உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள்!



தரப் பட்டியல்

உலகிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைக் குறிப்பிட்ட சில அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்து, ‘உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்கள்’ எனும் பட்டியலைப் பல்வேறு நிறுவனங்கள் / அமைப்புகள் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் Times Higher Education World University Rankings எனும் அமைப்பு ‘World University Rankings 2018’ பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

அமைப்பு: இங்கிலாந்திலுள்ள Times Higher Education (THE) எனும் பத்திரிகை Quacquarelli Symonds (QS) எனும் அமைப்புடன் இணைந்து 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுவந்தது.

அதன் பின்னர் இந்தப் பத்திரிகை இப்பட்டியலைத் தனியாகத் தயாரித்து வெளியிட்டுவருகிறது. இந்தப் பத்திரிகை வெளியிட்ட ‘World University Rankings 2018’ எனும் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள் எதுவும் முதல் 200 இடங்களுக்குள் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பட்டியல்: இந்தப் பட்டியல் 1.முனைவர் பட்டங்கள் மற்றும் கல்விப்பணியாளர் விகிதம் (Doctorate to Academic Staff Ratio), 2.முனைவர் பட்டம் மற்றும் இளநிலைப் பட்டங் கள் விகிதம் (Doctorate to Bachelor Degree Ratio), 3.கள நிறைவு மேற்கோள்கள் (Field Weighted Citations), 4.வருவாய் மற்றும் கல்விப்பணியாளர் விகிதம் (Income to Academic Staff Ratio), 5.தொழில் நிறுவன ஆய்வு வருவாய் மற்றும் கல்விப்பணியாளர் விகிதம் (Industry Research Income to Academic Staff Ratio),

6.பன்னாட்டு மற்றும் உள்நாட்டுப் பணியாளர் விகிதம் (International to Domestic Staff Ratio), 7.பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மாணவர் விகிதம் (International to Domestic Student Ratio), 8.ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் கல்விப்பணியாளர் விகிதம் (Papers to Academic Staff Ratio), 9.குறைந்தது ஒரு பன்னாட்டளவிலான ஆசிரியரைக்கொண்ட வெளியீடு (Publication with at least one International Author), 10.ஆய்வு வருவாய் மற்றும் கல்விப் பணியாளர் விகிதம் (Research Income to Academic Staff Ratio), 11.ஆய்வு நற்பெயர் (Research Reputation),

12.ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதம் (Staff to Student Ratio), 13.கற்பித்தலுக்கான நற்பெயர் (Teaching Reputation) எனும் 13 அளவீடுகளைக் கொண்டு, 1.கற்பித்தல் (Teaching), 2.ஆய்வு (Research), 3.மேற்கோள் (Citation), 4.தொழில் நிறுவன வருவாய் (Industry Income), 5.பன்னாட்டு எதிர்பார்ப்பு (International Outlook) எனும் ஐந்து பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனம் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்துக் (Overall) கிடைத்த மதிப்பெண்களைக்கொண்டு பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தின் தரப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பட்டியல் மேற்காணும் ஐந்து பிரிவுகள் மற்றும் அனைத்தும் சேர்ந்தது (Overall) என்று மொத்தம் ஆறு பிரிவுகளின் கீழ் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பத்து இடங்கள்: இப்பட்டியலில் கற்பித்தல் - 86.7, ஆய்வு 99.5, மேற்கோள்  99.1, தொழில் நிறுவனவருவாய்  63.7, பன்னாட்டு எதிர்பார்ப்பு - 95.0 இவையனைத்தும் சேர்த்து 94.3 மதிப்பெண்களுடன் ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள (United Kingdom) ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் (University of Oxford) முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge) 93.2 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.

அதன்பிறகு மூன்று முதல் ஏழாவது வரையிலான இடங்களை ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள (United States) பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. California Institute of Technology மற்றும் Stanford University ஆகியவை 93.0 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும், Massachusetts Institute of Technology 92.5 மதிப்பெண்களுடன் ஐந்தாமிடத்தையும், Harvard University 91.8 மதிப்பெண்களுடன் ஆறாமிடத்தையும், Princeton University 91.1 மதிப்பெண்களுடன் ஏழாமிடத்தையும் பெற்றிருக்கின்றன.

ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள Imperial College London 89.2 மதிப்பெண்களுடன் எட்டாவது இடத்தையும், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள (United States) University of Chicago 88.6 மதிப்பெண்களுடன் ஒன்பதாமிடத்தையும், சுவிட்சர்லாந்திலுள்ள (Switzerland) ETH Zurich  Swiss Federal Institute of Technology Zurich மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள University of Pennsylvania ஆகியவை 87.7 மதிப்பெண்களுடன் பத்தாமிடத்தையும் பெற்றிருக்கின்றன.
இப்பட்டியலில் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள 41 பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பல்கலைக்கழகங்கள்   உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பட்டியலில் மொத்தம் 981
பல்கலைக்கழகங்கம் / கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் இந்தியாவிலுள்ள 31 பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பெங்களூரிலுள்ள Indian Institute of Science 46.3 முதல் 50.4 வரையிலான மதிப்பெண்களுடன் 200 முதல் 250 வரையிலான இடத்தில் இருக்கிறது. மும்பையிலுள்ள Indian Institute of Technology Bombay 351 முதல் 400 வரையிலான இடத்திலும், புதுடெல்லி, கான்பூர் மற்றும் சென்னையிலுள்ள Indian Institute of Technology 401 முதல் 500 வரையிலான இடத்திலும், காரக்பூர், ரூர்கியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் கொல்கத்தாவிலுள்ள Jadavpur University ஆகியவை 501 முதல் 600 வரையிலான இடங்களிலும் இருக்கின்றன.

உத்தரப்பிரதேசம் அலிகார் நகரிலுள்ள Aligarh Muslim University, பிலானியிலுள்ள Birla Institute of Technology and Science, Pilani, University of Calcutta, University of Delhi, Indian Institute of Technology Guwahati, National Institute of Technology Rourkela, Panjab University, Savitribai Phule Pune University, திருப்
பதியிலுள்ள Sri Venkateswara University, Tata Institute of Fundamental Research மற்றும் Tezpur University ஆகியவை 601 முதல் 800 வரையிலான இடங்களில் இருக்கின்றன.

மேலும், Acharya Nagarjuna University, Amity University, Amrita University, Andhra University,  Cochin University of Science and Technology, Maharaja Sayajirao University of Baroda, Manipal University, Osmania University மற்றும் தமிழ்நாட்டிலுள்ள SASTRA University, SRM University, Sathyabama University, VIT University ஆகியவை 800 முதல் 931 வரையிலான இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. 

கூடுதல் தகவல்கள்: இப்பட்டியல் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் Times Higher Education (THE) அமைப்பின் https://www.timeshighereducation.com/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.

- தேனி மு. சுப்பிரமணி