செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சிமாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை, சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. மாநில குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் புதிய அணுகுமுறைகளைக் கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.

வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேரப் பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் என தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்குத் திறன்மிக்க பயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்குஓவியப் போட்டி!

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான ஓவியப் போட்டி வரும் டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ‘நம் எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றுவதற்கு, அதிக கவனத்துடன் தண்ணீரைப் பயன்படுத்தவும்’என்ற தலைப்பில் இந்த ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்தகட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்ததாகத் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24914334, 9600152202 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் திறன் தேர்வு!

பள்ளி மாணவர்களுக்கான அகில இந்தியக் கணித அறிவியல் திறமைத் தேர்வை ‘சென்டர் ஃபார் எக்சலன்ஸ்’ நடத்த உள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள்.தேர்வு முறை: ஆங்கில மொழியில் ‘மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில் பகுப்பாய்வு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.பரிசுத்தொகை: முதல் பரிசு  ரூ. 8,000, இரண்டாம் பரிசு  ரூ.2,000 மற்றும் மூன்றாம் பரிசு  1000 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2017
மேலும் விவரங்களுக்கு: www.aimstalent.com

முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து

சென்னை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முன் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக 10 நாட்களுக்கும் மேலாகப் பள்ளிகள் இயங்காததால், எஸ்.எஸ்.எல்.சி., +1, +2 வகுப்புகளுக்கான முன் அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், நேரடியாக டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.