வெயிலோடு விளையாடி... விடுமுறையைக் கொண்டாடுவோம்!



சமூகப் பார்வை

அரசுப் பணியாகட்டும் அல்லது தனியார் பணியாகட்டும் நன்கு படித்து மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது. அதனால்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைப் படிபடி என இவ்வளவு நாளும் படிக்க வைத்தார்கள். படித்தவற்றை சோதித்தறிய பரிட்சையும் வைத்து முடிந்தாயிற்று.

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி மனஅழுத்தத்தில் இருந்த மாணவர்களுக்கு இந்த இரண்டு மாத விடுமுறை காலமே புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அதற்கு அவர்கள் உளவியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் எப்படித் தயாராவது என விளக்கு கிறார் மருத்துவரும் சமூக ஆர்வலருமான பிரீத்தி நிலா.

“பள்ளிப் பாடம், வீட்டுப் பாடம், படிப்பு என்றிருந்த பிள்ளைகளை மகிழ்ச்சியின் உச்சிக்குக் கொண்டு செல்வது  முழு ஆண்டு விடுமுறை நாட்கள் மட்டுமே. அந்த விடுமுறை கொண்டாட்டத்திற்கும் வேட்டு வைப்பதுபோல் படையெடுத்து வந்துவிட்டது பல சம்மர் கோர்சஸ்.

விடுமுறையிலும் வகுப்பா எனப் பிள்ளைகள் கதறுவதைப் பொருட்படுத்தாது மீண்டும் பெற்றோர்களால் குழந்தைகள் வேறொரு அறைக்குள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.படிப்பு படிப்பு என படித்து மனஅழுத்தத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகள் இந்த விடுமுறை நாட்களை எவ்வாறு கொண்டாடலாம் என்ற எதிர்பார்ப்போடு இருப்பார்கள்.

ஆனால், இந்த விடுமுறை நாட்களில் Learning Skill Development Class. Thinking Skill Development Class. Coognitive Skill Develoment Class. Gross Motor Skill Development Class. Fine Motor Development Class. Social Skill Development Class என்று பலவிதமான Skill Development Class-க்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் திட்டமிட்டிருப்பார்கள். இப்படி இந்த விடுமுறைக் காலங்களிலும் அவர்களை ஏதாவது ஒன்றை படிக்கச் சொல்வது அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தத்தைக் கூட்டிவிடும்.

அதனால், இந்த நீண்ட பட்டியலை யோசிக்கும் முன்னதாகவே ஒரு பெரிய ‘நோ’  சொல்லிட்டு வீட்டிற்கு உள்ளேயும், வெளியில் மற்ற குழந்தைகளோடும் நம் பாரம்பரிய மரபு விளையாட்டுகளை விளையாடி மனதாலும் உடலாலும் மகிழ்ச்சியடைய பிள்ளைகளைத் தயார்ப்படுத்த வேண்டும். ஏனென்றால், மரபு விளையாட்டு என்பது அத்தனை Skill Development திறன்களையும் கொண்டுவரும் ஒரு மாயாஜால பேக்கேஜ் ஆகும்’’ என்கிறார்.

மரபு விளையாட்டுகளின் அறிவியல் பொதிந்த பயன்பாடுகளைப் பட்டியலிடத் தொடங்கிய அவர், “வெற்றி தோல்விகளை ஒன்றாகப் பாவிக்கும் தன்மை, குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், சிந்தனைத்திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன் போன்ற உளவியல் ரீதியான மாற்றங்களோடு கை கால்களை வலுவாக்கி உடல் ஆரோக்கியத்தைத் தருவது மரபு விளையாட்டுகள்.

சில்லாக்கு, உத்தி பிரித்தல்,  சாட் பூட் த்ரீ, கிட்டிப்புள்ளு, தட்டாங்கல், கண்ணாமூச்சி, அட்லாங்காய் புட்லாங்காய், கோலி, பம்பரம் என நீளும் நூற்றுக்கணக்கான மரபு விளையாட்டின் பட்டியல்களில் இடம்பெற்றிருக்கும் விளையாட்டுகள் பொழுதுபோக்காகத் தெரிந்தாலும் ஒவ்வொன்றும் நம் உடலுக்கு ஒவ்வொரு நன்மையை அளிக்கவல்லது.

