ஸ்டாஃப் செலக்‌ஷன் தேர்வுகள்! வேலை வேண்டுமா?



உத்வேகத் தொடர் 40

“படித்த படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லையே?”  என்பது சில பட்டதாரி களின் வேதனைக்குரலாக மாறிவிட்டது. இந்த நிலையைத் தவிர்க்க, படிக்கின்ற காலத்திலேயே ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுகள் பற்றிய தெளிவான சிந்தனையை வளர்த்துக்கொண்டு, தேர்வுக்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டால் மதிப்புமிக்க மத்திய அரசின் பணியில் சேர்ந்து சிறப்புப் பெறலாம்.

பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் அமைப்பு “ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission) ஆகும். இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்குகிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தரம்வாய்ந்த, தகுதியான நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்குவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதனை “எஸ்.எஸ்.சி.” (SSC) என்று சுருக்கமாக அழைப்பார்கள்.

இந்தியா முழுவதும் 7 மண்டல அலுவலகங்களைக்கொண்டு எஸ்.எஸ்.சி. அமைப்பு இயங்குகிறது. அலகாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, கவுஹாத்தி, சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இவைதவிர, ராய்ப்பூர், சண்டிகார் ஆகிய இடங்களில் துணை மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மண்டல அலுவலகமும் மண்டல இயக்குநர் தலைமையில் இயங்குகின்றன. ஆனால், துணை மண்டல அலுவலகம் துணை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது.

“எஸ்.எஸ்.சி.” என்னும் அமைப்பு நடத்தும் சில முக்கியத் தேர்வுகள் விவரம் வருமாறு:

1. கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன் (CGLE)
2. ஸ்டெனோகிராபர் (Grade C / Grade D)
3. கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் எக்ஸாமினேஷன் (10+2 Level) Examination) (CHSL)
4. மல்டி-டாஸ்க்கிங் ஸ்டாஃப் எக்ஸாமினேஷன் (டெக்னிக்கல் அண்ட் நான்-டெக்னிக்கல்)
5. ஜூனியர் எஞ்சினியர் எக்ஸாமினேஷன் (Junior Engineer Examination)

இந்தத் தேர்வுகள் பற்றிய விளக்கங்களை விரிவாகக் காண்போம்.

1. கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்
(Combined Graduate Level Examination) (CGLE)
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்காக நடத்தப்படுகின்ற தேர்வு “கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” (Combined Graduate Level Examination) ஆகும்.
இந்தத் தேர்வு ஆண்டுதோறும் 4 நிலைகளில் நடத்தப்படுகிறது. அவை -

(1) கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாம் (Combined Graduate Level Examination) - (நிலை-1) (Tier  1)
(2) கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாம் (Combined Graduate Level Examination) - (நிலை-2) (Tier  2)
(3) விரிவான விளக்க விடைத் தேர்வு (Descriptive) - (நிலை-3) (Tier  3)
(4) திறன் தேர்வு (Skill Test) - (நிலை-4) (Tier  4 -- ஆகியவை ஆகும்.

இந்த நான்கு நிலைத் தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக - இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் (CAG) துறையில் “அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிஸர்” (Assistant Audit Officer) பதவி, “அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீஸர்” (Assistant Accounts Officer) பதவி போன்றவை இந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கே வழங்கப்படுகிறது.

சென்டிரல் செக்கரடேரியேட் சர்வீஸ் (Central Secretariat Service) துறையில் “அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீஸர்” (Assistant Section Officer) பதவியும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே வழங்கப்படும். இன்டெலிஜென்ஸ் பீரோ (Intelligence Bureau) மற்றும் ரயில்வே துறை (Ministry of Railway), வெளியுறவுத் துறை (Ministry of Affairs) போன்றவற்றில் “அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீஸர்” (Assistant Section Officer) பணியும் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குக் கிடைக்கும்.

இவைதவிர, “இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டேக்ஸ்” (Inspector of Income Tax), “இன்ஸ்பெக்டர் ஆஃப் சென்டிரல் எக்ஸைஸ்” (Inspector of Central Excise), “பிரிவென்டிவ் ஆபீஸர்” (Preventive Officer), “எக்ஸாமினர்” (Examiner) போன்ற பதவிகளும் வருமான வரித்துறையில் வழங்கப்படுகிறது. புள்ளியியல் துறையில் - “ஜுனியர் ஸ்டேட்டிஸ்டிகல் ஆபீஸர்” (Junior Statistical Officer), “சிபிஐ இன்ஸ்பெக்டர்” (CBI Inspector), “அஞ்சல் துறை இன்ஸ்பெக்டர்” (Postal Department Inspector) போன்ற பல உயர்நிலைப் பதவிகளையும் இந்தத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் அலங்கரிக்கலாம்.

மேலும்-மத்திய அரசின் பல்வேறு துறைகளில் “அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீஸர்” (Assistant Section Officer), “அசிஸ்டென்ட் என்போர்ஸ்மென்ட் ஆபீஸர்” (Assistant Enforcement Officer), “சப்-இன்ஸ்பெக்டர்” (Sub-Inspector), “இன்ஸ்பெக்டர்” (Inspector)போன்ற பதவிகளும் இந்தத் தேர்வு மூலமே நிரப்பப்படுகின்றன.

வயது விவரம்

“கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்சமாக 30 வயதுள்ளவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். வயது வரம்பு ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப மாறுபடும். இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (SC/ST) அதிகபட்ச வயதில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.

இதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (OBC) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

பொதுவாக, அரசு அங்கீகரம் பெற்ற பல்கலைக்கழகத்தால் அங்கீரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். ஆனால், அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீஸர் (Assistant Audit Officer), அசிஸ்டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் (Assistant Accounts Officer) ஆகிய பதவிகளில் சேர விரும்புபவர்கள், பல்கலைக்கழகப் பட்டத்தோடு, இதர தகுதிகளாக சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (Chartered Accountant) அல்லது காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் (Cost and Management Accountant) அல்லது கம்பெனி செகரட்டரி (Company Secretary) ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் வெற்றி பெற்றிருந்தால் விரும்பத்தக்கதாகும்.

இவைதவிர, வணிகவியல் (Commerce), வணிக நிர்வாகம் (Business Administration), வணிகப் பொருளியல் (Business Economics) போன்ற படிப்புகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் இந்தப் பதவிக்கான தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும். ஜுனியர் ஸ்டேட்டிஸ்டிகல் ஆபீஸர் (Junior Statistical Officer) பதவிக்கு பட்டப் படிப்போடு பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். பட்டப்படிப்பில் புள்ளியியல்  (Statistics) பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்திருப்பதும் விரும்பத்தக்க தகுதியாகும்.

தேர்வுக் கட்டணம்

“கம்பைண்டு கிராஜுவேட் லெவல் எக்ஸாமினேஷன்” என்னும் இந்தத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100. இந்தத் தேர்வுக்கு “ஆன்லைன்” (Online)மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் இந்தத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வு மையம் இந்தியா முழுவதும் நடத்தப்படும் இந்தத் தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. மேலும், தென் மண்டல அலுவலகத்தோடு தொடர்புடைய குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, பாண்டிச்சேரி, ஐதராபாத், நிசாம்பாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு பற்றிய விவரங்களையும் பெற The Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, IInd Floor, College Road, Chennai - 600 006 Tamilnadu. என்னும் மண்டல இயக்குநரக முகவரியில் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.இந்தத் தேர்வின் ஒவ்வொரு நிலைகளுக்கும் வழங்கப்படும் மதிப்பெண்கள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்த இதழில் காண்போம்.

 தொடரும்

நெல்லை கவிநேசன்