சத்தமிட்டு சம்பாதிக்கலாம் ரூ.45,000



சுயதொழில்

நம் வீட்டில் சுபகாரியம் நடைபெறுவதை ஊருக்குத் தெரிவிக்கும் விதமாகவும், மங்களகரமான மகிழ்ச்சியான சூழலை உருவாக்கிடவும் நம் சமூகத்தில் காலங்காலமாக கெட்டிமேளம் நாதஸ்வர இசை இடம்பெற்று வந்தது.

ஆனால், நவீனகால மாற்றத்துக்கு ஏற்ப இன்றையக் காலக்கட்டத்தில் மேள தாளங்கள் ஆடியோ சவுண்ட் சர்வீஸாக மாறி இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. கிராமம் முதல் நகர்ப்புறம் வரை அனைத்து இடங்களிலும் இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.

திருமணம், கச்சேரி, திருவிழா, அலுவலக விழாக்கள், அரசியல் மேடை என அனைத்து இடங்களிலும் ஆடியோ சர்வீஸ் அவசியமான ஒன்றாகிவிட்டது மறுப்பதற்கில்லை.கூட்டமோ, கச்சேரி நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் ஆடியோ சர்வீஸ் நல்ல தெளிவாகவும், தரமாகவும் இருந்தால் மட்டுமே நிகழ்ச்சி சிறப்பாக அமையும்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நாமே நேரடியாக ஆடியோ சர்வீஸ் அமைத்துத் தரலாம். மேலும் மற்ற ஆடியோ சர்வீஸ் நிறுவனத்திற்கு நமது கருவிகளை வாடகைக்கும் கொடுக்கலாம், நமக்கு அதிக கருவிகள் தேவைப்பட்டாலும் பிறரிடம் இருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். தற்போது இப்படி ஒரு வசதிவாய்ப்போடு தொடர் வருமானம் கிடைக்கும் தொழிலாக இது உள்ளது.

சிறப்பம்சங்கள் :-

* அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் மிக அவசியமான ஒன்றாக ஆடியோ சர்வீஸ் உள்ளது.

* கிராமம் முதல் நகரம் வரை சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் முதல் பெரிய நிகழ்ச்சிகள் வரை ஆடியோ சர்வீஸ் பயன்படுத்தப்படுகிறது.

* வாடிக்கையாளர் விரும்பும் வகையில் நல்ல தரமான முறையில் ஆடியோ சர்வீஸ் செய்து கொடுத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

* இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொடங்கலாம்.

தற்போது இந்த ஆடியோ சர்வீஸ் என்பது டிஜிட்டல் மயமாக மாறி ஓர் உன்னதமான சேவையாகச் செயல்பட்டு வருகிறது. பெரிய கூட்டங்களில் பேசு
பவர்களின் ஒலியை அனைவருக்கும் எளிதாகவும், தெளிவாகவும் சென்றடைய உதவுவது டிஜிட்டல் ஆடியோ சர்வீஸ். சிறப்பான ஆடியோ சர்வீஸ் இல்லை என்றால் கூட்டம் சிறப்பாக அமையாது. இந்த ஆடியோ சர்வீஸுக்கு தேவையான பல டிஜிட்டல் உபகரணங்கள் உள்ளன. அவற்றில் ஆம்ப்ளிபயர், மைக், ஸ்பீக்கர் போன்ற அடிப்படையான உபகரணங்கள் அவசியம் தேவை.

இவற்றை நாம் வாங்கி நேரடியாக நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடலாம். நமக்கு அதிகளவில் உபகரணங்கள் தேவையெனில் மற்றவர்களிடம் இருந்து தேவையானவற்றை வாடகைக்குப் பெறலாம். அதே போல நமக்கு நிகழ்ச்சி இல்லாதபோது மற்றவர்கள் கேட்கும்பட்சத்தில் நாமும் அவர்களுக்கு வாடகை அடிப்படையில் கொடுக்கலாம்.

நமக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் நம்மிடம் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் தேவைப்படும்போது நமது உபகரணங்களை சரியாகப் பிரித்து உபயோகிக்க வேண்டும். டிஜிட்டல் ஆடியோ சர்வீஸ் அவ்வப்போது பயன்படக்கூடிய ஒன்று என்பதால் சில தனியார் நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு சிறப்பாக இந்தத் தொழிலை நடத்தலாம்.

இந்தத் தொழில் சேவைத் தொழில் பிரிவில் வருவதால் இதற்கான உபகரணங்களை வாங்க UYEGP (Unemployed Youth Employment Generation Programme)    திட்டத்தில் ரூபாய் மூன்று லட்சம் வரை கடன் பெறலாம். அதில் 25% மானியம் உண்டு. நமது முதலீடு 5% மட்டுமே போதும். அதிகமாகக் கடன் வசதி பெற PMEGP (Prime Minister’s Employment Generation Programme) என்ற திட்டத்தில் பத்து லட்சம் வரை கடன் பெறலாம். அதற்கு 25% முதல் 35% வரை மானியம் உண்டு. நமது முதலீடு 5% மட்டுமே போதும்.

