+1 கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்!



+1 பொதுத்தேர்வு டிப்ஸ்

பொதுத் தேர்வு என்றதும் ஒரு சில மாணவர்கள் பதற்றம் அடைகின்றனர். திட்டமிட்டு கவனமாகப் படித்தால் எந்தப் பதற்றமுமே ஏற்படாது. +2, 10ம் வகுப்புக்குதான் பொதுத்தேர்வு என்ற நிலை மாறி இப்போது +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டாயமாகிவிட்டது. அவர்களுக்கும் தேர்வுக்கான டிப்ஸ் வழங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் “பொதுவாகக் கணக்கு என்றாலே கடினம் என்ற ஒருவித பயத்துடன் இப்பாடத்தைப் படிப்பவர்களே அதிகம்.

ஆனால், கணக்கு எனக்கு இனிக்கும் என்ற நேர்மறையான சிந்தனையோடு அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டால் கணக்கு மிக எளிதாக மாறிவிடும்” என்று நம்பிக்கையை விதைக்கிறார் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலைக் கணித ஆசிரியர் சி.மோகன். +1 கணிதப் பாடத்தில் சென்டம் வாங்கத் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்...

+1 தேர்வில் 3 மணிநேரத்தில் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு என்றிருந்ததை 2½ மணி நேரத்தில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வு என மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அக மதிப்பீட்டில் 10 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வில் 90க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் என ஒட்டுமொத்தம் 100க்கு 35 மதிப்பெண்கள் தேர்ச்சியாக கருதப்படுகிறது.

ஒரு மதிப்பெண் வினாக்கள்

வினாத்தாளில் 1 முதல் 20 வரையிலான வினாக்கள் உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வடிவில் இருக்கும். பாடப்புத்தகத்தின் கடைசியில் தொகுதி-1 (Volume-I) இல் III மற்றும் தொகுதி-II (Volume-II)இல் 49 என மொத்தம் 160 வினாக்களில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்களும், பாடப்புத்தகத்தின் உள்ளே இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் (Creative) ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் என 20 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

2 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 21 முதல் 30 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். வினா எண் 30க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தகைய வினாக்களுக்கு இரண்டு மூன்று படிகளில் (Steps) விடையளிக்க வேண்டும். விரிவாக எழுத வேண்டியதில்லை.

3 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 31 முதல் 40 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இடம்பெறும். வினா எண் 40க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 வினாக்கள் என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 4 அல்லது 5 படிகளில் (Steps) விடையளிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

5 மதிப்பெண் வினாக்கள்

வினா எண் 41 முதல் 47 வரையில் உள்ள ஒவ்வொரு வினா எண்ணிலும் ஒரு வினா (அல்லது) மற்றொரு வினா என இரண்டிரண்டு வினாக்களாக (Either or Type) இது அல்லது அது வடிவில் இருக்கும். ஒரு வினா எண்ணில் உள்ள இரண்டு வினாக்களில் ஒரு வினாவிற்கு மட்டும் விடை என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.

+1 தேர்விற்கான கேள்வித்தாள் வடிவமைப்பு (Blue Print) கொடுக்கப்படாததால் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடங்களின் தன்மை இவற்றை ஆய்வு செய்யும்போது உத்தேசமாக வினா எண் 43இல் உள்ள இரண்டு வினாக்களும் பகுமுறை வடிவியல் (Analytical Geometry) பாடத்தில் இருந்தும், வினா எண் 44இல் உள்ள இரண்டு வினாக்களும் திரிகோண மிதி (Trigonometry) பாடத்தில் இருந்தும் வினா எண் 45ல் உள்ள இரண்டு வினாக்களும் வகை நுண் கணிதம் (Diferential Calculus) பாடத்தில் இருந்தும் வினா எண் 46இல் உள்ள இரண்டு வினாக்களும் தொகையிடல் (Integral Calculus) பாடத்தில் இருந்தும் கேட்கப்படுகிறது.

 இந்த நான்கு பாடங்களில் இருந்து 8 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் நான்கிற்கு மட்டுமே விடையளிக்க முடியும். மற்ற 6 பாடங்களில் இருந்து பாடத்திற்கு ஒரு வினா வீதம் 6 வினாக்களை வினா எண் 41, 42, 47ல் எந்த இரண்டு பாடங்களில் இருந்தும் ஜோடி சேர்த்து கேட்கலாம். இதிலிருந்து மூன்று வினாக்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும் 2, 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா தனியாக வருவதால் எல்லா பாடங்களையும் நன்கு படித்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெறமுடியும்.

