இனியும் தேவையா... நீட் தேர்வு? கல்வியாளர்கள் ஆவேசம்!



சர்ச்சை

சமூக நலன் சார்ந்து, சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் கருத்தில் கொண்டு சமூக நீதி அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை இளங்கலைப் பட்டத்திலும், முதுகலைப் பட்டத்திலும் நல்லவிதமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் அனிதா என்ற ஒரு மாணவியும், ஒரு மாணவியின் தாயாகவும் பள்ளி தலைமையாசிரியராக இருந்தவரும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சமூக சூழலை சீர்குலைக்கும் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட் தகுதித் தேர்வு) என்பது தேவைதானா? என்பது பற்றி கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துகளைக் கேட்டபோது அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் நீட் என்கிற இந்தத் தேர்வு தேசிய மற்றும் தகுதி நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படுகிறது. தேசிய அளவில் தகுதித் தேர்வு என்பது இந்தியா போன்ற பல மொழி பேசக்கூடிய, பிராந்திய வேறுபாடுகள் நிறைந்த, சமத்துவமான கற்றல் வாய்ப்பு
இல்லாத நாட்டில் சாத்தியம் இல்லை என்பதைத் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன்.

நீட் தேர்வு நடந்து முடிந்த பிறகு அதை நடத்திய மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்தித் தொகுப்பு என்ன சொல்கிறது என்றால், இது இந்தியாவில் நடத்தப்பட்ட அதாவது, நீட் என்பது முதல் உலக நுழைவுத்தேர்வு என்கிறது.

அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், இந்தியர்கள் தவிர வெளிநாட்டவர் என்.ஆர்.ஐ., சி.ஐ.ஓ., ஓ.ஐ.சி. என ஐந்து வகையினர் இந்தத் தேர்வில் அனுமதிக்கப்பட்டார்கள் என்கிறது. இந்த ஐந்து வகையினரும் ஒன்றாக போட்டிப் போட்டுள்ளனர்.

அதாவது,  இந்தியர்களும் வெளிநாட்டில் இருப்பவர்களும், வெளிநாட்டினரும் சேர்ந்து இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். அப்படி எழுதியதில் வெளிநாட்டவர்களும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவைச் சேர்ந்தவர்களில் எழுதியவர்களைப் பார்த்தோமானால் 60 சதவீதத்துக்கு கீழேதான் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

ஆனால், வெளிநாட்டினர் 60%ல் இருந்து 85% பேர் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் சமமற்றவர்களை சமமாகத் தேர்வு எழுத வைத்ததை இது வெளிப்படுத்துகிறது.

காரணம் என்னவென்றால், வெளிநாட்டில் கற்றல் வாய்ப்பு என்பது சமமாக, அதாவது அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் பொதுப் பள்ளி மூலமாக கல்வி வசதியைக் கொடுக்கிறது. குறைந்தபட்சம் பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையிலாவது பல நாடுகளில் கல்வி உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் பல அடுக்கு கல்விமுறை. அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், பணம் இருந்தால் பணத்துக்குத் தகுந்ததுபோல பள்ளிக்கூடங்கள் என்கிற அளவில் சமமற்ற சூழல் இருக்கிறது என்பதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் வெளிநாட்டினர் ஏன் போட்டிப் போடுகின்றனர் என்றால், அகில இந்திய அளவில் ஒதுக்கப்பட்டுள்ள 15 சதவீத இடத்திற்குப் போட்டிப் போடுகிறார்கள். இந்த அகில இந்திய 15 சதவீத ஒதுக்கீடு என்பது இந்திய அரசாங்கம் உருவாக்கியது அல்ல. தமிழ்நாடு போன்ற ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் இருந்து கொடுக்கப்பட்ட இடங்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் போன்ற ஒவ்வொரு கல்லூரிகளிலும்  எத்தனை இருக்கைகள் இருக்கிறதோ அத்தனை இருக்கைகளில் 15 சதவீதத்தைக் கொடுத்துள்ளன. 150 இருக்கைகள் என்றால் 23 இருக்கைகள் கொடுக்கிறார்கள். இது எதற்காகக் கொடுக்கப்பட்டது? பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய இந்தியர்களுக்காகக் கொடுக்கப்பட்ட இருக்கைகள்.

இந்தியர்களுக்காகக் கொடுக்கப்பட்ட இந்த இருக்கைகளை அந்நியர்களுக்கு கொடுப்பது என்பது எந்தவகையில் நியாயம்? அந்த அளவுக்கு நாம் நிறைய மருத்துவக் கல்வி நிறுவனங்களை வளர்த்து விட்டோமா  அல்லது நம்மிடம் உதிரியாக இருக்கைகள் இருக்கிறதா? நம் தேவைகளுக்கே கல்வி நிறுவனங்கள் இல்லையே. அப்படி என்றால் கொடுப்பதற்கு எங்கே, யாரிடம் ஒப்புதல் பெற்றார்கள்? மாநில அரசோடு கலந்து ஆலோசித்தார்களா, இவ்வளவு கேள்விகள் எழுகிறது.

