கடற்படையில் தொழில்நுட்ப படிப்புடன் அதிகாரி பணி!



அட்மிஷன்

+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடற்படை, தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வுசெய்து அவர்களை குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்துவருகிறது.முப்படைகளில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்றி, சாதனைகள்புரிவது என்பது பல மாணவர்களின் கனவு. துடிப்பும், துணிவும் இவற்றுடன் சேர்ந்து அறிவுநுட்பமும் உள்ள மாணவர்களுக்கு இந்தியக் கடற்படையில் சேரத் தேவையான B.Tech. படிப்பை இந்தியக் கடற்படை தருகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாரி பதவியையும், இன்னும் உயர் பதவிகளுக்கு செல்லத் தேவையான வாய்ப்புகளையும் இந்தியக் கடற்படைத் தருகிறது. அதன்படி N.D.A (National Defence Academy), CDS (Combined Defence Service) இவற்றைத் தொடர்ந்து 10, +2 (B.Tech) Cadet Entry Scheme (Permanent Commission) போன்றவை சிறப்பான வாய்ப்புகளாகும்.

விண்ணப்பிக்கத் தகுதிகள்

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் +2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 70 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடும் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் JEE (Joint Entrance Examination) தேர்வு எழுதியிருக்க வேண்டும். இத்தேர்வின் அகில இந்திய தரவரிசை அடிப்படையில் இவர்கள் SSB (Service Selection Board) மூலம் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2.7.1999 - 1.1.2002 இந்த தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: இவர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும் இதற்கேற்ற எடையையும் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கண் பார்வை 6/6, 6/9 இதிலிருந்து 6/6, 6/6 என்று சரி செய்யக்கூடியவாறு இருக்க வேண்டும். நிறக்குறைபாடும், மாலைக்கண் குறைபாடும் இருக்கக்கூடாது. நிரந்தர உடல் குறைபாடு இருக்கக்கூடாது. மலைவாழ் மக்களுக்கு சில குறைபாடுகளுக்கு விதிகள் தளர்த்தப்படும். திருமணமாகாத ஆண்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க இயலும்.

கடற்படை வாய்ப்புகள்

படிப்பையும், பயிற்சியையும் முடித்து கடற்படையின் நிரந்தர சேவையில் வேலை பெறுபவர்கள், சப் லெஃடினென்ட் (Sub-Leftenant) என்ற அதிகாரி பதவியைப் பெற்று பின் படிப்படியாக லெஃடினென்ட் (Leftenant), லெஃடினென்ட் கமாண்டர் (Leftenant Commander), கமாண்டர் (Commander) என்ற உயர்பதவிகளைப் பெறலாம். பல சலுகைகளும், சிறந்த ஊதியமும், டெக்னிக்கல், இன்ஸ்ட்ரக்சனல், பிளையிங், சப்மெரைன், டைவிங், சீ கோயிங், யூனிஃபார்ம், ஹார்ட் ஏரியா, ஹவுஸ் ரெஸ்ட், டிரான்ஸ்போர்ட் போன்ற பல்வேறு அலவன்ஸ்கள் தரப்படும்.
என்ன படிப்பு? எங்கே படிக்க வேண்டும்?

இந்திய கடற்படை கல்விக் கழகம் (Indian Naval Academy) கேரளாவில் எழில் மலாவில் உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் இங்கே 4 ஆண்டுகள் பின்வரும் வகையில் படிக்க வேண்டும்.

1. பி.டெக். (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் - எக்ஸிகியூட்டிவ்)
2. பி.டெக். (மெக்கானிக்கல் - எஞ்சினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர்)
3. பி.டெக். (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்) என்ற ஏதேனும் ஒரு பிரிவில் படிக்க வேண்டும். இதற்கான பட்டம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தரப்படும்.

தேர்வு முறை

ஜெ.இ.இ. மெயின் அகில இந்திய தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் சர்வீஸ் செலக்சன் போர்டு (Service Selection Board) நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இத்தேர்வு இரண்டு நிலைகளில் நடக்கும்.
முதல் நிலையில் (Stage I) இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் (Intelligence Test), பிக்சர் பர்சப்ஷன் (Perception Test), குரூப் டிஸ்
கஷனும் (Group Discussion Test), இரண்டாம் நிலையில் (Stage II) சைகலாஜிக்கல் ெடஸ்ட் (Psychological Test), குரூப் டெஸ்ட் (Group Testing), இண்டர்வியூ (Interview) இவை நடைபெறும்.

இத்தேர்வு பெங்களூரு, போபால், கோயம்புத்தூர், விசாகப்பட்டினம் ஆகிய ஏதேனும் ஒரு மையத்தில் நடைபெறும். நேர்முகத் தேர்விற்கு பின் மருத்துவப் பரிசோதனை நடைபெறும்.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இந்திய கடற்படையில் பி.டெக். படிப்பு மற்றும் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், இணைய
தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.6.2018.
விண்ணப்பிக்கும் முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வதோடு, மெட்ரிகுலேசன் சான்றிதழ் எண்ணையும் தயாராகவைத்துக்கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும்.

இறுதியாக விண்ணப்பம் சமர்ப்பித்ததும் பூர்த்தியான விண்ணப்பத்தை, 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும்.
மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

முனைவர் ஆர்.ராஜராஜன்