எட்டு வயது மதுரை சிறுமி மாரத்தானில் கின்னஸ் சாதனை!



சாதனை

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதுபோல பின்னாளில் நம் நாட்டிற்கு பல பதக்கங்களைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது மதுரையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஹரிணிஸ்ரீ-யின் சாதனை.
இவர் இந்த வயதிலேயே மாரத்தான் ஓட்டத்தில் 18 கி.மீ. தூரம் நிற்காமல் ஓடி உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு ஊன்றுகோலாய் இருந்துவரும் அவரது தந்தை முனியராஜிடம் பேசினோம். ‘‘எனது மகள் ஹரிணி படுசுட்டி. மிக மிக சுறுசுறுப்பானவள்.

அதனால், அவளை ஒரு கால்பந்தாட்ட வீரராக்க வேண்டும் என முயற்சித்து வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்துவருகிறாள் ஹரிணிஸ்ரீ. எனது தந்தை வல்லபராஜ் மற்றும் எனது மாமா பரதன் இருவரும் கால்பந்து வீரர்கள்.

எனது தந்தை உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்துவந்தார். எனது தந்தை மற்றும் மாமாவின் ஊக்கத்தால் நானும் சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வமுடன் இருந்தேன். அதனால் பள்ளி காலங்களில் விளையாட்டு விடுதிகளில் கால்பந்து வீரனாகவே வளர்ந்தேன்.

மதுரை மற்றும் நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்களில் இடம் கிடைத்து எனது பள்ளிக்கல்வியை முடித்தேன். பள்ளி மற்றும் மாநில அளவில் விளையாடினேன். அதனால், எனது விளையாட்டு ஆர்வத்தை என்னுடன் முடித்துக்கொள்ளாமல் சமூக பங்களிப்பாக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை எனது வேல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலமாக வழங்கி வருகிறேன்.

பயிற்சியுடன் சேர்த்து மாணவர்களின் ஃபிட்னெஸ், டயட் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறேன். அதுவும் அந்த மாணவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் அந்த மாணவர்களுக்கான சீருடை அனைத்தும் இலவசமாக அளித்து சிறந்த பயிற்சியை வழங்குகிறேன். அதனால் இந்தப் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக பல மாணவர்கள் மாநில அளவிலான அணிகளில் தகுதிபெற்று வருகின்றனர்.

ஹரிணிஸ்ரீ மற்றும் பயிலும் மற்ற மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த மற்ற மாவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்’’ என்று தன் மகளோடு வேறு சில மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்தும் கூறினார் முனியராஜ்.

‘‘எனது மகள் ஹரிணிஸ்ரீக்கும் நானே கோச்சாக இருப்பதால் அவளது 4 வயதிலிருந்தே பயிற்சியை தொடங்கிவிட்டேன். காலை மாலை என என் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது என் மகளையும் இணைத்துக்கொண்டேன். அவளது விளையாட்டு ஆர்வம் இன்னும் என்னை தனிப்பயிற்சியளிக்கத் தூண்டியது.

கால்பந்து வீராங்கனைக்கான பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவளது ஸ்டாமினாவைக் கண்டு வியப்படைந்த நண்பர்கள், அவளுக்கு மாரத்தான் பயிற்சி அளிக்குமாறு ஆலோசனை கூறினர். அந்த ஆலோசனைதான் இன்று  இந்த இளம் வயதில் ஹரிணிஸ்ரீயை ஒரு சாதனை வீராங்கனையாக உருவெடுக்க வைத்துள்ளது.

ஹரிணிஸ்ரீ மற்றும் அவளுடன் பயிலும் மாணவர்களுக்கு டயட் சார்ட் தயாரிக்கும் பணியையும் செய்து கொடுக்கிறேன். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டன், நாட்டுக்கோழி, மீன், முட்டை, சப்பாத்தி மற்றும் காய்கறிகள் என உடல் எடையைப் பரிசோதித்து (மாதம் ஒரு முறை) அதற்கேற்றபடி உணவுப் பட்டியல் பரிந்துரைக்கப்படுகிறது.

ஹரிணிஸ்ரீக்கு தினமும் உணவில் புரோட்டீன் இருக்கும்படி கவனமாக பார்த்துக்கொள்கிறேன். இந்த உணவுப் பழக்கமும், அதிகாலையில் விழித்துக்கொள்ளும் பழக்கமும் அவளது படிப்புக்கும் சிறந்த முறையில் உதவியாக இருக்கிறது’’ என்று கூறும் முனியராஜ் தன் மகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘தினமும் அதிகாலை 5.45 மணி முதல் 7.30 மணி மற்றும் மாலை 4.45 மணி முதல் 6.45 மணி என இரு நேரமும் (காலை: ஓட்டப்பயிற்சி + கால்பந்து பயிற்சி, மாலை: ஓட்டம் + உடற்பயிற்சி) தீவிரப் பயிற்சி, வாரம் ஒருமுறை உடற்தகுதிப் பயிற்சி (உடற்பயிற்சி) மற்றும் சாலையில் ஓடுதல் என அட்டவணைப்படுத்தப்பட்ட பயிற்சி தொடர்களும், எனது வழிகாட்டுதலில் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற அனைத்திலும் தீவிரக் கட்டுப்பாட்டுடன் ஹரிணிஸ்ரீ உடற்தகுதியை மெருகேற்றினேன். எனது மகள் இவ்வளவு பயிற்சிகளுக்கு இடையிலும் தனது பள்ளிக்கல்வியிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு நன்றாகப் படிக்கும் மாணவியாக சிறந்து விளங்குவதாக அவளது பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அவளது திறமையை ஊக்கப்படுத்தி கின்னஸ் சாதனைப் பட்டியலில் சேர்க்க நாங்கள் தீவிர முயற்சி எடுத்தோம். முதலில் 12 கிலோமீட்டர் எனும் சாதனைக்கே திட்டமிட்டோம். அதனை தொடர்ந்து கோல்டன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு (Golden Book of World record) நிறுவனத்தை அணுகினோம்.

அதன் நிர்வாகிகள் இதுவரை 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5 to 6 கி.மீ. எனும் சாதனையையே பதிவு செய்துள்ளதாகவும், இச்சாதனை முறியடிப்பை மேற்பார்வை பார்க்க தனது பிரதிநிதியை அனுப்புவதாகவும் தெரிவித்தனர். 29.7.18 அன்று கோல்டன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு நிர்வாகிகள் முன்னிலையில் இச்சாதனை ஓட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டமிடப்பட்ட 12 கிமீக்குப் பதிலாக ஹரிணி தன் தன்னம்பிக்கையால் 18 கிலோமீட்டர் நிற்காமல் ஓடி (Non Stop) இலக்கை அடைந்தார்.

இச்சாதனையைப் பாராட்டி திருமங்கலம் அரிமா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் தமிழக  அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டு பெருமைப்
படுத்தினார். இந்த சாதனையைத் தொடர்ந்து பல பயிற்சிகளைப் பெற்று வருகிறாள்.

வருங்காலங்களில் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக உருவாகி தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவிற்காக பல பதக்கங்களைப் பெற்றுக் கொடுப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.தன் மகள் பதக்கங்களைப் பெற வேண்டும் என்ற கனவோடு கடுமையான பயிற்சிகளை வழங்கி வரும் இவரின் எண்ணம் ஈடேற நாமும் வாழ்த்துவோம்!

- தோ.திருத்துவராஜ்