இன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...



டேலன்ட் ஸ்டூடண்ட்

தமிழகத்தின் மருத்துவ மாணவர்!

தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் மாணவர்களைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது நம் அனைவரையுமே பெருமிதமடையச் செய்கிறது. அந்தவகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஹேமசந்திரனுக்கு இந்திய அரசு 2017-2018ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞானி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. நியூட்டனின் புவிஈர்ப்பு விசைக்கு மறுவிதியை உருவாக்கியமைக்கே இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

இவரது மறுவிதிக் கட்டுரை இங்கிலாந்து அரசின் உயரிய பட்டமான ‘சர்’ பட்டம் மற்றும் நோபல் பரிசும் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஹேமசந்திரன் மணிப்பூர் நிகழ்ச்சியில் விருது வாங்கிய மகிழ்ச்சியோடும் நம் நாட்டுக்காக இன்னும் செய்ய வேண்டிய  பணிகள் பல உள்ளன என்கிற தகவல்களோடும் பேச ஆரம்பித்தார்.

‘‘சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறேன். சர்வதேச இளைஞர்கள் ஆராய்ச்சிக் கழகம் (International Youth Research Foundation) வழியாக எனது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேன். இந்த ஆராய்ச்சி நிறுவனம் உலகத்தின் அனைத்து ஆராய்ச்சி அமைப்பு களுடனும் தொடர்பில் உள்ளதாகும். இந்த நிறுவனமே இந்தியாவில் இருந்து சர்வதேச விருதுகளுக்குப் பரிந்துரை செய்யும்.

சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மூலம் அண்டத்தில் உள்ள கோள்கள் சுழலுகின்றன. அதேபோல் பூமியும் சுழலுகின்றது என்பதுதான் நியூட்டனின் புவியீர்ப்பு பற்றிய பொது விதி. அதில், எனக்குத் தோன்றிய சந்தேகங்கள் குறித்து சுமார் நான்கு ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தேன். அப்போது, ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியான காந்தசக்தி உள்ளது.

அதன் அடிப்படையில்தான் ஈர்ப்பு விசை இயக்கப்படுகிறது எனக் கண்டறிந்து ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். இந்த ஆய்வுக் கட்டுரை இங்கிலாந்தில் இருந்து சர்வதேச அளவில் வெளியாகும் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. சர்வதேச விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்த இந்த ஆய்வை மேற்கொண்ட ஹேமசந்திரனுக்கு நியூட்டனுக்கு வழங்கிய சர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர். அந்தச் செய்தியும் அதே பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.  

இவ்விரு செய்திகளும் நம் இந்திய விஞ்ஞானிகளின் கவனத்திற்கு வந்தது. இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் உலக ஆராய்ச்சியாளர்கள் வட்டமேஜை மாநாட்டில் இந்த ஆய்வு குறித்து விளக்கவுரையாற்ற அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மணிப்பூரில் கடந்த மார்ச் 16ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெற்ற 105-வது உலக ஆராய்ச்சியாளர்கள் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கவுரை ஆற்றினேன். இதனையடுத்து இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிக்கான பட்டம் மற்றும் மாண்புமிகு (Honorable) என்ற உயரிய விருதும் வழங்கப்பட்டது.

இந்த விருது இந்தியாவின் மிக உயரிய விருது என்பதால் இதைப் பெறுவது அனைத்து விஞ்ஞானிகளுக்கும்  வாழ்நாள் கனவாகவே இருக்கும். ஆண்டிற்கு ஒரு விஞ்ஞானிக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த உயரிய விருதை நீண்ட காலமாக ஆராய்ச்சித் துறையில் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மட்டுமே பெற்று வருகின்றனர். உதாரணமாக, சர்.சி.வி.ராமன் முதல் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வரை பலர் இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், இருபத்தியொரு வயதிலேயே இந்த விருதை நான் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து அரசாங்கம் ‘சர்’ பட்டங்களில் ஒன்றான ‘நைட் பேச்சுலர்’ (Knight Bachelor) விருது வழங்கி கவுரவிக்கவுள்ளது. இந்தியாவில் இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்குப் பிறகு இரண்டாவதாக எனக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்குப் பின்னர் உலகத்தின் சிறந்த விஞ்ஞானி என்ற அந்தஸ்து கிடைக்கும்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

 மணிப்பூர் நிகழ்ச்சிக்கு சென்றபோது நடந்த சுவையான அனுபவத்தைப் பற்றி குறிப்பிடும்போது, ‘‘விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நான் நம் தமிழ் பாரம்பரியத்தின்படி வேட்டி சட்டை அணிந்து சென்றிருந்தேன். என்னைப் பார்த்த காவலர்கள் உள்ளே விடவேயில்லை. அவர்களிடம் அடையாள அட்டையைக் காண்பித்து விருது பெற வந்திருக்கிறேன் என்றதும் சல்யூட் அடித்து அழைத்துச் சென்றனர்.  

