மாணவர்களின் தனித்திறனை மேலோங்கச் செய்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்!



சேவை

மாணவர்களை ஊக்கப்படுத்தி பல்வேறு சாதனை புரிந்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2017-2018ம் ஆண்டுக்கான ‘கனவு ஆசிரியர் விருது’ வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர், மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் போன்றவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் ரூ.10,000 ரொக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளிக்கல்வித் துறையினர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 140 ஆசிரியர்களைத் தேர்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஞா.செந்தில்குமாரும் கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர். இவர் தேர்வு செய்யப்பட்டதற்குக் காரணம் மாணவர்களின் தனித்திறனை வளர்த்ததுதான்.

தனியார் பள்ளி அளவில் மட்டும் இருந்த செஸ் விளையாட்டை அரசுப் பள்ளிக்கு கொண்டுவந்து சர்வதேச அளவிலான தரவரிசைப் பட்டியலில் மாணவ மாணவிகளை இடம்பெறச் செய்து சாதனை படைத்ததால் கனவு ஆசிரியர் விருது பெற்றுள்ளார். விருதுக்கு காரணமான மாணவ  மாணவிகளை மகிழ்விக்க நினைத்த அவர், அசைவ விருந்து வைத்து சிறப்பித்துள்ளார்.

கனவு ஆசிரியர் விருதுபெற்ற ஞா.செந்தில்குமாரிடம் பேசுகையில், ‘‘நான் 2005ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டேன். இந்தப் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். பணிபுரியும் பள்ளி தொடக்கப்பள்ளியாக இருந்தாலும் கிராமப்புற மாணவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் சாதித்து நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன்.

அந்தச் சூழலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சதுரங்க போட்டிகளை நடத்தி சிறந்த மாணவர்களைப் போட்டிக்கு அழைத்து வரவேண்டும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

ஆனால், அப்போது ஒன்றிய அளவிலான போட்டியில் மட்டுமே சாதிக்க முடிந்தது. அதற்கு அடுத்த நிலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை.

பள்ளியில் காலை வழிபாட்டுக்கு முன் 1 மணி நேரம் மாணவர்களுக்கு சதுரங்க பயிற்சியும், மதிய உணவு இடைவேளையில் பயிற்சியும், மாலையில் சதுரங்கப் பயிற்சியும் தொடர்ந்து வழங்கினேன். இப்பயிற்சியின் விளைவாக கிராமப்புற மாணவர்கள் ஒன்றிய கல்வி மாவட்டம், மண்டலம், மாநில அளவிலான போட்டியில் 5 ஆண்டுகளாக தகுதி பெற்று விளையாடி வருகின்றனர்.

 இங்கு பயிற்சி பெற்று 5 ஆம் வகுப்பை நிறைவு செய்து 6 ஆம் வகுப்பிற்கு வேறு தனியார் பள்ளிக்கு சென்றுவிடாமல் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்கின்றனர். மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் தொடர் பயிற்சி அளித்து வருகிறேன்.

தேசிய அளவிலான போட்டிகளிலும் மாணவர்கள் விளையாடி பரிசுகளைப் பெற்றுவருகின்றனர். இதுவரை 100 போட்டிகளுக்கு மேல் மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளேன். 200க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், பரிசுகளையும் வென்று தொடர்ந்து விளையாடிவருகின்றனர்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கான முயற்சிகளைப் பற்றி விவரிக்கும்போது, ‘‘சதுரங்கம் குறித்து எதுவும் தெரியாமல் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது அதில் சாதனை படைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர் என நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்கள் சதுரங்கம் நன்றாக கற்பதற்கு நிறைய புத்தகங்களையும், மொபைல் போன், செஸ், கடிகாரம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு புறம் மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க செய்யவும். சதுரங்க போட்டியில் பங்குபெறச் செய்வதும் எனக்கு மிகுந்த சவாலாக உள்ளது. சதுரங்கப் போட்டியில் மாணவர்கள் கலந்துகொள்வதால் சிந்தனை செய்யும் ஆற்றலும், கற்பனைத் திறனும், படித்த தகவல்களை விரைவில் நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது’’ என்கிறார் செந்தில்குமார்.

‘‘சதுரங்க போட்டியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களால் படிப்பிலும் சிறந்து விளங்க முடிகிறது. அரசு பள்ளி மாணவர்கள் சதுரங்க போட்டியில் 200 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றதால் சென்ற ஆண்டு குடியரசுத் தினவிழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ‘சிறந்த ஆசிரியர்’ விருதையும் டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை மூலம் கலாமின் சகோதரர் விருதும், கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் அசத்தல் ஆசிரியர் விருதும், லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் விருதும், இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் ‘கனவு ஆசிரியர் விருதும்’ வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் சென்ற ஆண்டு ‘சிறந்த விளையாட்டு வீரர்’ விருதும் வழங்கப்பட்டது.

எனது அடுத்த இலக்கு, மாணவர்களை விளையாட்டில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், கணினியில் தமிழ், ஆங்கிலம் பார்க்காமல் தட்டச்சு செய்யும் திறன், கணினியில் டிசைனிங் வேலைகள், ஹிந்தி மொழியை கற்றுத் தருவது ஆகியவை என்னுடைய எதிர்கால இலக்காகும்.

தொடக்கக் கல்வியை மாணவர்கள் முடிக்கும்போது அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் பள்ளியில் (கணினி) அதற்குரிய வசதிகள் இல்லை.

அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றுவதே என் லட்சியமாகும். நிச்சயமாக ஏதேனும் ஒரு வகையில் எங்கள் பள்ளிக்கு உதவிகள் கிடைத்தால் என் மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்குவேன்’’ என தன்னம்பிக்கையுடன் முடித்தார்.

- திருவரசு