செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

*ஆசிரியர்களின் திறமைக்குச் சவால்!

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதத் திறமைகளைக் கண்டறியும் நோக்கில் கணித ஒலிம்பியாட், அறிவியல் ஒலிம்பியாட் எனப் பல்வேறு திறனறி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதேபோன்று மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் ‘சென்டா’ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இந்தப் போட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.

பாடத்தில் பெற்றுள்ள நிபுணத்துவம், மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத்திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இந்தத் தேர்வு அமைந்திருக்கும். அப்ஜெக்டிவ் முறையிலான இந்தத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். 2017-ம் ஆண்டுக்கான சென்டா ஒலிம்பியாட் போட்டியானது வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டிக்கான தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள் www.tpo-india.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

*கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை!

மத்திய மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படும், ‘சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப்’ (சி.எஸ்.எஸ்.எஸ்.,) உதவித்தொகைக்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வில் 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று, 2017-18 கல்வியாண்டில், உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றிருக்க
வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: இளநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.1000, முதுநிலைப் பட்டப்படிப்புக்கு மாதம் ரூ.2000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2017
மேலும் விவரங்களுக்கு: http://mhrd.gov.in/scholarships

*+2 மாணவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகப் பாடத்திட்டத்தில் படிக்கும், +1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் முறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டுக்கான, +2 தேர்வும் மாற்றப்பட உள்ளது. அதனால், பழைய முறையில், தற்போது, +2 படிக்கும் மாணவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குநரகத்தின் கருத்துருவுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்து, அரசாணையும் பிறப்பித்துள்ளது.

அதில், ‘தற்போது +2 படிக்கும் மாணவர்கள், வரும், மார்ச் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வு மற்றும் 2019 மார்ச்சில் நடக்கும் பொதுத் தேர்வுகளில் பங்கேற்க முடியும். அதற்குப் பிறகும் தேர்ச்சி பெறாவிட்டால், தேர்வில் பங்கேற்க முடியாது.

எனவே, தற்போது +2 படிக்கும் மாணவர்கள், 2019 மார்ச்சுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. +2வில், தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர்; 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு பூர்த்தியானவர், இந்த ஆண்டு அக்டோபர் தேர்வில் பங்கேற்கலாம். 2016 மார்ச்சில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், 2018 வரை, தற்போதைய, 1,200 மதிப்பெண் முறைப்படி தனித்தேர்வராக, +2 தேர்வு எழுதலாம்’ என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

*முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகை!

ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களின் குழந்தைகளுக்கான பிரதம மந்திரி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை அறிவிப்பை கேந்திரிய சைனிக் வாரியம் வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பார்மசி, பி.சி.ஏ., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாணவிகளுக்கு மாதம் ரூ. 2, 250 வீதம், ஆண்டுக்கு
ரூ.27,000. மாணவர்களுக்கு மாதம் ரூ. 2,000 வீதம், ஆண்டுக்கு 24,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2017
மேலும் விவரங்களுக்கு: www.ksb.gov.in