+1 வேதியியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெறும் வழிகள்



+1 பொதுத்தேர்வு டிப்ஸ்

பத்தாம் வகுப்பு, +2 மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டுவந்த நிலையில் 2017-2018 கல்வி யாண்டில் கல்வித்தரம், நீட் தேர்வு பிரச்னைகளைக் காரணம் காட்டி +1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நன்றாகப் படித்துவிட்டால் எந்தத் தேர்வாக இருந்தாலும் பயப்படத்தேவையில்லை.

“மேல்நிலைத் தேர்வில் முக்கிய பாடங்களில் வேதியியல் பாடமும் ஒன்று. இந்தாண்டு புதியதாகப் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகள் பாடத்தை முழுவதும் புரிந்துகொள்ளும்படி கேள்விகள் வரும் வாய்ப்புகள் அதிகம். அதனால் துளியும் அச்சப்படத் தேவையில்லை” என்கிறார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பி.ஏ.செந்தில்குமார். அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

* மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வு நடைபெறுவதால் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே பாடங்களைத் தெளிவாகப் புரிந்து படியுங்கள்.

* வேதியியல் கணக்குகளைப் பயிற்சி செய்தல் அவசியம் ஆகும். வினா அமைப்பு முறை இல்லை. எனவே, எந்தப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கலாம்.

* மொத்த மதிப்பெண்கள் 70 ஆகும். நேரம் 2 மணி 30 நிமிடங்கள் ஆகும். இவற்றில் 1 மதிப்பெண் வினாக்கள் 15 ஆகும். இவை சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுவதாகும்.

* ஒரு மதிப்பெண் வினாக்களில் கணக்குகள் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம். எ.கா. 111 கி CaCl2-ல் காணும் மொத்த மோல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை :  மோல்களின் எண்ணிக்கை (n) = நிறை (W) மூலக்கூறு நிறை (M)
ஆகும். இவற்றில் CaCl2யின் நிறை = 111கி கணக்கில் உள்ளது. இவற்றின் மூலக்கூறு நிறை (அணுக்களின் நிறையைக் கூட்டினால் கிடைப்பது) CaCl2யின் மூலக்கூறு நிறை = 111 கி. எனவே, n=w/m=111/111=1 மோல் ஆகும். எனவே, வாய்ப்பாடுகளை முழுவதும் எழுதி படித்தல் வேண்டும். அப்பொழுதுதான் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்க முடியும்.

பகுதி II இரு மதிப்பெண் வினாக்கள் கேள்வி எண் 16 முதல் 24 வரை இடம் பெறும். இதில் மொத்தம் 9 வினாக்கள் இடம்பெறும். அதில் 6க்கு விடையளிக்க வேண்டும். இதில் கேள்வி எண் 21க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 12 ஆகும்.

* கேள்வி எண் 21-ல் காரணம் கூறுதல், கணக்கு போன்ற வினாக்கள் இடம் பெறலாம். எ.கா. கரைபொருளின் மோல் பின்னம் 0.5 மற்றும் தூய கரைப்பானின் ஆவி அழுத்தம் 0.6 atm எனில் கரைசலின் ஆவி அழுத்தத்தைக் கணக்கிடுக. PO=0.6 atm X2 = 0.5
 
\\கரைசலின் ஆவி அழுத்தம் = 0.3 atm.

* பகுதி III வினா எண் 25 முதல் 33 வரை மூன்று மதிப்பெண் வினாக்கள் ஆகும். மூன்று மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 9 இடம்பெறும். அதில் 6க்கு விடையளிக்க வேண்டும். இதில் கேள்வி எண் 30க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 18 ஆகும்.
* மூன்று மதிப்பெண் வினாக்களில் கணக்குகள், வேதிவினைகள் போன்றவை இடம்பெறலாம்.
* மூன்று மதிப்பெண் வினாக்களில் வேதிவினைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற கேள்விகள் இடம்பெறலாம். எ.கா.

(அ) CH2 = CH2 + O3

(ஆ) 3CH ≡ CH →?
(இ) C6H5Br+2Na+BrC6H5 →?
எனவே, வேதிச்சமன்பாடுகளை முழுவதுமாக படித்தல் நன்று. அதேபோன்று கணக்குகளை எழுதிப் பயிற்சி செய்தல் வேண்டும். பாடங்களை முழுவதும் புரிந்து படிப்பதன் மூலமாக மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.

* பகுதி IV-ல் 5 மதிப்பெண் வினாக்கள் மொத்தம் ஐந்து இடம்பெறும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். வினாக்கள் ‘அல்லது’ என்ற முறையில் கேட்கப்படும். 5 மதிப்பெண் வினாக்கள் ஒரே கேள்வியாக இல்லாமல் பிரித்தும் கேட்கப்படும்.
(எ.கா.)
(i) வேதிவினையின் வினைவேகத்தை வரையறு. (2 மதிப்பெண்)
(ii) வேதிவினையின் வினைவேகத்தை பாதிக்கும் எவையேனும் மூன்று காரணிகளைப் பற்றி விளக்குக.(3 மதிப்பெண்). என்பது போன்று பிரித்து கேட்கப்படும்.

எனவே, +1 வேதியியல் பாடத்தை பொறுத்தவரை முழு மதிப்பெண்கள் பெறுவதற்கு நாம் அனைத்துப் பாடங்களையும் முழுமையாக படிக்க வேண்டும். அத்துடன் அனைத்துப் பாடங்களையும் முழுவதும் புரிந்து முழு கவனத்தோடு படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

* பாடத்தில் வரும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்களைப் பெறமுடியும்.

* முழு மதிப்பெண்கள் பெறுவதற்கு கணக்கில் வரும் வாய்ப்பாடுகளை தனியாக எழுதி வைத்துக்கொண்டு கணக்குகளை தீர்வு செய்தல் வேண்டும்.

* சமன்பாடுகளைப் பெயருடன் முழுவதும் படித்து அதை நன்கு எழுதி பார்க்க வேண்டும். அப்போதுதான் சமன்பாடுகள் மறக்காமல் இருக்கும்.

* பாடங்களை முழுவதும் கவனித்தல் மற்றும் முழுவதும் பயிற்சி எடுத்தல் ஆகியவற்றின் மூலமாக முழு மதிப்பெண்களை பெற முடியும்.

முறையாக பொதுத் தேர்வு எழுதப்போகும் +1 மாணவர்களுக்கு வாழ்த்துகள்!