திட்ட அறிக்கை

முதலீடு:
இடம்    : வாடகை
கட்டடம் : வாடகை 
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ரூ.7.35 லட்சம்
இதர செலவுகள்    :  ரூ. 0.10 லட்சம்
போக்குவரத்து    :  ரூ. 0.05  லட்சம்
மொத்த முதலீடு    :  ரூ. 7.50 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று செய்யலாம்.

மொத்த திட்ட மதிப்பீடு    : ரூ.7.50 லட்சம்
நமது பங்கு 5%    : ரூ.0.38 லட்சம்
அரசு மானியம் 25%    : ரூ.1.87 லட்சம்
வங்கி கடன்        : ரூ. 5.25 லட்சம்

தேவையான உபகரணங்கள்

1.POPE MAC 8202
Amplifier (2Nos)    - Rs.   93,800
2.POPE MAC
7202 Amplifier (2Nos)    - Rs.1,05,000
3. Two Way
Speaker (4 Pcs)    - Rs.1,93,200
4.Sub Woofer (4 Nos)      - Rs.1,48,400
5.Sterio Cross over (2 Pcs)- Rs.14,000      
6. Channel Mixer        - Rs.87,080
Tax             - Rs.93,014
Total             - Rs.7,34,495
Say Rs.7.35 Lakhs

மூலப் பொருட்கள்

மூலப் பொருள் எதுவும் இல்லை. இங்கு வாடகைக்கு மட்டுமே விடு கிறோம்.சர்வீஸ் மூலமான வருமானம் இந்த ஆடியோ சர்வீஸ் என்பது மின்னணு ஆடியோ சாதனங்களை நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் பெறுவதாகும். இதற்கு மார்க்கெட்டிங் அனுபவம் நிறைந்த நபர் அவசியம். இத்துறையில் தகுந்த அனுபவம் பெற்றவர்கள் இதில் சாதிக்கலாம்.

சீஸன் சமயங்களில் ஒரு மாதத்திற்குக் குறைந்தது 12 முதல் 15 நாட்கள் சுப நிகழ்ச்சிகள் நடக்கும், இதர மாதங்களில் குறைந்தது 8 முதல் 10 நாட்கள் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என வைத்துக்கொள்வோம்.நாம் பொதுவாக ஒரு மாதத்திற்கு 8 நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதாக வைத்துக்கொள்வோம்.

தற்போது ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர், மைக், விழா மேடை மற்றும் இதர (டியூப் லைட், சீரியல் லைட் உட்பட) உபகரணங்கள் அனைத்தும் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை ஒரு நாளைக்கு அல்லது ஒரு நிகழ்ச்சிக்கு வாடகையாகப் பெறுகின்றனர். நாம் ரூ.15,000 ஒரு நிகழ்ச்சிக்கு என வைத்துக்கொள்வோம்.

ஒரு மாதத்திற்கு 8  நிகழ்ச்சிகள்  எனில் :  ரூ.15,000 x 8 = ரூ.1,20,000  
மாத மொத்த வருமானம் ரூ.1.20 லட்சம்
மின்சாரம்

ஒரு மாதத்திற்கு ரூ.1000 மின்சார கட்டணம் என வைத்துக்கொள்வோம்.
போக்குவரத்துஉபகரணங்களை ஏற்றிச் செல்ல தேவையான போக்குவரத்து செலவு ரூ.4,000 என வைத்துக்கொள்வோம்.

வேலையாட்கள் சம்பளம்
மேலாளர் 1    : ரூ.10,000  
சூப்பர்வைசர் 1    : ரூ. 8,000  
உதவியாளர் 3    : ரூ.12,000  
மொத்த சம்பளம் : ரூ.30,000 
மொத்த செலவு
மின்சாரம்        : ரூ. 1,000  
சம்பளம்         : ரூ.30,000  
வாடகை        : ரூ.04,000  
கருவிகள் பராமரிப்பு    : ரூ.05,000  
மேலாண்மை செலவு    : ரூ.03,000
விற்பனை செலவு    : ரூ.05,000  
தேய்மானம் 15%    : ரூ.09,000
கடன் வட்டி        : ரூ.05,000  
கடன் தவணை
(60 தவணை)         : ரூ.09,000  
மொத்தம்        : ரூ.1,75,000  
லாபம் விவரம்
மொத்த வரவு        : ரூ.1,20,000  
மொத்த செலவு    : ரூ. 75,000  
லாபம்        : ரூ. 45,000

நமக்கு பார்க்கும்போது சாதாரணமாக ஆடியோ சவுண்ட் சர்வீஸ்தானே என்று தோன்றும். ஆனால், நம்பகமான உதவியாட்களோடு வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை கொடுத்தால் நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்