தட்டாங்கல் விளையாடும்போது மேலே கல் போய் கீழே வருவதற்குள் கீழே கிடக்கும் கற்களையும் சேர்த்துப் பிடிக்க வேண்டும். இதன் மூலம் கவனத்திறன் அதிகரிக்கும். மனமும் சிந்தனையும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே விளையாட முடியும். இந்த விளையாட்டு ஒரேநேரத்தில் பலவித செயல்பாடுகளில் நம்மை இயங்க வைக்கும். இவ்வாறான விளையாட்டுகள் ஒரு பணியின்போது சுற்றியிருக்கும் பலவற்றை உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும்.

விழிப்புடன் இருக்க கற்றுத்தரும் குலை குலையா முந்திரிக்கா, போட்டியை சமாளிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் கல்லா மண்ணா, பகிர்ந்து அளிக்கும் எண்ணத்தையும், கணக்கையும் கற்றுத்தரும் பல்லாங்குழி, கால்களுக்கு வலுவை கூட்டும் நொண்டி விளையாட்டு, உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து செயல்படவைக்கும் பாண்டி விளையாட்டு என ஒவ்வொரு விளையாட்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது’’ என்கிறார்.

பிள்ளைகளின் தனித்திறன் மற்றும் உடல்வலிமைக்கு மரபு விளையாட்டுகள் பெரிதும் பயன்படும் என்று சொல்லும் பிரீத்தி நிலா சில உதாரணங்களை விவரிக்கும்போது “கணினி, தொலைக்காட்சி என்று இயந்திரங்களோடு மட்டுமே அதிக நேரம் செலவிடும் பிள்ளைகள் உணர்வுகளை கையாளத் தெரியாத பிள்ளைகளாக வளரத் தொடங்குகிறார்கள். குழுவாக விளையாடும் போது குழுவாக இணைந்து ஒரு விளையாட்டை வெல்லும் வியூகம் பிற்காலத்தில் டீம் வொர்க்காக செயல்படும்போது உதவுகிறது.

அணித்தலைவனாக செயல்படும் விளையாட்டுகளில் ஒரு விளையாட்டை வெல்ல செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பிற்காலத்தில் டீம் லீடராக எப்படி குழுவை ஒருங்கிணைத்து வெற்றியடைவது என்று புரியவரும். மரம் ஏறி விளையாடுவதன் மூலம் கடினமான இலக்கை பயமில்லாமல் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை பிறக்க வைக்கும்.

ஆற்றுநீரில் விளையாடுவதும் நீந்துவதும் உடலில் உள்ள அத்தனை நரம்புகளையும் இயக்கி ஆரோக்கியத்தைக் கூட்டும். காகிதத்தில் மட்டுமே பறவைகளையும் விலங்குகளையும் பார்த்த குழந்தைகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் மண்புழுவில் தொடங்கி சிட்டுக்குருவி,  நாரை, கொக்கு, குளம், குட்டை, ஏரி, ஆறு, வாய்க்கால் என குழந்தைகள் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அங்கு அழைத்துச் செல்லுங்கள்.

ஒரு மாதத்திற்குள் விளையும் காய், கீரைகள், பூக்களை பிள்ளைகளுக்கு பயிர் செய்ய சொல்லி கற்றுத்தரலாம். பாத்தி கட்டுவது, விதை தூவுவது தண்ணீர் ஊற்றுவது என அவர்களை இயற்கையோடு உறவாடவிடலாம். தாத்தா பாட்டி ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களைப் பார்ப்பதன் மூலம் பெரியவர்களுக்கு மரியாதை தரும் பழக்கத்தை, அவர்கள் வாழும் சூழல் பிள்ளைகளுக்கு பல விஷயங்களைக் கற்றுத்தரும்.

இரவு நேரத்தில்  பாட்டி, தாத்தா சொல்லும் கதைகள் பிள்ளைகளின் கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்யும். கதையின் இடையில் ஆடும் வார்த்தை விளையாட்டு மிகச் சிறந்த பேச்சுப் பயிற்சியாகும். குலதெய்வ வழிபாடு, மலையோரம் இருக்கும் கோவில்கள், அங்கே இருக்கும் பெரிய ஆலமரம் அதன் விழுதோடு விளையாட்டு என இந்த விடுமுறையைக் கொண்டாட்டமாகவும் படிப்பினையாகவும் நாம் மாற்றலாம்.
இப்படி வெயிலோடு விளையாடி…

ஆட்டம் போட்டு, கண்டுகளித்து, உறவாடி… உடலாலும் உள்ளத்தாலும் புத்துணர்வு பெற்று மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் குழந்தைகள் அங்கே திறன்மிக்க பிள்ளைகளாக  இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை’’   என்று  ஆணித்தரமாகச்  சொல்கிறார் பிரீத்தி நிலா.  

- தோ.திருத்துவராஜ்