எஞ்சினியரிங் படிப்புகளுக்கு மவுசு குறைந்தது ஏன்?



சர்ச்சை

கருத்து சொல்கிறார்கள் கல்வியாளர்கள்…


ஒரு காலத்தில் எஞ்சினியர் சீட் கிடைக்கவேண்டும் என்றால் அதற்கு மெடிக்கல் சீட்டுக்கு நிகரான டிமாண்ட் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எஞ்சினியரிங் சீட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கூவிக்கூவி விற்பனை செய்யும் அளவுக்கு ஆகிவிட்டது. இதனால் பல கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான என்சினியரிங் கவுன்சிலிங் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்
களின் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

ஒருவழியாக எஞ்சினியரிங் கவுன்சிலிங் 5 கட்டங்களாக முடிந்துவிட்டது. ஆனால், அண்ணா பல்கலையின்கீழ் செயல்படும் 560-க்கும் மேற்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகளில் தமிழகத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல்தான் மிஞ்சியது.

இவை அனைத்தும் தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடு பெற்ற 1 லட்சத்துக்கும் மேலான இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  இதில் 9 அரசு பொறியியல் கல்லூரிகளிலும், ஒரே ஒரு தனியார் கல்லூரியிலும் மட்டுமே நூறு சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப்
பார்ப்போம்…

முனைவர் ஆனந்தகிருஷ்ணன், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்

தேவைக்கு அதிகமான அளவில் பொறியியல் கல்லூரி இடங்கள் உருவாக்கப்பட்டது முதல் தவறு. இரண்டாவதாக, ஒரு மாணவர்கூட சேராத 100 கல்லூரிகளில் பெரும்பாலானவை தரமற்றவை. அதாவது, அக்கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள், அல்லது அந்தக் கல்லூரிகளில் படிக்கிற பிள்ளைகள் தேர்வு எழுதித் தேறும் திறமையில்லாதவர்களாக இருப்பார்கள்.

இக்காரணங்களால் இக்கல்லூரிகளில் சேர யாருக்கும் விரும்ப்பம் இல்லாமல் போய்விட்டிருக்கும். இதனால் இந்தக் கல்லூரிகள் நாளடைவில் இயங்காமல் போகக்கூடும். அதனால் மாணவர்களுக்கு மட்டுமின்றி அவற்றின் நிர்வாகத்தினருக்கும் நன்மையே. மூன்றாவது தவறு, இந்தப் பொறியியல் கல்லூரிப் பாடத்திட்டங்கள் பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் அப்படியே உள்ளது.

இன்றையத் தொழில்நுட்பத் துறைக்கு வேண்டிய அளவுக்கு வளர்ச்சி அடையாமல், பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பழைய பாடத்திட்டங்களே இன்றைக்கும் இந்தக் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதை மாற்றிஅமைக்க வேண்டும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி-யின் பாடத்திட்டத்தின் அளவுக்கு இல்லை என்றாலும் அவற்றை நெருங்கிவரும் அளவுக்காவது பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, இன்றுள்ளதைவிட அதிக அளவுக்கு அறிவியலும், கணிதமும் நமது தொழில்நுட்பக் கல்வியில் சேர்க்கப்படவேண்டி உள்ளது.

அதேபோன்று ‘ஹ்யூமானிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்சஸும்’அதிக அளவு பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டியிருக்கிறது. பல்துறைப் படிப்பு (interdisciplinary studies) புகுத்தப்பட வேண்டும். அதனால், ஒரு எலக்ட்ரானிக்ஸ் மாணவன், எக்கனாமிக்ஸ் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்; அல்லது, சிவில் எஞ்சினியரிங் போன்ற ஏதாவது ஒரு துறையில் படிப்பவர், விரும்பும் மற்ற துறைகளில் அந்த 4 ஆண்டுகளில் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

இவை ஏதும் இல்லாத காரணத்தால்தான், இத்தகைய பொறியியல் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியேறும் மாணவர்களுக்குத் திறமை குறைவாக இருக்கிறது; அதனால் வேலைவாய்ப்பும் அரிதாக இருக்கிறது. பெரிய நிறுவனர்கள் எல்லாம் பணிக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற பெரிய கல்வி நிறுவனங்களைத்தான் முதலில் தேடிப்போகிறார்களே தவிர, பிற பொறியியல் கல்லூரிகளை அதிகம் நாடி வருவதில்லை. இந்த நிலை உரிய மாற்றங்
களால் விரைவில் சீரமைக்கப்படவேண்டும்.

பேராசிரியர் முனைவர் ப. வே. நவநீதகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் நுழைவுத்தேர்வு இயக்குநர்

எழுத்திலும் பேச்சிலும் இடம்பெறக் கூடாத ஒருசொல் ‘Perfect’ என்பது. உலகில் மனிதரோ, பொருளோ, செயலோ எதுவுமே குறையற்றது இல்லை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு, ‘இதைவிட அது சிறந்தது’ போன்ற கருத்தைத்தான் தெரிவிக்க முடியும். கல்வித்துறைகளும் அப்படித்தான்.

இன்றுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையில், மருத்துவம், அறிவியல் ஆகியவற்றைவிடப் பொறியியல் பின்தங்கி இருக்கிறதே தவிர, பொறியியல் என்றும் தவிர்க்கப்பட வேண்டிய துறை அல்ல. மூன்று ஆண்டு அறிவியல் படிப்பை (B.Sc) விட 4 ஆண்டு பொறியியல் படிப்பு (B.E / B.Tech) மதிப்பு வாய்ந்தது. ‘அறிவியல், உலக நிகழ்வுகளைக் கண்டு அதிசயிக்கவைப்பது; பொறியியலோ அந்த அதிசயங்களை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்துவது’ என்று ஓர்அறிஞர் சொல்லியிருக்கிறார்.