அதேபோல் கிராமப்புறத்து, நகர்புறத்து ஏழை மாணவர்களுக்கு கோச்சிங் போவது என்பது சாத்தியமில்லை. வாய்ப்பு வசதி அதற்குண்டான பணம் என்பது எதுவுமே சாத்தியம் கிடையாது. அடிப்படையில் பார்க்கப்போனால், நீட் என்ன செய்யும் என்றால் பள்ளிக்கூட வகுப்பறை கற்றல் சூழலை மாற்றி, பயிற்சி கூடமாக மாற்றிவிடும்.

அப்படியென்றால், சுமார் இரண்டு லட்சம்பேர் அறிவியல், உயிரியல் பாடத்தை எடுத்துப் படிக்கக்கூடியவர்கள் நீட் கோச்சிங் சென்றுவிட்டால்... அதில் ஐந்தாயிரம் பேருக்குதான் மருத்துவப் படிப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஒரு லட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரம் பேர் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மீதம் உள்ள இவர்கள் பள்ளிப் பாடத்தை முழுமையாகப் படித்து அதில் மதிப்பெண் பெறாமல் நீட்டுக்கு மட்டும் கவனம் செலுத்தினார்கள் என்றால், அடிப்படையில் அறிவியல் அறிஞர்கள் உருவாவதற்கு வாய்ப்பில்லாமல் நாம் செய்துவிடுவோம் என்ற அச்சம் இருக்கிறது. ஒட்டுமொத்த கல்விச் சூழலையே அது பாதிக்கும்.

உண்மையிலேயே தரம் மிக்க மாணவர்கள் வேண்டும் என்று நாம் விரும்பினால் நாம் பள்ளிக் கல்வியை வலுப்படுத்துவது, மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம்,  கற்பித்தல் முறை, ஆசிரியர்கள் எண்ணிக்கை என எல்லாவற்றையுமே பலப்படுத்தினால்தான் நமக்கு தரமான மாணவர்கள் கிடைப்பார்களேயொழிய, இதுபோன்று வடிகட்டக்கூடிய நீட் போன்ற தேர்வுகள் மூலமாக நிச்சயமாகக் கிடைக்க மாட்டார்கள்.

டாக்டர் ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்.நீட் தேர்வால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மருத்துப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு படித்த மாணவர்கள் ஏறத்தாழ 800 பேர் சேர்ந்துள்ளனர். நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்ததால் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் சீட் கிடைக்காததால் அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபோன்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ-யில் படித்த மாணவர்கள் ஏறத்தாழ 4,500 பேர்தான் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு 1122 இடங்கள் கிடைத்துள்ளன. அதேசமயத்தில், கிட்டத்தட்ட 35,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2,222 இடங்கள்தான் கிடைத்துள்ளன.

இந்த விகிதாச்சார அடிப்படைப்படிப் பார்த்தால் சென்ற ஆண்டு வெறும் 30 இடங்களுக்கு கீழே பெற்ற சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இந்த ஆண்டு 1,110 இடங்களுக்கு மேல் பெற்றிருக்கிறார்கள் என்றால், நீட் தேர்வு அவர்களுக்கு சாதகமானதாகவே தெரிகிறது. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நமக்கு எதிரி அல்ல... ஆனால், மருத்துவப் படிப்பு உட்பட அனைத்து உயர் கல்வியிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த சமவாய்ப்பு
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குக் கிடைக்கவில்லை.

இது வருத்தப்படக்கூடிய விஷயம். அதனால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  இளநிலை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசின்  நீட் தேர்விலிருந்து  நிரந்தர விலக்கு வழங்க வேண்டும்.. அது மட்டுமன்றி, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவக் கல்வி போன்றவற்றிற்கும் நீட்டிலிருந்து விலக்கு வழங்க வேண்டும்.

ஆயுர்வேதா-ஓமியோபதி-சித்தா-யுனானி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கும், வெளிநாட்டில் போய் மருத்துவம் படிப்போருக்கும், பொறியியல் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும்.

 டாக்டர் முஹம்மது கிஸார், சமூக ஆர்வலர்.மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இண்டியா நீட் தேர்வு கொண்டுவந்ததன் நோக்கம்.  1. ஒரே மாதிரியான சீரான மருத்துக் கல்வி அனுமதி. 2. தனியார் மருத்துவக் கல்லூரி கள் அதிகக் கட்டணம் வசூல்  செய்வதைத் தடுப்பது. 3. மறைமுகமாக ஏழை மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆனால், இந்த 3 நோக்கமுமே நிறைவேறவில்லை. சென்ற ஆண்டு நீட் தேர்வு வெளியிட்ட பின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாங்களாகவே மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டன.  நீட் தகுதி மதிப்பெண் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தரவரிசை பட்டியலின்றி  சேர்த்தனர். இதனால் ஒரு மாணவர் பல கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டி வந்தது. கல்விக் கட்டணமும் நீட்டுக்கு முந்தையதைவிட குறைந்ததாகத் தெரி்யவில்லை.

