சிறப்பான பணிக்கு கிரேட் சல்யூட்



வாசகர் கடிதம்

தனியார் நிறுவனங்களின் படிகளில் வேலைக்காக ஏறி இறங்கி நொந்துபோனவர்களுக்கும், சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும், முயற்சியும் கொண்டவர்களுக்கும் சுயதொழில் பகுதியில் வரும் கட்டுரைகள் வரப்பிரசாதமாகும். மவுசு குறையாத மினி ஆப்செட் பிரின்டிங்! என்ற தலைப்பில் சுயதொழிலுக்கான திட்ட அறிக்கை முதல் மாத வருமானம் வரை பட்டியலிட்டிருந்தது பாராட்டத்தக்கது.
-கே.கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு.
 
பொதுவாகவே கல்வி- வேலைவழிகாட்டியின் சிறப்பு தினக் கட்டுரைகள் செழுமையாக இருக்கும். அதிலும் கல்வியின் மகத்துவத்தை  போற்றுவதற்கென இந்தியத் திருநாட்டில் ஒருநாள் உள்ளதென்பதை இந்தியாவின் தேசியக் கல்வி தினம் என்ற கட்டுரை மூலம் உணர்த்தியது வரவேற்கத்தக்கது. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்வித்துறையில் கொண்டு வந்த மாற்றங்களையும், சேவைகளையும் விவரித்ததோடு கல்வியின் முக்கியத்துவத்தையும் வாசகனுக்கு எளிமையாக உணர்த்தியது அற்புதம்.
- ஏ.பிரசன்னா, திருச்செந்தூர்.
 
 நிலத்தடி நீரின் உப்புத்தன்மையைக் குறைப்பதற்கு புதிய யுத்தியை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பு தொட்டியை மாணவர்கள் உருவாக்கியிருந்ததைப் பற்றிய கட்டுரை அபாரம். அதிலும் அக்கண்டுபிடிப்பிற்குச் சொந்தக்காரர்கள் அரசுப் பள்ளி மாணவர்களென்பதும், அப்பள்ளி இதுபோல மேலும் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது  என்பதும் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை வரச் செய்வதாக அமைந்தது. 
- எம்.முருகேசன், வாணியம்பாடி.
 
மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான பல தகவல்களை விரிவாக விவரமாக தருவதில் கல்வி-வேலை வழிகாட்டியின் சிறப்பான பணிக்கு கிரேட் சல்யூட். டிசைன் & ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளில் சேர்வதற்கான NIFT 2017 நுழைவுத்தேர்வு குறித்த கட்டுரை வழிகாட்டும் விதமாக அமைந்திருந்தது.
- ஆர்.வரதராஜன், காஞ்சிபுரம்.