கல்வித்துறையும் கலைஞரும்..!



அலசல்

கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவியிலிருந்த போதெல்லாம் தமிழக மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். என்றாலும் அவர் கல்வித்துறையில் செயல்படுத்திய திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.   

கல்வித்துறைக்கு இரு அமைச்சகங்கள்

நம்நாடு விடுதலை பெற்றதிலிருந்து கல்வித்துறைக்கு என ஒரு அமைச்சகம் மட்டுமே இருந்துவந்த நிலையில் முதல் முறையாக கல்வித்துறையை இரண்டாகப் பிரித்து பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறை என இரு அமைச்சகங்களை 2006 ஆம் ஆண்டு உருவாக்கிய பெருமை கலைஞரைச் சாரும்.

அதனால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு இருமடங்காக உயர்ந்து கல்வித்துறை வளர்ச்சியடைந்தது. பள்ளிக்கல்வித்துறையின் முதலாவது அமைச்சராக தங்கம் தென்னரசு அவர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திட வழிவகுத்தார்.

தமிழ் கட்டாயப் பாடம்

தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பள்ளிக்கல்வியை முடித்துவிடலாம் என்ற நிலையை மாற்றி 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டதும் கலைஞரின் முயற்சியால் விளைந்ததுதான்.

சமச்சீர் கல்வி

தமிழ்நாட்டில் மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு விதமான கல்விமுறை நடைமுறையில் இருந்துவந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாடத்திட்டம், இது கல்வியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிவகுப்பதாகவே அமைந்தது.

வசதிபடைத்தவர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வகை செய்யும் பொருட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010-ல் இயற்றப்பட்டு 2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

நுழைவுத்தேர்வுகள் ரத்து

பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதற்கு உரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தாலும் பொது நுழைவுத்தேர்வு எழுதி அதில் உயர்ந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே சேர்க்கை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதனால் கிராமப்புறத்திலிருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

இந்த நிலை 1984 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதாவது, 23 ஆண்டுகள் தொடர்ந்தது. இதனை மாற்ற விரும்பிய கலைஞர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று நுழைவுத்தேர்வை ஒழித்தார். அதனால் பல ஏழை எளிய குடும்பத்திலிருந்து மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி

தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் விருப்பம்போல் கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களிடம் நிகழ்த்திய கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர். தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கான கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டன.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த கலைஞர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான முன் முயற்சியை மேற்கொண்டவர்.

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் வகையில் மாவட்டங்களில் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிகளை 12 இடங்களில் நிறுவினார். அதுபோலவே 14 கலை அறிவியல் கல்லூரிகளையும் நிறுவினார்.

பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர்

தமிழகத்தின் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல்கலைக்கழகங்கள் இல்லாத பகுதிகளில் புதிதாகப் பல்கலைக்கழகங்களை உருவாக்கியவர் கலைஞர். 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தையும், 1997 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்.

நூலகத்துறையில் மாற்றங்கள்

பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவான நூலகத்துறையிலும் பல புதுமைகளையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்தவர் கலைஞர். நூலகங்களுக்கு பதிப்பாளர்களிடமிருந்து 750 புத்தகங்கள் மட்டுமே வாங்கிய நிலை இருந்தது. கலைஞர் 1000 நூல்கள் வாங்கிட வழிவகுத்தவர்.

மேலும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புரத்தில் உருவாக்கி இன்று போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பல அரிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பினை வழங்கியதோடு அறிவுசார் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெற ஓர் சிறந்த இடமாகவும் திகழ்வதற்கு அடிகோலியவர். வாசகர்கள் தம்மிடம் உள்ள சொந்த நூல்களையும் எடுத்துச் சென்று படிக்கவும் அந்த நூலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது சிறப்பு.

பதிப்பாளர் வாரியம்

பதிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்கும் பொருட்டு அத்தொழிலில் ஈடுபடும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய நல வாரியம் உருவாக்கியவரும் கலைஞரே. அவ்வாரியத்தின் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன. இப்படி கல்வித்துறைக்கு கலைஞர் ஆற்றிய பணிகளின் பட்டியல் நீளும். கல்வித்துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை.     
                                
இரத்தின புகழேந்தி