எனது ஆய்வுக் கட்டுரையில் ‘அண்டத்தின் ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஈர்ப்புச்சக்தியை விரிவுபடுத்துகின்றன. இந்த ஈர்ப்பு பிற பொருட்களின் ஈர்ப்புச் சக்தியுடன் தொடர்புகொள்ளும்போது அது மோதல் சக்தியை உற்பத்தி செய்கிறது. இதுவே அப்பொருளின் வடிவம், செயல்பாடு, நிலைத்ததன்மை , நிலைப்பாடு என்று அனைத்தையும் நிர்ணயம் செய்கின்றது.

இந்த ஈர்ப்புச்சக்தியானது அந்தப் பொருட்களின் வேகத்திற்கும் அளவிற்கும் நேரடி விகிதாசாரமாகும்’ என்பதையே விவரித்துள்ளேன். இந்த விதியை இனி ஹேமச்சந்திரன் ஈர்ப்புவிசை விதி எனச் சொல்லலாம்.  “ஹேமச்சந்திரன் ஈர்ப்புவிசை = மேற்பரப்பு ஈர்ப்புவிசை X பொருட்களின் வேகம்’’
 அதுமட்டுமின்றி இந்த ஆராய்ச்சியின் மூலமாகக் கடல்நீர் ஏன் இன்னும் பூமியைவிட்டு வெளியேறாமல் உள்ளது, காற்று ஏன் வீசுகிறது, உயிர்கள் தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணம் என்று பல கருத்துகளை எடுத்துரைத்துள்ளேன்.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரை நோபல் பரிசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக நோபல் பரிசும் வாங்கித் தருவேன்’’ என்றவர், தனது அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் பற்றியும் கூறினார்.‘‘என்னால், மருத்துவம் சம்பந்தப்பட்ட பல உதவிகளை அரசிற்கு செய்து தரமுடியும். தற்போது, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முயன்று வருகிறேன், விரைவில் அதையும் முடிப்பேன். இறுதி முயற்சியாக இதற்கு மாதிரி எடுக்க வேண்டும். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியவுடன் அதையும் வெற்றிகரமாக முடிப்பேன். இதனால், எய்ட்ஸ்நோயைக் குணப்படுத்த முடியும். இதற்கு அரசின் உதவி முழுவதும் தேவை.

அதேபோல், ராணுவத்தில் எதிரிகளை எளிதில் வீழ்த்தும் வகையில் தன்நிலை மறக்க செய்யும் திரவ மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இந்த மருந்தை எதிரிகள் மற்றும் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் சத்தம் வராத துப்பாக்கி மூலம் செலுத்தும்போது மருந்தில் இருந்து வெளிப்படும் திரவப்பொருளால் தீவிரவாதிகளின் கை, கால்கள் செயலிழந்து போகும். அச்சமயம் எதிரிகளை எளிதில் நம்மால் வீழ்த்தமுடியும். இந்த மருந்தைச் சுமார் 2 ஆயிரம் மீட்டரில் இருந்து கூட எதிரிகளை நோக்கிச் செலுத்தமுடியும். இதை விரைவாக செய்துமுடித்து ராணுவத்திற்கு வழங்குவேன்’’ என்றவர் தனது எதிர்காலக் கனவுகள் பற்றிக் குறிப்பிட்டார்.

‘‘இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் வாழ்வு மலர எனது ஆராய்ச்சிகள் மூலம் வழிசெய்வேன், உலக நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியாவை முதல் இடத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்வேன். இதுதான் எனது எதிர்காலக் கனவு,  லட்சியம். அதற்காகவே உழைத்து வருகிறேன்’’ என்றார் நிறைவாக!இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற நம் தமிழக மாணவர் நோபல் பரிசும் பெற நாமும் நமது வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்வோம்.

  - தோ.திருத்துவராஜ்