நல்ல விஷயம் 4



வளாகம்

வாசிக்க வேண்டிய வலைத்தளம்: http://tamilentrepreneur.com

பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் இளைஞர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இத்தளம். ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலையில் அமர்வதைவிட சுயதொழில் தொடங்கி பலருக்கும் வேலை கிடைப்பதற்கான வழிகாட்டும் தளமாக இயங்குகிறது. சுயதொழில் தொடங்குவது எப்படி?

தொழில் தொடங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் எவை? நிறுவனத்தை திறம்பட செயல்படுத்துவது எப்படி? எனப் பல்வேறு டிப்ஸ்கள் கொட்டிக்கிடக்கின்றன. டெக்னாலஜி கட்டுரைகள், செய்திகள், சுய தொழில் வெற்றியாளர்களின் பேட்டிகள், அரசு சலுகைகள் எனப் பன்முகத்தகவல்களைக் கொடுப்பதோடு சுயதொழில் முனைவோருக்கான பல வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு நூலகமாகச் செயல்படுகிறது.

படிக்க வேண்டிய புத்தகம் :பள்ளிகளில் பாகுபாடு தமிழில்: சே.கோச்சடை

கல்வி என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்தியாவில் அது மட்டும் சாத்தியமில்லை. பொதுவாகவே ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உண்டு. அதிலும் தலித் மாணவர்களின் கல்வி இடைநிற்றலுக்கு முக்கியக் காரணம் வகுப்பறையில் அவர்களுக்குக் காட்டப்படும் பாகுபாடுதான் என உண்மையை உரக்கச் சொல்கிறார் இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த சே.கோச்சடை.

ஆகவேதான்  நவீன இந்தியாவின் கல்விச்சூழலில் இந்த நூலின்  பங்கு முக்கியமானது. பள்ளிகள் எப்படிச் செயல்பட வேண்டும், கல்வியின் மகத்துவம், தூய சமூக உருவாக்கம் ஆகியவற்றில் பள்ளிகளின் பங்கு என்னென்ன என இந்தியக் கல்வி முறைகளை வடிமைத்து செயல்படுத்தும் தேசிய மன்றத்தின் அறிவுரைகள் இந்நூல் வாயிலாகப் பட்டியலிடப்படுகிறது. (வெளியீடு: மணற்கேணி பதிப்பகம், முதல் தளம், புதிய எண்: 10, பழைய எண்:288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. விலை: ரூ.30. தொடர்புக்கு: 9443033305)

பார்க்க வேண்டிய இடம்:பவானிசாகர் அணை

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ்ப் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்த்தேக்கத்திற்கு பவானிசாகர் நீர்த்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு 1948-ல் உருவான இத்திட்டம் 1955-ல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது.

இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்த்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராேலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது. இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ்ப் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது. மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Bhavanisagar_dam

அறிய வேண்டிய மனிதர்: புனிதா அரோரா

இந்திய ஆயுதப்படையின் லெப்டினென்ட் ஜெனரல், இந்தியக் கப்பல் படையின் வைஸ் அட்மிரல் போன்ற இந்திய ராணுவத்தில் உயர்பதவிகளை வகித்த முதல் பெண்மணியாக இன்றுவரை திகழும் புனிதா அரோரா  பஞ்சாபின் லாஹூர் பகுதியில் பிறந்தவர். 1963ம் ஆண்டு புனேவிலுள்ள ஆர்ம்டு ஃபோர்ஸஸ் மெடிக்கல் காலேஜில் சேர்ந்தார்.  அந்தக் கல்லூரி வரலாற்றிலே முதல் பெண் கமாண்டன்ட்டாக 2004ம் ஆண்டு சார்ஜ் எடுத்தார்.

பொறுப்பில் இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தினால் இந்தியக் கப்பல் படையில் வைஸ் அட்மிரலாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2002ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் சரியான நேரத்தில் மக்களைக் காப்பாற்றியது,
இந்திய ஆர்மி மருத்துவத் துறையின் அறிவியல் முன்னேற்றத்தில் முன்னோடியாக இருந்தது என இந்தியப் படைகளில் உயர்பதவி வகித்த முதல் பெண்ணாக துணிச்சலாகவும், சிறப்பாகவும் செயல்பட்டதன் காரணமாக இந்திய அரசு இவருக்குப் பல விருதுகள் அளித்துப் பெருமைப்படுத்தியது. இவரைப் பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Punita_Arora