இந்தியாவில்  ஏறத்தாழ 55 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களில் 25 ஆயிரம் இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசமே உள்ளன. இந்த 25 ஆயிரம் இடங்களுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் 25 லட்சம் வரை வருடத்திற்கு ஓர் ஏழை மாணவரால் எப்படி செலுத்த முடியும்?

இந்த முறைதான் தமிழக மருத்துவ ஒற்றை சாளரமுறை கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரியின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் முதல் கட்ட கலந்தாய்விலேயே நிரப்பப்பட்டது. காரணம், நீட் மூலம் தேர்வான மாணவர்கள் அனைவருமே அநேகமாக பணக்கார மற்றும் உயர்நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த, தனியார் கல்லூரிகளில் வருடத்திற்கு பல லட்சம் ரூபாய் கட்டணங்களைக்கட்ட வசதிப் படைத்தவர்கள்.

மாநிலங்களின் உரிமை வரும் வருடங்களில் பறிக்கப்பட்டு மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பது  என்பது கனவாகவேப் போய்விடும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்.தமிழக அரசு நமது மாணவர்களை நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் தரத்துக்கு தயார்படுத்தும்போதுதான் நமது மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும். இப்போது உள்ள பாடத்திட்டம், தேர்வு முறையை வைத்துக் கொண்டு நீட் தேர்வு எழுதுவது மிகவும் சிரமமானது.

தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 3,000 மாணவர்கள், அதாவது 70 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் 2 சதவீதம், 3 சதவீதம் வரும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இந்த முறை 30 சதவீதம் வந்துள்ளார்கள். தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களைப் பார்த்தோமானால் எம்.பி.சி., எஸ்.சி. மாணவர்கள்தான் அதிகமாக வந்துள்ளார்கள்.

ஏனெனில் எம்.பி.சி., எஸ்.சி. மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிப்பது மிகக் குறைவு. அதனால்தான் கட்-ஆப்பில் கூட எம்.பி.சி. கட்-ஆப்புக்கும் ஓ.சி., பி.சி. கட்-ஆப்புக்கும் வித்தியாசம் அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னை தீர வேண்டுமானால் அட்லீஸ்ட் ஒரு இரண்டு ஆண்டுகளுக்காவது விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும்.

அதேசமயம் என் கேள்வி என்னவென்றால், ஒரே கல்விமுறை ஒட்டுமொத்த அளவில் வரும்போது நீட் தேவையில்லையே? ஏன் குவாலிட்டி எஜுகேஷன் ஸ்டாண்டர்டு கொண்டு வர வேண்டும். அப்படி என்றால் மத்திய அரசு நடத்தும் டீம்டு யுனிவர்சிட்டியில் பார்த்தோமானால் ஆல் இண்டியா கோட்டாவில் 450 மதிப்பெண் பெற்றும் கிடைக்கவில்லை.

அதே எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் 200 மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும் கிடைக்கிறது. அவர்களும் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவர் ஆகிவிடுகிறார்கள். ஒரு எஸ்.சி. மாணவர் மதிப்பெண் குறைவாக வாங்கி ஒரு நல்ல தரமான மருத்துவராக வரும்போது ஏன் நீட் மூலம் குவாலிட்டி டாக்டர் வேண்டும், தேவையில்லையே.

ஒரு தேர்வு நடத்தினால், அதற்கு வேல்யூ இருக்க வேண்டும். ஏதாவது ஒரு இடத்தில் அட்மிஷன் போகும்போது பயன்பட வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையே கிடையாது. மாநிலப் பாடத்திட்டத்தில் உள்ள பிளஸ்2 மதிப்பெண்ணை வைத்தே மருத்துவப் படிப்பில் சேர்க்கலாம்.

இத்தனை வருஷம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், தமிழ்நாட்டு மருத்துவர்கள் நன்றாகத்தான் சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரமாதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றைக்காவது ஊடகங்களில் தமிழ்நாட்டு மருத்துவர்கள் தவறாக சிகிச்சை அளித்து யாராவது இறந்துள்ளனர் எனச் செய்தி வந்துள்ளதா? கிடையாதே.

நான் என்றைக்கும் சொல்வேன், தமிழ்நாடு மாணவர்களைவிட சிறந்த மாணவர்கள் எந்த மாநிலத்திலும் கிடையாது. நமது மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் வேண்டுமானால் குறைவானதாக இருக்கலாம்.

ஆனால், மருத்துவம் படிக்கும்போது அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு நல்ல மருத்துவராக வந்துள்ளனர். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. எந்த வகுப்பினராக இருந்தாலும் சரி, இடஒதுக்கீடும் வேண்டும், அதே நேரத்தில் மதிப்பெண்ணுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

- தோ.திருத்துவராஜ்