மாதம் ரூ.95,000 வருமானம் தரும் டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு!



சுயதொழில்

பேக்கரியில் கேக் உண்ணும்போது அதில் சிவப்பு, பச்சை, மஞ்சள் என பழத் துண்டுகள் சுவையாக இருப்பதைப் பார்த்திருப்போம். இதுதான் டூட்டி ஃப்ரூட்டி. ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதும் இந்த வண்ணப் பழத்துண்டுகள் இருக்கும். இப்படிச் சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்ந்து உண்ணும் இந்தச் சிறுசிறு பழத்துண்டுகள் பப்பாளிக்காயைத் துண்டுகளாக்கி சர்க்கரையில் பதப்படுத்தி உருவாக்கப்படுவதுதான்.

டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம் கடைகள், பேக்கரிகள் மற்றும் பீடா கடைகள் உள்ளிட்ட வேறு சில சிற்றுண்டிகளிலும் இது பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை அதிகமாக உள்ளது. இது எளிதில் கெட்டுப்போகாது. சர்க்கரைப் பாகில் பல நாட்கள் ஊறவைப்பதாலும் நன்றாகக் காயவைப்பதாலும் டூட்டி ஃப்ரூட்டி பல நாட்கள் கெடாமல் இருக்கும். சாப்பிட மிருதுவாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். மேலும் இது உண்பதற்கு ஏற்ற வகையில் தரமான பொருட்களைக் கொண்டு பல வண்ணங்களாகச் செய்யப்படுகின்றன.

 இவை வீடுகளில் இனிப்புப் பலகாரம் செய்யவும் புட்டிங்க்ஸ் என்ற வகையில் தயாரிக்கப்படும் குழந்தைகளில் பலர் விரும்பி உண்ணும் உணவு வகைகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இனி இதன் தயாரிப்பு முறையைப் பார்க்கலாம். இந்த டூட்டி ஃப்ரூட்டி தொழில் உணவு உற்பத்தித் துறையில் நல்ல லாபம் தரக்கூடிய தொழில். பேக்கரி தொழில் நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில் இதன் தேவை அதிகம்.

* இந்தப் பப்பாளி அனைத்து வயதினருக்கும் ஏற்றதாகும். மேலும், குழந்தைகள் இதனை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
*  பப்பாளி ஆண்டு முழுவதும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் என்பதால் எளிதாக விளைவிக்கக் கூடியதாகும். எனவே இதற்கான மூலப்பொருள் தட்டுப்பாடு இருக்காது.
* நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
* அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

தயாரிப்பு முறை:  நன்றாக விளைந்த பப்பாளிக் காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை பச்சை நிறத்தில் இருக்கும். ஒருவேளை இந்த பப்பாளி பழமாக மாறிவிட்டால் பழத்திலிருந்து பப்பாளிப் பழச்சாறு அல்லது பழக்கூழ் தயாரித்துவிடலாம். ஆனாலும் டூட்டி ஃப்ரூட்டிக்கு பப்பாளி வாங்கும்போது கவனம் தேவை.

இந்த பப்பாளிக்காயை ஒரு எந்திரத்தில் இட்டால் அந்த எந்திரம் பப்பாளிக் காயின் மேல் உள்ள தோலை நீக்கிவிடும். பிறகு அந்த பப்பாளிக்காயை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக வெட்டி அதில் உள்ள அனைத்து விதைகளையும் நீக்க வேண்டும். பிறகு அந்த பப்பாளி துண்டுகளைச் சிறுசிறு செவ்வக வடிவில் வெட்டும் இயந்திரத்தில் இட்டால் சிறுசிறு துண்டுகளாக்கிவிடும். இந்த துண்டுகளை முதலில் 45 பிரிக் சர்க்கரை (சர்க்கரையின் திடஅளவைக் குறிக்கும்) கரைசலில் 24 மணி நேரம் ஊறவிட வேண்டும். இதில் இந்த துண்டுகள் தண்ணீர் குறைந்து சர்க்கரையை எடுத்துக்கொள்ளும்.

மறுபடியும் அடுத்த நாள் சர்க்கரைப் கரைசலை வடித்து 60 பிரிக்ஸ் சர்க்கரைப் பாகில் 24 மணி நேரம் ஊறவிட வேண்டும். மூன்றாவதுநாள் இந்த டூட்டி ஃப்ரூட்டியை 80 பிரிக்ஸ் கரைசலில் 24 மணி நேரம் ஊறவிட வேண்டும். கடைசியாக நன்றாக ஊறியபின் இதை வடித்து டூட்டி ஃப்ரூட்டியை ஓவனில் காய வைக்க வேண்டும். இதற்கு 55oC வெப்பம் போதும். 3 முதல் 4 மணி நேரத்தில் டூட்டி ஃப்ரூட்டி தயார்நிலை அடையும். இவை வெகுநாட்கள் கெடாமல் பதமாக நல்ல சுவையுடன் இருக்கும். இப்போது இவற்றை பாலிதீன் பைகள் உள்ளடக்கிய டின்
களில் அடைத்து மூடியிட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.

தமிழக அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP). இந்தத் திட்டம் மாநில அரசின் திட்டமாகும். இதில் உற்பத்தித் துறைக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம். முதல் ரூ.5 லட்சம் வரை அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் பெறலாம். உங்கள் பங்கு 5%, அரசின் மானியம் 25% (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை) மாவட்டத் தொழில் மையத்தை அணுகிப் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பாகத் திட்ட அறிக்கை தேவை.  
 
