பெண்களுக்கான வேலைவாய்ப்பு திறன்மேம்பாட்டுப் பயிற்சி!



பயிற்சி

இன்றைய சமூகத்தில் மேம்போக்காக அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் பயிற்சி கொடுத்து நெறிப்படுத்தத்தான் ஆள் இல்லை. அந்தக் குறையை போக்கும் விதமாக ஒரு அமைப்பு செயல்பட்டுவருகிறது. ‘‘டீன் ஏஜ் (பதின்பருவம்) பருவமே ஒருவரைப் பக்குவப்படுத்தும் பருவம்.

அந்த வயதில் சரியான புரிதலுடன் கூடிய வழியைக் காட்டினால் அவர்களின் வாழ்நாளில் தொழில் மற்றும் குடும்பச்சூழல் உள்ளிட்ட இந்த உலக வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அவர்களால் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க முடியும்‘‘ என்கிறார் அவதார் ஹியூமன் கேபிட்டல் டிரஸ்டின் நிர்வாக இயக்குநர் சவுந்தர்யா ராஜேஷ்.

சமூகச் சிந்தனையோடு ஹியூமன் கேபிட்டல் செயல்படும் விதம் குறித்து சவுந்தர்யா விவரித்தபோது, ‘‘தமிழ்நாடெங்கும் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் கல்வி பயிலும் 13-18 வயதுக்கு இடைப்பட்ட வசதியற்ற பெண் குழந்தைகள் மத்தியில் வாழ்க்கைத் தொழில்/ எதிர்காலம் குறித்த புரிதலையும், குறிக்கோளையும் உருவாக்குவதற்காக 2017ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி புராஜக்ட் புத்ரி (பெண்களுக்கான திட்டம்) தொடங்கினோம்.

தங்களது முழுத்திறனையும் எட்டுவதற்கு தேவைப்படுகிற பல்வேறு வாழ்க்கைத்திறன்களை உருவாக்கிக்கொள்ளவும், திறனும், அதிகாரமும் பெற்றவர்களாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்’’ என்றவர், ஓர் ஆய்வு குறித்தும் விளக்கினார். 

’‘2016-ம் ஆண்டின் அவ்தார் ஹியூமன் கேபிட்டல் டிரஸ்ட்-ன் கேரியர் இன்டென்ஸாலிட்டி ஓர் ஆய்வு நடத்தியது. (வாழ்க்கைத் தொழிலுக்கான குறிக்கோள் மற்றும் விருப்ப உணர்விற்கானது). 1992-2010-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற 500-க்கும் அதிகமான மாணவர்கள் ஏழ்மை என்ற தடைகளை உடைத்து வெளியே வந்து இன்றைக்கு அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கு எவை காரணமாக இருந்தன என்று அறிவது - புரிந்துகொள்வது இந்த ஆய்வின் குறிக்கோளாக வைக்கப்பட்டது.

2016, செப்டம்பரிலிருந்து ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வாழ்க்கைப்பணி/தொழிலில் ஆரம்பநிலையில் ஒரே நிறுவனத்திலேயே 8 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றி வருகிற 1488 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 34% அல்லது 496 பெண்கள் வசதி குறைவான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் நகராட்சி / அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்.

இந்தியா முழுவதையும் சேர்ந்த இந்த 496 பெண்கள் அனைவருமே, சமூக - பொருளாதார ரீதியாக சவால் நிறைந்த பின்னணிகளைச் சேர்ந்த பெரும்பான்மையான பெண்களால் பின்பற்றப்படுவதிலிருந்து மாறுபட்ட பாதையை தேர்வுசெய்து அதில் வெற்றிகரமாக பயணித்திருக்கின்றனர்.ஒயிட்காலர் பணிகள் / அலுவலக பணிகள் பணிப் பொறுப்புகளில் தற்போது பணியாற்றி வருகின்ற இப்பெண்கள், வறுமை என்ற சிறையை உடைத்து வெளியே வந்து, தங்களுக்கென ஒரு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதில் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர்.

கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மீது பரிட்சயம், முன்மாதிரி நபர்கள் (ரோல் மாடல்கள்) மற்றும் வழிகாட்டும் ஆலோசகர்கள் ஆகிய அம்சங்கள்தான் வசதி குறைவான பின்னணிகளிலிருந்து வருகிற பெண்களை தரம் உயர்த்தி,  வாழ்க்கைத் தொழிலை / பணியை சரியாக தேர்வுசெய்ய வழிகாட்டுகிற முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன என்பது தெரியவந்தது” என்றார்.

