கல்வியைக் காக்க களப்பணியாற்றுவோம்!



புது முயற்சி

‘மக்களிடம் கல்விக் களப்பணியாற்ற தொண்டர் படை ஊருக்கு் 10 பேர்’ என்ற முழக்கங்களோடு பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் நீண்ட காலமாக சமூகநீதிக் கோரிக்கைகளுக்கும் குழந்தைகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்துவரும் கல்வியாளர்கள் வே.வசந்திதேவி, ச.சீ.இராசகோபாலன், ச.மாடசாமி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இவ்வமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்விச் செயல்பாட்டாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இவ்வமைப்பில் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்ற உள்ளனர். இவ்வமைப்பின் நோக்கங்கள் குறித்து பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் முனைவர் வே.வசந்திதேவி நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…  

‘‘நம் நாட்டில் கல்வி தாழ்வுற்று, தன் மாண்பனைத்தையும் இழந்து, கொடிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டு, தனியார்மயமாகி, வணிகமயமாகிக் கிடக்கிறது. தெள்ளத்தெளிவான இவ்வுண்மைகளை விளக்க வேண்டிய தேவையில்லை. பொறுப்பேற்கவேண்டிய மத்திய - மாநில அரசுகள் கல்வியைச் சந்தைக்கு விட்டுவிட்டு விலகிக்கொண்டுவிட்டன. குழந்தைப் பருவமே மறுக்கப்பட்டு, மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகத்திற்குக் குழந்தைகள் பலியிடப்படுகிறார்கள்.

பல்லாண்டு காலப் போராட்டங்களுக்குப் பின் கல்வி உரிமைச் சட்டம் 2009, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாடு முழுவதிலும் 10% பள்ளிகள்தான் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கின்றன. தற்போது ஒரு சீர்திருத்த முயற்சியாக மாநில அளவிலான பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணிக்கும் இயக்கம்.

இது கல்வியில் மக்கள் தங்களுக்குச் சட்டம் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் உணர்வையும், விவரங்களையும் அளிக்கும். ‘People as Auditors’ என்பது அவர்களின் லட்சியம். ‘People as Watchdogs’ அல்லது ‘People as Monitors’ என்பது எமது லட்சியம். கல்வி உரிமைச் சட்டம், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை மேற்பார்வை பார்க்கும் அதிகாரமும், பள்ளிக்கு வேண்டிய திட்டமிடும் அதிகாரமும் பள்ளி மேலாண்மைக் குழுவிடம்தான் அளித்திருக்கிறது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருபது பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட வேண்டும். குழு உறுப்பினர்களில் 75% பேர் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்க வேண்டும். குழு குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை கூடவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

குழுக்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. பள்ளித் தலைமை ஆசிரியரோ, மற்றவரோ தன்னிச்சையாகக் குழுக்களை அமைக்கின்றனர்’’ என்று குறைகளைப் பட்டியலிடுகிறார் வசந்திதேவி.மேலாண்மைக் குழுவின் பணிகள் என்னென்ன என்பதையும் விவரித்தபோது, ‘‘ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு வருகின்றார்களா? நன்கு கற்றுத் தருகின்றார்களா? குழந்தைகள் திறன்களை அடைகின்றார்களா? பின்தங்கிய மாணவர்களுக்குத் தனிக் கவனம் அளிக்கப்படுகிறதா? நிதி சரியாக செலவு செய்யப்படுகிறதா போன்ற அனைத்தையும் குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து அரசு, உதவி பெறும், தனியார், கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளிலும் அவசியம் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உரிய வகையில் நிறுவப்பட்டு, சிறப்பாக இயங்குவதைக் கண்காணித்து குறைகளை சரிசெய்வதுதான் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் பணி.’’ என்கிறார்.

மேலும் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி கூறுகையில்,‘‘இந்த இயக்கம் கல்வி கிராம சபைகளின் முக்கிய பிரச்னையாக மாற முயற்சிகள் மேற்கொள்ளும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிரச்னைகள் கல்வி மேலாண்மைக் குழுக்கள் வழியாக கிராம சபைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தனியார் பள்ளிகள் குறித்தவை நேரடியாக கிராம சபைகளில் எடுத்துக் கொள்ளப்படும்.

கிராம சபைகளை இவைக்குறித்த தீர்மானங்களை நிறைவேற்ற ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திற்குப் பல நாட்களுக்கு முன்னாலிருந்து தயாரிப்புகள் செய்யப்படும். சமுதாயத்தின் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டோர் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் முன்னுரிமை அளிக்கும்.

அவர்களது பள்ளிகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான இப்பள்ளிகள் குறைந்தபட்சத் தரம் கொண்ட கட்டடங்களோ, அடிப்படை விடுதி வசதிகளோ, தண்ணீரோ, கழிவறைகளோ, போதுமான ஆசிரியரோ, மேற்பார்வையோ எவையும் அற்ற நிலையில் உள்ளன. ஆகவே, இச்சமுதாயங்களின் பள்ளிகளை அதிகாரப்படுத்துவதில், உடனிருந்து ஊக்கப்படுத்துவதில் தனிக் கவனம் அளிக்கப்படும்.

* தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியை மீட்டெடுத்தல்.

* அனைத்துக் குழந்தைகளும் சமமான, தரமான, தாய்மொழி வழியே, இலவசக் கல்வி பெறும் இலக்கை நோக்கி சமூகம் திரும்ப வேண்டும்.

* பொதுப்பள்ளிகளும், அருகமை பள்ளிகளும் வளர்க்கப்பட வேண்டும்.

* அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு அரசு செய்ய வற்புறுத்துதல்.

* கல்வியின் மகத்துவம் காக்கப்பட வேண்டும். குழந்தைகளிடம் சிந்தனைத் திறன், பகுத்தறிவுப் பார்வை, சமூக ஈடுபாடு, மனித நேயம் வளர்க்கும் கல்வி உருவாக வேண்டும்.
 
* கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

* கட்டணக் கொள்ளை தடுக்கப்பட வேண்டும்.

* ‘கோச்சிங் சென்டர்களும்’, குழந்தைகளை மனனம் செய்யும் கிளிப் பிள்ளைகளாக மாற்றும் பள்ளிகளும் மூடப்பட வேண்டும்.

* தேர்வு முறையில் பெரும் மாற்றங்கள் வேண்டும். 

* ‘நீட்’ மற்றும் அதுபோன்ற, நாடு முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

* அனைத்துக் குழந்தைகளுக்கும் அவரவர் தாய்மொழியில்  தரமான, இலவச முன்பருவக் கல்வி (Pre-School education) உறுதி செய்யப்பட வேண்டும். 

*தமிழக அரசு ஆணை எண் 250, கல்வித்துறை நாள் 29.02.1964ன்படி 1997ஆம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்த 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விதிமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகியவற்றை தற்போது கொள்கையாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்படும். ஊருக்கு நூறு பேர் கிடைத்தால், உலகை மாற்ற முடியும் என்று சொல்லப்படுகிறது. ஊருக்குப் பத்து பேர் கிடைத்தால் தமிழ் நாட்டின் அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க முடியும்’’ என்று உத்வேகத்தோடு தெரிவிக்கிறார் வசந்திதேவி.

- திருவரசு