைவுகளும் இருக்கும் தானே..? அதுதான் இப்போது பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கிறது. கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்ட அளவுக்கு இங்கே வேலை வாய்ப்புக்கான தளம் விரிவுபடுத்தப்படவில்லை.

அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒரு ஆண்டுக்குப் படிப்பை முடித்து வெளிவரும் பொறியாளர்களின் எண்ணிக்கை 1.1 லட்சம் தான். நாம் ஒட்டுமொத்த சீனாவை விடவும் அதிகமாகப் பொறியாளர்களை தயாரிக்கிறோம். தொடக்கத்தில், பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கும் அட்சய பாத்திரங்களாக இருந்தன. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியதால், லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்குப் படித்து முடித்ததும் ேவலை கிடைத்தது. கற்பனைக்கெட்டாத சம்பளமும், வசதிகளும் கிடைத்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஆட்குறைப்பு, புதிய ஆளெடுப்புப் பணிகள் நிறுத்தம் என பெரும் நிறுவனங்கள் ஸ்தம்பித்தன. பொறியாளர்கள் குவிந்துகொண்டே இருக்க, பணி
வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

ஒரு காலகட்டத்தில் கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்தது. பின்னர், பட்டதாரிகளுக்கு மட்டும் வேலை கொடுத்தார்கள். அதன்பின்னர், பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே வேலையைப் பெற்றார்கள். பின்னர், அடிப்படைத் தகுதிகளோடு சேர்த்து C++, ஜாவா என சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்களை மட்டுமே வேலையில் அமர்த்தினார்கள். இப்போது, கம்ப்யூட்டர் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளைப் படித்தவர்களுக்குக் கூட  வேலை கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒருவரை சந்தித்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஆளெடுப்பு பற்றி அவர் சொன்ன செய்திகள் அதிர்ச்சியாக இருந்தது.

“எங்கள் கம்பெனியில் இப்போது ‘லேட்டரல் என்ட்ரி சிஸ்டம்’ ஆரம்பித்துள்ளோம். மற்ற நிறுவனங்களில் குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களை மட்டுமே இண்டர்வியூவுக்கு அழைக்கிறோம். அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அனுபவமில்லாதவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை இல்லை..” என்றார் அவர். பொறியியல் மட்டுமல்ல... அனைத்து துறைப் பட்டதாரிகளுக்கும் இதுமாதிரியான அனுபவங்களே வாய்க்கின்றன. பட்டதாரிகள் அதிகரித்துவிட்டதை நிறுவனங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கி விட்டன. எல்லாவற்றிலும் மிகசிறந்தவர்களையே ஊழியர்களாகக் தேர்வு செய்ய முனைகிறார்கள். மிகக்குறைந்த சம்பளத்திலேயே அவர்களுக்குத் தேவையான, தகுதியான ஊழியர்கள் கிடைத்து விடுகிறார்கள்.
 
இப்போது, 10ம் வகுப்பு, +2 படித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மாணவர்களை நான் சந்திக்கிறேன். எல்லோரின் மனதிலும் படிந்திருக்கும் கேள்வி, ‘படித்து முடித்ததும் எனக்கு வேலை கிடைக்குமா?’ என்பதாகத்தான் இருக்கிறது. சரியான தகுதியும், உழைக்கத் தயங்காத மனநிலையும், திறமையும் கொண்டவர்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிடுகிறது. இதில் எது ஒன்று குறைந்தாலும் தேங்கித்தான் நிற்க வேண்டியிருக்கிறது.

எல்லா மாணவர்களுமே, “படிப்பு முடித்ததும் ஒரு வேலை...”, இதுதான் இலக்கு. கல்லூரியில் படிப்பை முடித்தபிறகு வேறெதையும் கற்கவோ, படிக்கவோ பலர் தயாராக இல்லை. பிரச்னையின் மையப்புள்ளி இதுதான். நம் தேசத்தில் வாய்ப்புகளுக்குக் குறைவேயில்லை. இன்னும் நாம் எவ்வளவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. . புதிய கண்டுபிடிப்புகளை, ஆராய்ச்சிகளை நோக்கி மாணவர்கள் திரும்புவதே இல்லை. ஒருகாலத்தில் சுயதொழில் செய்ய வேண்டும் என்றால் பணம் தடையாக இருந்தது. இன்று, நல்ல தொழில் திட்டங்களோடு வருபவர்களை வரவேற்க வங்கிகள் வரிசைகட்டி நிற்கின்றன. மத்திய மாநில அரசுகள் புதிய தொழில் முனைவோர்களை எதிர்நோக்கி தனித்துறையைத் தொடங்கி வைத்துக்கொண்டு பெட்டி நிறைய பணத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன. இன்று பல்வேறு துறைகளில் முன்னோடியாக இருக்கிற முதலாளிகள் ‘ஏஞ்சல் பண்ட்’ என்ற பெயரில் பல்லாயிரம் கோடி நிதியை வைத்துக்கொண்டு இளைஞர்களை எதிர்நோக்கி நிற்கிறார்கள். பிரச்னை பணத்தில் அல்ல.. மனதில்!

இன்னொரு பக்கம், மத்திய, மாநில அரசுகளில் வேலைகள் குவிந்திருக்கின்றன. ஒவ்வோராண்டும் போட்டித் தேர்வுகள் மூலம் பல ஆயிரம் பேர் அரசுப்பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். திறமையும், உழைப்பும், தீவிரமும், ஈடுபாடும் கொண்டவர்களுக்கு வெற்றி வசப்படுகிறது. ஒவ்வோராண்டும், கிளர்க் வேலை தொடங்கி கலெக்டர் வேலை வரைக்கும் ஏராளமான போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. மத்திய, மாநில அரசுகளில் இதற்கெனத் தனியாகத் தேர்வாணையங்கள் செயல்படுகின்றன.

நாம் பேசப்போவது அதைப்பற்றித்தான். போட்டித்தேர்வு என்றால் என்ன?, மத்திய அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் எவை?, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் என்ன?, மத்திய / மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?, போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு என்னென்ன தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பணிகளில் சேருவது எப்படி?, வங்கிகளில் வேலை பெறுவது எப்படி?, இரயில்வே பணிகளில் சேருவது எப்படி?, முப்படைகளில் வேலை வாய்ப்பை பெறுவதற்கு எந்தெந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் இந்தத் தொடரில்
விடை உண்டு. தயாராகுங்கள்...! உங்களுக்கான அரசு வேலையை உறுதி செய்வோம்!

நெல்லை கவிநேசன்

திருச்செந்தூர், ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர். போட்டித் தேர்வுகள் தொடர்பாக ஏராளமான பயிற்சி முகாம்களையும், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். வேலைவாய்ப்பு, தனிமனித முன்னேற்றம், போட்டித் தேர்வுகள் குறித்து பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். ‘பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்வது எப்படி?’, ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’, ‘ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி உறுதி’, ‘ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான தகவல் களஞ்சியம்’ ஆகியவை உள்பட 45க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

(தேடுவோம் வேலையை...)