மேலும் அவர், ‘‘புத்ரி ஸ்காலர் (இந்தத் திட்டத்தின் உறுப்பினர்) என்று நாங்கள் அழைக்கிற, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 30 அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி பள்ளிகளிலிருந்து சுமார் 1500 மாணவர்கள் புத்ரியின் கேரியர் குறிக்கோள் வழிகாட்டல் செயல்திட்டத்தின்கீழ் தொடர்ந்து உரிய ஆலோசனையோடு வழிநடத்தப்பட்டுவருகின்றனர்” என்றவர்,  இதில் இடம்பெறுவதற்கான தகுதி குறித்து விளக்கினார்.

‘‘அரசு / அரசு உதவிபெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மட்டும் சேர்க்கப்படுவர். 12 - 18க்கு இடைப்பட்ட வயது. மேலதிகமாக படிக்கவும் மற்றும் வாழ்க்கையில் சாதிக்கவும், துடிப்பும், பேரார்வமும் கொண்டிருப்பவர். ஓர் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த ஒற்றை பெற்றோரின் மகள். ஆகியவற்றை தகுதியாகக் கொண்டவர்களையே தேர்வு செய்கிறோம்.

தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு 5 ஆண்டுகள் (ஒவ்வொரு கல்வியாண்டிலும் 30 மணி நேர பயிற்சியளிப்பு) என்ற காலஅளவில் எமது பல்வேறு இடையீட்டு நடவடிக்கைத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பெண் உறுப்பினரும் அவரது வாழ்க்கையில் கேரியரை குறிக்கோளாகக்கொண்ட ஓர் இலக்கை அடைவதற்கு தன்னையே திறன்மிக்கவராக ஆக்கிக்கொள்வதற்கு ஏதுவாக்குகிறவாறு, 40 வாழ்க்கைத்திறன் தகுதிநிலை பயிற்சிகள் மற்றும் வாழ்க்கைக்கான அடிப்படை மாற்றத்தின் 8 முக்கிய பரிமாணங்கள் உள்ளன’’ என்கிறார்.

என்னென்ன பயிற்சிகள் என்பதைப் பற்றி கூறும்போது, ‘‘வாழ்க்கைத்திறன் பயிற்சியளிப்பு அமர்வுகள் என்பது, பகுப்பாய்வு திறன்கள், மனப்பாங்கு மற்றும் ஆளுமைத்திறன் உருவாக்கல், படைப்பூக்க மற்றும் திறனாய்வுச் சிந்தனை, நம்பிக்கை மற்றும் முடிவெடுக்கிற திறன்கள், மீண்டுவரும் தன்மை, மனித மாண்புகள், புரிந்துணர்வு மற்றும் உணர்வுசார் நுண்ணறிவு, சுய மதிப்பீடு மற்றும் மனஅழுத்த மேலாண்மை,  உடல்நலம் மற்றும் தூய்மை, ஊட்டச்சத்து, டிஜிட்டல் அறிவு, நிதிசார் விவேகம், தொழில்முனைவுத் திறன், தற்காப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.’’

‘‘புத்ரி திட்ட உறுப்பினர் ஒவ்வொருவரும் வாழ்க்கையில், தங்களது கேரியர் குறிக்கோள் உள்ளவராக மாறுவதற்கு புராஜக்ட் புத்ரியில் செயலாற்றும் நாங்கள் உத்வேகமளிக்கிறோம் மற்றும் கல்லூரி / உயர்கல்வி கற்பதை ஏதுவாக்குகிறோம். இவ்வாறாக, கல்விசார்ந்தும் மற்றும் சாராத பிறவற்றிலும் சிறப்பாக அவர்கள் செயல்பட ஏதுவாக்கி, மனஉறுதியையும், திடமான நம்பிக்கையையும் உருவாக்கிக் கொடுக்கிறோம்.

வேலைவாய்ப்புகளுக்கு உறுதியான உத்தரவாதத்தை நாங்கள் தருவதில்லை; எனினும், ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக, எமது கேரியர் பயிற்றுநர்கள் வழியாக, ஜாப் பிளேஸ்மென்ட்டுகள், அவர்களுக்கு கிடைப்பதற்கு உதவுகிறோம். ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட திறன்நிலைகளை அவர்கள் மதிப்பீடு செய்து அவர்களது அறிவு மற்றும் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுகிறோம்’’ என்று முத்தாய்ப்பாக முடித்தார் சவுந்தர்யா.

- தோ.திருத்துவராஜ்