நல்ல விஷயம் 4வளாகம்

அறிய வேண்டிய மனிதர் :வினோத் தாம்

சர்வதேச அளவில் பெண்டியம் பிராசசரின் தந்தை, சுயதொழில் முனைவோர், பொறியாளர் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்ட வினோத் தாம் புனேவில் பிறந்து டெல்லி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் முடித்தார்.

பின் டெல்லியில் இருக்கும் செமி கண்டக்டர் நிறுவனத்தில் சுமார் நான்காண்டு காலம் பணிபுரிந்தார். கணினி மற்றும் டெக்னாலஜியில் தேர்ச்சி பெற்ற இவர் 1975 ம் ஆண்டு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை எலக்ட்ரிக்கல் முடித்து அங்கேயே சில நிறுவனங்களில் வேலை செய்த பிறகு 1995ம் ஆண்டு இன்டெல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

தன் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வாக இன்டெலில் வேலைக்குச் சேர்ந்ததை கருதும் இவர் அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்களில் மென்டார், அட்வைசர் பதவி களையும் நெக்ஸ்ட்ஜென் மற்றும் வென்ச்சர் கேப்பிடல்ஸ் போன்ற நிறுவனங்களையும் நிறுவியுள்ளார். தொழில், வர்த்தகம், டெக்னாலஜி என அனைத்துத் துறையையும் செதுக்கி அமெரிக்காவை வல்லரசாக மாற்ற உதவிய இந்திய-அமெரிக்க பல்துறை வல்லுநர்களை சிறப்பிக்கும்போது டெக்னாலஜியின் பிறப்பிடமாக கருதப்படும் சிலிக்கான் வேலியின் வழிகாட்டி எனவும் , பெண்டியம் பிராசசரின் தந்தை எனவும் மொத்த அமெரிக்கா உட்பட சர்வதேசமும் இவரை புகழ்ந்தது. மேலும் அெமரிக்க கணினி தொழில்துறையின் டாப் 25 ஜாம்பவான்களில் ஒருவராகவும்,
அன்றைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனின் அவையில் ஆசியன் அமெரிக்க மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் ஆலோசகர் குழுவிலும் ஒருவராக வினோத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Vinod_Dham

பார்க்க வேண்டிய இடம் :தஞ்சை அரண்மனை

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் அமைந்துள்ள தஞ்சை அரண்மனையானது சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளான தஞ்சை நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின் கி.பி. 1674 முதல் 1855 வரை தஞ்சையை ஆண்ட மராத்திய அரசின் கைவசம் இருந்தது.  தஞ்சை நாயக்கர்களின் கலைவடிவமான திராவிட பாணியில் கட்டப்பட்ட இவ்வரண்மனை பின் மராத்தியர்கள் காலத்தில் மராத்திய கலைநுட்பத்துடனும் மற்றும் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக்கலையின் தொழில்நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையில் சேர்க்கப்பட்டு புதுப் பொலிவுடன் மிளிர்ந்துநிற்கிறது.

இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்கட்டப் பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இந்திய தொல்லியில் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் இவ்வரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மஹால், தஞ்சை கலைக்கூடம், அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சை மேற்குக் காவல் நிலையம், தஞ்சை தீயணைப்பு நிலையம் ஆகியவை தற்போது அமைந்துள்ளன. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றக் கட்டடம் என நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது இந்த அரண்மனை. மேலும் விவரங்களை அறிய https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை    

வாசிக்க வேண்டிய வலைத்தளம்:www.panippookkal.com

அன்றாட நிகழ்வுகளில் தொடங்கி தமிழ் கலாசாரம், வரலாறு, தொழில்நுட்பம், ஆய்வுக்கட்டுரைகள் எனப் பன்முகத்தன்மையுடன் செயல்படுகிறது இத்தளம். அன்றாடம் சமையல் குறிப்பு, கலாசாரம், வரலாறு, மொழியியல், இலக்கியம், கட்டுரை, கவிதை, நடப்பு நிகழ்வுகள், சிறுவர் உலகம், கதை, சினிமா, ஆன்மிகம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கி இத்தளத்தில் தகவல்கள் பதிவிடப்படுகின்றன.

சிறுவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரின் பல்துறைத் தேடல்களுக்கும் தீனி போடும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வலைத்தளத்தில் தமிழ் மொழியின் கலை, இலக்கியம், மொழியின் சிறப்பு, இந்தியப் பெருநிலத்தின் ஆன்மிக தத்துவங்கள் கதை மற்றும் கட்டுரை நடையில் பதிவிடப்பட்டுள்ளன. அனைவரும் வாசித்து பயன்பெறத்தக்க அம்சங்களை உள்ளடக்கியது இந்த வலைத்தளம்.

படிக்க வேண்டிய புத்தகம்:செகண்ட் ஒப்பினியன் டாக்டர் கு.கணேசன்

தற்போதைய நவீன உலகில் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கைமுறையும் நாள்தோறும் மாறிவருகிறது. மாறிப்போன வாழ்க்கைமுறையின் விளைவால் பரம்பரை நோய்களைத் தவிர்த்து பெயர் தெரியாத நோய்கள் எல்லாம் புதிது புதிதாக முளைக்கின்றன. இப்படி நெஞ்சுக்குள்ளும், வயிற்றுக்குள்ளும் களைகளாக முளைத்துவரும் நவீன நோய்களைப் பற்றிய அறிமுகங்களும், இன்றுவரை அவ்விதமான நோய்களுக்கு கொடுக்கப்படும் நவீன சிகிச்சை முறைகளும், அவை மேற்கொள்ளப்படும் இடங்கள், தோராயமாக சிகிச்சைக்கு ஆகும் பணச்செலவு, தடுப்புமுறைகள் போன்ற பல அரிய தகவல்களை உள்ளடக்கியது இந்நூல்.

இது மொத்தம் 43 கட்டுரைகளின் தொகுப்பாக நவீன மருத்துவமுறைகளை விரிவாக அலசுகிறது. தன்னுடைய 35 வருட மருத்துவ அனுபவத்தில் கண்ட பல நோயாளிகளின் நேரடி அனுபவத்தையும் கலந்து எளிய நடையில் நோய்களையும் அவற்றின் தன்மைகளையும் தடுக்கவேண்டிய வழிமுறைகளையும் விரிவாக விவரிக்கிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் கு.கணேசன். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருமே படித்துப் பயனடைவதற்கான தரமான நூல்.

(வெளியீடு: சூரியன் பதிப்பகம்,
229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், சென்னை- 4.
விலை: ரூ.200. தொடர்புக்கு: 044-4220 9191)