பொறியியல் படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்கள் 50 சதவீதம் என்பவர்கள், அறிவியல், கலை முதலிய மற்ற படிப்புகளைப் படித்து வேலையின்றி இருப்பவர்கள் 70 சதவீதம் என்பதைச் சொல்வதில்லை. இன்று பொறியியல் பொலிவிழந்ததற்குச் சில
காரணங்களைச் சொல்லலாம். அவற்றை இனி பார்ப்போம்…

தேவைக்கு மேற்பட்ட இருப்பு 1984ல் தொடங்கிய பொறியியற் கல்லூரிகளின் உற்பத்தி ஆண்டுதோறும் பெரும்பாலும் வணிக நோக்கிலேயே வளர்ந்து, தேவையைக் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தரம் காக்கவேண்டிய AICTEக்கு, தேவை  இருப்பு சமன்பாட்டைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு இல்லாததால் அது வரம்பின்றி அனுமதி அளித்துவிட்டது.

தரம்

பல கல்லூரிகள் வணிக நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதால் தரம் காப்பதில் ஆர்வமும் இருப்பதில்லை; முடிவதும் இல்லை. மாணவர் தரம், ஆசிரியர் தரம் இரண்டுமே காக்கப்படவேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்றவரிடம் நிறையக் கட்டணம் பெறமுடியும் என்பதால், மாணவரின் தரம் பல சுய
நிதிக் கல்லூரிகளில் அடிபடுகிறது.

இன்றைய மாணவர்கள்தான் நாளைய ஆசிரியர்கள் என்பதால் நாளைய ஆசிரியர்களின் தரமே இதனால் கேள்விக்குறியாகிறது. தரமற்ற ஆசிரியர்களால் கற்பித்தல் அடிபடுகிறது. பட்ட மேற்படிப்பும், முனைவர் பட்டம் பெற்றவர்களும், கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர்களும் போதிய எண்ணிக்கையில் இருக்கவேண்டும். அண்மையில் AICTE ஆசிரியர் மாணவர் விகிதத்தை 20:1 என்று தளர்த்தியிருப்பது இதை மேலும் கவலைக்குரியதாக்குகிறது.

சுழல் நிகழ்ச்சி

படிப்புத் துறைகளில் ஏற்றமும் இறக்கமும் இருப்பது ஒரு சுழல் நிகழ்ச்சியே. இன்று அடிமட்டத்தில் உள்ள ஒரு துறை சில ஆண்டுகளில் உச்சத்தைத் தொடலாம். பத்து ஆண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் மலேசிய மருத்துவக்குழு (Malaysian Medical Association - MMA) நடத்திய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு: ‘மருத்துவப் படிப்பு மதிப்பிழந்துவருகிறது; இனி அது செல்லவேண்டிய பாதை என்ன?’ அன்று தமிழ்நாட்டில் MBBSல் சேர இடம்பெற்ற 15 பேர் அதைத் தவிர்த்து பொறியியல், வணிகவியல், அறிவியல் படிப்புகளில் சேர்ந்தார்கள். ஆனால், இன்று மருத்துவத்துக்கு உள்ள நிலை என்ன? அதேபோல் பொறியியலிலும் மாற்றம் வரும்.

பணிவாய்ப்பு

NASSCOM (The National Association of Software and Services Companies) போன்ற அமைப்புகள், பொறியியல் படிப்பை முடித்தவர்களில் 25 சதவீதம் பேர்தான் பணிக்கு ஏற்றவர்களாக இருப்பதாக அடிக்கடி குறைபடுகின்றன. இதைச் சீரமைக்க, பொறியியல் கல்விப் பாடத்திட்டத்திலேயே கடைசி அரையாண்டில், Finishing School மாதிரியில், சில பணி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, பணிக்கு ஏற்ற தயாரிப்புப் பயிற்சி அளிப்பதையும் சேர்க்கலாம்.

ஆரோக்கியமான போட்டி ஒரு மாணவரும் சேராத 100 கல்லூரிகளில் பல மறைந்துபோக வாய்ப்புள்ளது. இதுவும் ஒரு தரம் காக்கும் முறைதான். நிலைபெறுவதிலும் முன்னேறுவதிலும் ஒரு ஆரோக்கியமான போட்டியை இது கல்லூரிகளுக்கு இடையே ஏற்படுத்தும். வரவேற்கத் தக்கது.

கணினிக் கலந்தாய்வு

இந்த ஆண்டு புகுத்தப்பட்ட கணினிவழிக் கலந்தாய்வும் ஓரளவுக்கேனும் இந்த நிலைக்குக் காரணம்தான். நம் நகர்ப்புற மாணவர்களும் பெற்றோர்களும் இந்த முறைகளை நன்றாக அறிந்து செயல்பட்டிருப்பார்களா என்ற ஐயம் உண்டு. ஆண்டுகள் செல்லச்செல்ல இதன் தாக்கம் குறைந்துவிடும்.

களங்கம்

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எத்தனையோ கல்வி அமைப்புகளுக்குத் தன் சீரிய நுழைவுத்தேர்வு / சேர்க்கை முறைகளால் வழிகாட்டியாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறைத் தவறுகள் நமது மாநிலப் பொறியியல் கல்வித்துறையின் மீதே அவநம்பிக்கையைக் கொண்டுவரக்கூடியவை. விரைவில் இவை சரிசெய்யப்படுவது பொறியியலின் மதிப்பை நிலைநிறுத்த உதவும்.

- தோ.திருத்துவராஜ்