கல்வி உதவித்தொகையிலும் கைவைத்த அரசு!



சிக்கல்

சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையானது குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை, சுயநிதிக் கல்லூரிகளில் ரூ.70 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு உதவித்தொகை ரூ.50 ஆயிர மாக குறைக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ள அதேசமயத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சமூகக் கல்வி நிறுவன இயக்குநர் பெர்னாட்டிடம் கேட்டோம்.

“காலம் காலமாக சாதியின் பெயரால், பாலினத்தின் பெயரால் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் சமூகமாகவே இந்திய சமூகம் இருந்து வருகிறது. கடந்த இருபதாண்டுகளாக பள்ளிக்கல்வி பெறும் பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததின் விளைவாக உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் இல்லாததால் உயர்கல்வி பெறுவதில் பின்னடைவாகவே இருந்தது.

வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்ட பிறகு வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்ற கல்வியை அளிப்பதில் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களின் பங்கே ஒத்திசைவாக உள்ளது. தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணம் காரணமாக பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்கள் தொழிற்கல்வியை பெறுவது என்பது பெறும் சவாலாகவே இருந்து வருகிறது.

எனவே, இந்தியா முழுவதும் பட்டியல் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் தொழிற்கல்வி கனவை நனவாக்கும் விதத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 10-ஆம் வகுப்பிற்கு பிந்திய உயர்கல்வி உதவித்தொகை திட்டமாகும் (Post Matric Scholarship).

தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை 6.1.2012 அன்று வெளியிட்டுள்ள அரசாரணையில் (அரசாணை எண்-06) சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச, நிர்வாக இடங்களில் அனுமதிக்கப்படும் பட்டியலின மாணவர்களுக்கு விதிக்கப்படும் அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்று வெளியிடப்பட்டது.

2012-லிருந்து தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படாததால் நிர்வாகத்தால் பல இன்னல்களுக்கு ஆளாயினர். பல நிறுவனங்களில் மாணவர்கள் முன்தொகையும் வழங்க நிர்பந்திக்கப்பட்டனர்.

இத்தகையச் சூழலில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை (Post Matric Scholarship) 11.8.2017 தேதியிட்ட அரசாரண எண் 51 மற்றும் 52 மூலம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவது நிச்சயம். உதாரணத்திற்கு மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆண்டிற்கு 12.5 லட்சம் பெற்று வந்த நிலையில் அது 4 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல் பொறியியல் படிப்பிற்கு ரூ.70,000 பெற்று வந்த நிலையில் அது ரூ.50,000 என குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக மைய அரசு தனது பங்கை முறையாக அளிக்கவில்லை என்பதையும் தனது அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதையும் காரணமாகச் சொல்லி சமூகத்தின் முன்னேற்றத்தை முடக்குவது எவ்விதத்தில் நியாயமாகும்? பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கு பதிலாக கல்வி உரிமையை மறுப்பது அரசிற்கு அழகல்ல” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- திருவரசு