ஆசிரியர் தினம் உலகப்பார்வையும்… நமது பார்வையும்!



ஒப்பீடு

சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நமது நாட்டின் ஆசிரியர் தினமாக 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம். சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றியவர். பிறகு நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவியில் இருந்தவர். அவர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது மாணவர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள்.

அதற்கு அவர் தன்னுடைய பிறந்தநாளை ஆசிரியர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடும்படி கூறியுள்ளார். அதனால், 1962-ல் இருந்து செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டு ஆசிரியர்களாகிய நாம்  உலக ஆசிரியர் தினத்தைப் பற்றி அறிந்திருக்கமாட்டோம். இந்நாளை நாம் பெரிதாகக் கொண்டாடுவதுமில்லை.  ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1994 அக்டோபர் 5 ஆம் தேதியை உலக ஆசிரியர் தினமாக அறிவித்துள்ளது. கல்விப் பணியின் மூலம் சமூக மேம்பாட்டுக்கு ஆற்றும் கடமைக்காக ஆசிரியர்களை நன்றியுணர்வோடு போற்றும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது. உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு  தனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

 “சுதந்திரமாக கற்பிப்போம் ஆசிரியத்தை மேம்படுத்துவோம்”என்ற பொருளில் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களின் சமூக முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் ஆசிரியர்களுக்கு சமூக அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும்  இந்நாள் கொண்டாடப்படுகின்றது. பொதுக்கல்விக்காக அல்லது பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புச் செய்தமைக்காக இந்நாளில் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது.  

ஆசிரியர்கள் சமூகச்சிற்பிகள் என்று போற்றப்பட்டவர்கள். இன்றைய ஆசிரியர்களுக்கு இப்போற்றுதல் பொருந்துமா? இந்தக் கேள்வியைக் கேட்டால் சிலர் ‘பொருந்தும்’ என்று பதில் சொல்வார்கள். சிலர் ‘பொருந்தாது’ என்று பதில் சொல்வர்கள். ‘ஆசிரியர் சமூகத்தைப் பற்றி இப்படி கேள்வி எழுப்புவதே ஆசிரியர்களை இழிவுபடுத்தும் செயல்’என்று சிலர் கோபப்படுவார்கள்.

 ஜனநாயகத்தில் எண்ணிக்கைதான் எல்லாவற்றையும் எடைபோடும் அளவுகோல். அரசாங்கம் மதுக்கடை நடத்துவது சரியா என்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதாக வைத்துக்கொள்வோம். 51% மக்கள் சரி என்று வாக்களித்தால் அதுதான் செல்லுபடியாகும். இதைத்தான் நாமும் ஜனநாயகம் என்று ஏற்றுக்கொள்கின்றோம். இந்தக் குறை ஜனநாயகத்தைக் காட்டிலும் ஒரு நிறை ஜனநாயகம் உருவாக வேண்டும்.  

ஜனநாயகத்திற்கும் கல்விக்குமான தொடர்பைப் பற்றி அமெரிக்க நாட்டின் கல்வி யாளர் ஜான் டூயி குறிப்பிடுகையில், ‘ஜனநாயகம் என்பது வாழ்வியல் முறை, வெறும் சட்டக் காகிதங்களாக மட்டுமே இல்லாமல் அன்றாட வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் உறவுகளிலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் மனப்போக்குகளிலும் ஜனநாயக மன இயல்பு இருக்கவேண்டும்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகம் புதிதாகப் பிறக்கவேண்டும். கல்வியே அதன் மருத்துவச்சி’ என்று மிக அழகாகச் சொல்கிறார். கல்விக்கும் ஜனநாயக சமூக அமைப்பு முறைக்குமான தொடர்பை உணர்த்த இதைவிட வேறு விளக்கங்கள் அவசியமில்லை. இதை உணர்ந்து கல்விச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் சமூகச்சிற்பிகளாக எல்லா ஆசிரியர்களும் இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுவது இயல்புதான்.  

முடியாட்சிக்கு மாற்றான மக்களாட்சி அரசியல் பேசப்பட்ட காலத்திலிருந்தே நாடுகளைச் சந்தைகளாகவும் மக்களை நுகர்வோராகவும் மாற்றும் பெருவணிக அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் உலகில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. மக்களாட்சி என்ற பெயரில் பெருவணிகர்களின் ஆட்சிதான் நான்கு நூற்றாண்டுகளாக நடந்துவருகின்றது.

மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக இருக்கும் உழைப்பாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் முன்வைக்கும் இடதுசாரி அரசியல் தத்துவ, பொருளாதாரக் கொள்கைகள் உருவானதால் மனித உரிமைகளுக்கான, நலன்களுக்கான சட்டங்கள் உலக அளவிலும் நாடுகள் அளவிலும் உருவாக்கப்பட்டன.

இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்திருந்தும் இன்றைய உலகில் அமைதி யின்மை, போர்கள், அணுஆயுத ஆபத்துகள், சூழல் கேடுகள், மத இன மோதல்கள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுகின்றன. இவை இல்லாத மாற்று உலகத்தை நாம் எப்படிப் படைக்கப்போகிறோம்? புதிய உலகைக் கட்டமைப்பதில் கல்வியின் பங்கு என்ன? ஆசிரியர்களின் பங்கு என்ன? என்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.

இன்றைய உலகில் உணவு, உடை, இருப்பிடம், கல்வி  போன்ற அன்றாட அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில்  சரிபாதி மக்கள் வாழ்கின்றனர். ஒருவர் மாண்போடும், மதிப்போடும், மனநிறைவோடும் வாழ்வதற்கு சமூகத்தில் பல இடையூறுகள் இருக்கின்றன.

உழைப்புச் சுரண்டல், வறுமை, சாதித் தீண்டாமை, பெரும்பான்மை மதத்தவர் - சாதியினர் - மொழியினர் ஆதிக்கம், மூடநம்பிக்கை, கல்வி அறிவின்மை, வேலையின்மை, லஞ்சம், ஊழல்  இப்படிப்பட்ட பல  சமூகச் சிக்கல்கள் நீடித்து நிலைக்கும் சமூக அமைப்புக்குள்தான் ஒருவர் விரும்பியோ, விரும்பாமலோ ஆசிரியர் ஆகிறார்.

ஆசிரியர்களுக்கான சமூக விழுமியங்கள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் கொண்ட ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் கல்வியும் பயிற்சி முறைகளும் இன்று இல்லை. கல்வியும் இன்று மனனம் செய்வது, மதிப்பெண் பெறுவது, சான்றிதழ் பெறுவது, வேலை வாய்ப்புகளைப் பெறுவது என்றாகிவிட்டது. கல்வி விற்பனைப் பொருளாகவும் மாறிவிட்டது.

இப்படிப்பட்ட எதார்த்த நிலையில் ஆசிரியர்களை அளவீடு செய்வதும் மதிப்பீடு செய்வதும் சிக்கலானதே. ஆசிரியர்களின் கல்விச் செயல்பாட்டின் நேரடிப் பயனாளர்களான மாணவர்கள் மூலமும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்யலாம். இம்மதிப்பீடு நம்பகத்தன்மையான மதிப்பீடாகவும் இருக்கும்.

சமூகம் ஆசிரியர்களிடம் தனித்தன்மையான பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆசிரியர்களே சமூகச் சிற்பிகளாகப் போற்றப்படும் தகுதி உடையவர்களாக இருக்க முடியும்.