அணிகள், வெக்டர் இயற்கணிதம், சார்புகள், நிகழ்தகவு மற்றும் தொடர்முறையும் தொடரும் போன்ற சிறிய பாடங்கள் மெதுவாகக் கற்கும் திறனுடைய (Slow learners) மாணவர்களுக்கு அதிக நம்பிக்கையும், சிறந்த பலனையும் தரும். தினமும் அதிகாலையில் எழுந்து கடினமான பாடங்களையும், உடல் சோர்வடையும் நேரங்களில் எளிய பாடங்களையும் படித்தல் நன்று.

ஒவ்வொரு அலகின் (Unit) அடிப்படையே (Basic)+1 பாடத்தில் அமைந்திருப்பதால் இந்த பாடங்களை நன்கு ஆழ்ந்து படிப்பது அவசியமாகும். இங்குதான் நீங்கள் அதிக கணித சூத்திரங்களை சந்திக்க நேரிடும்.

இவை அடுத்து வரும் +2 வகுப்பு பாடத்திற்கும் அதிகமாகப் பயன்படுவதோடு மட்டுமின்றி மருத்துவத்திற்கான NEET தேர்வில் இயற்பியல் பாடத்திற்காகவும், AIEEE, JEE மற்றும் பல போட்டித் தேர்வுகளுக்கு அதிகம் பயன்படுவதால் கையடக்க நோட்டில் கணித சூத்திரங்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பப் படித்து நினைவுகூர்வது நல்ல பயனைத் தரும்.

நீங்கள் மிகக் கடினம் என்று கருதும் திரிகோணமிதி, வகை நுண்கணிதம், தொகை நுண்கணித சூத்திரங்களை சார்ட் (Chart) அட்டையில் எழுதி வீட்டில் நீங்கள் உறங்கும் படுக்கை அறை மற்றும் பள்ளியில் உங்கள் வகுப்பறையில் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்துப் பார்க்கும்போதெல்லாம் நினைவுகூரலாம்.

வகுப்பறையில் ஆசிரியரின் கருத்துகளை நன்கு உள்வாங்கி எந்தெந்த இடங்
களில் சூத்திரங்களைக் கையாள வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் பயமின்றி உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக படிக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடல் சோர்வைப் போக்கி மூளை சுறுசுறுப்பாக இயங்கி நினைவுத்திறன் மேம்பட வழிவகுக்கும்.பயம் கலந்த உணர்வுடன் தேர்வறைக்குள் நுழையாதீர்கள். அது உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் நீங்கள் மிகச்சிறப்பாக விடையளிக்கக்கூடிய வினாக்களை முதலில் தேர்வு செய்யுங்கள். அதிலும், நிறுவுக, எனக்காட்டுக, சரிபார்க்க (Prove, Show, Verify) போன்ற வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மேலும் இத்தகைய வினாக்களில் விடையும் சேர்ந்தே இருப்பதால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி அடுத்தடுத்த வினாக்களுக்கு சிறப்பாக விடையளிக்க வழிவகுக்கும்.

கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் அடித்தல், திருத்தங்கள் இல்லாமல் இருந்தால் போதும். தேவையான இடங்களில் படம் வரையவும்.1 மதிப்பெண் வினாக்களுக்கு 20 நிமிடம், 2 மதிப்பெண் வினாக்களுக்கு 25 நிமிடம், 3 மதிப்பெண் வினாக்களுக்கு 35 நிமிடம், 5 மதிப்பெண் வினாக்களுக்கு 50 நிமிடம் என 2 மணி நேரம் 10 நிமிடத்தில் தேர்வை எழுதி முடித்து விடுங்கள். மீதம் இருக்கின்ற 20 நிமிடங்களில் எழுதியதைச் சரிபார்க்க பயன்படுத்திக்கொள்ளுங்கள்.திட்டமிட்டு படியுங்கள். நிச்சயம் உங்களால் முழு மதிப்பெண் பெற்று சாதிக்க முடியும். வெற்றி பெற வாழ்த்துகள் மாணவர்களே!