திட்ட அறிக்கை
முதலீடு (ரூ.லட்சத்தில்)
இடம்    வாடகை
கட்டடம்    வாடகை 
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்   
10.65  லட்சம்
மின்சாரம் & நிறுவும் செலவு   
0.30 லட்சம்
இதர செலவுகள்    0.40 லட்சம்
நடைமுறை மூலதனம்    1.80  லட்சம்
மொத்த முதலீடு    12.00 லட்சம்

இந்தத் தொழிலை அரசின் மானியத்
துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு    12.00 லட்சம்
நமது பங்கு 5%    0.60 லட்சம்
அரசு மானியம் 25%    3.00 லட்சம்
வங்கிக் கடன்    8.40 லட்சம்

தேவையான இயந்திரங்கள்:

*பப்பாளித் தோல் சீவும் இயந்திரம்
*சிறிய துண்டுகளாக நறுக்கும் இயந்திரம்
*வேகவைக்கும் கெட்டில் இயந்திரம்
*பாய்லர் இயந்திரம்
*உலற வைக்கும் இயந்திரம்
*பாக்கெட் போடும் இயந்திரம்

  மூலப்பொருட்கள்:

*பப்பாளிக் காய்
*சர்க்கரை 
*தேவையான வண்ணம்
*பேக்கிங் பொருட்கள்
அடிப்படை விவரங்கள்:
*பப்பாளி மொத்தச் சந்தையில் ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படு
கிறது. நாம் கிலோ ரூ.5-க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். ஒரு வாரத்திற்கு தேவையான பப்பாளி வாங்குவதால் விலை குறைவாகக் கேட்டு வாங்கலாம்.
*10Kg டின் பேக்கிங் செலவு ரூ.15

மற்றும் பாலிதீன் பேக்கிங் செலவு ரூ.2 என வைத்துக்கொள்வோம். நமக்கு ஒரு மாதத்திற்கு பேக்கிங் 1500 டின்கள் தேவைப்படும்.

*சர்க்கரை ஒரு கிலோ ரூ.30க்கு வாங்கலாம்.
*தேவையான வண்ணங்கள் சேர்க்க ஒரு வண்ணம் 1Kg ரூ.120 என வைத்துக்கொள்வோம்.

 மூலப்பொருட்களின் தேவை:

*ஒரு மாதம் தேவையான பப்பாளி  15,625 கிலோ 15,625 X Rs.5- ரூ.78,125        
*ஒரு மாதம் தேவையான சர்க்கரை 3906 கிலோ
*ஒரு மாதத்திற்கு 3906 கிலோ X Rs.30- ரூ.1,17,180
*வண்ணப் பவுடர் ஒரு மாதத்திற்கு
- ரூ. 2,000மொத்தம் - ரூ.1,97,305
 
உற்பத்தி மற்றும் விற்பனை வரவு:

*ஒரு நாளைக்கு 600 கிலோ டூட்டி ஃப்ரூட்டி தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 1500 கிலோ டூட்டி ஃப்ரூட்டி தயாரிக்க முடியும்.
*ஒரு கிலோ டூட்டி ஃப்ரூட்டி ரூ.40 to ரூ.50 வரை சில்லறை விலையில் கடையில் விற்கப்படுகிறது. நாம் மொத்த விலைக்கு விற்கும்போது ரூ.30-க்கு விற்பனை செய்யலாம்.
*ஒரு மாதத்திற்கு  1500 X ரூ.30 = ரூ.4,50,000 திற்கு விற்பனை செய்யலாம்.
 
பேக்கிங் செலவு:

*10Kg டின் பேக்கிங் செலவுரூ.15 என வைத்துக்கொள்வோம்.
*நமக்கு ஒரு மாதத்திற்கு பேக்கிங் 1500 டின்கள் தேவைப்படும்.
*1500 X 15 =  ரூ.22,500
*பாலிதீன் பேக்கிங் செலவு ரூ.3 என வைத்துக்கொள்வோம்.
*நமக்கு ஒரு மாதத்திற்கு 1500 பேக்கிங் தேவைப்படும். 1500 X 3 = ரூ.4,500     மொத்த செலவு : 27,000

 வேலையாட்கள் சம்பளம்:

சூப்பர்வைசர் 1    ரூ.6,000  
பணியாளர் 4    ரூ.20,000
தொழில்நுட்பப் பணியாளர் 2    ரூ.10,000
விற்பனையாளர்    ரூ.5,000  
பாதுகாவலர்    ரூ.7,000
மொத்த சம்பளம் ரூ.48,000

மொத்த செலவு

மூலப்பொருட்கள்    ரூ.2,00,000
பேக்கிங் மெட்டீரியல்    ரூ.25,000  
கேஸ் சிலிண்டர்    ரூ.15,000
மின்சாரம்    ரூ.16,000  
சம்பளம்    ரூ.48,000  

இயந்திரப் பராமரிப்பு    ரூ.05,000  
மேலாண்மைச் செலவு    ரூ.05,000
விற்பனைச் செலவு    ரூ.05,000
தேய்மானம் 15%    ரூ.12,000
கடன் வட்டி    ரூ.09,000  
கடன் தவணை (60 தவணை)    ரூ.14,000  
மொத்தம்    ரூ.3,55,000  

லாப விவரம் :
மொத்த வரவு    ரூ.4,50,000  
மொத்த செலவு    ரூ.3,55,000  
லாபம்    ரூ.95,000
 
சுயதொழில் செய்து சம்பாதிக்க வேண்டும்… நாமும் நாலு பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் முழு மூச்சாக உழைப்பதற்கான மனமும் கொண்டவர்கள் தாராளமாக இந்தத் தொழிலைத் தேர்வு செய்யலாம். நல்ல லாபம் ஈட்டித்தரும் அருமையான சுயதொழிலாகும்.

 தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

 ( திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சி.ஆர். பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி)