எஸ்.எஸ்.சி.தேர்வில் ஆங்கிலக் கட்டுரை..!



உத்வேகத் தொடர் 59

வேலை வேண்டுமா?


“ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன்” (Staff Selection Commission-SSC) என்னும் அமைப்பு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்துகின்ற தேர்வுதான் “கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்”  (Combined Higher Secondary Level (10+2) Examination) ஆகும்.
இந்தத் தேர்வில் ‘கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (நிலை- I)’ (Computer Based Examination [Tier-I]) என்னும் தேர்வில் இடம்பெறும் -

I. பொது புத்திக்கூர்மை (General Intelligence)
II. ஆங்கில மொழி (English Language)
III. கணிதத்திறன் (Quantitative Aptitude)
IV. பொது விழிப்புணர்வு (General Awareness)

- ஆகிய பாடங்களின் பாடத்திட்டங்கள், கேள்விகள் மற்றும் பதில்கள் ஆகியவற்றைப் பார்த்தோம்.இனி விரிவான விளக்க விடைத் தேர்வு (நிலை- II) (Descriptive Paper [Tier-II]) பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

விரிவான விளக்க விடைத்தேர்வு (நிலை- II)

(DESCRIPTIVE PAPER [TIER-II])

விரிவான விளக்க விடைத் தேர்வு என்பது “எழுத்துத் தேர்வு” ஆகும்.இந்தத் தேர்வில் “கட்டுரை எழுதுதல்” (Essay Writing), “கடிதம் மற்றும் விண்ணப்பம் எழுதுதல்” (Letter / Application Writing) ஆகியவற்றில் தேர்வுகள் நடைபெறும்.

“கட்டுரை எழுதுதல்” பகுதியில் சுமார் 200 முதல் 250 வார்த்தைகளில் கட்டுரை எழுதவேண்டும். அதேபோல், கடிதம் மற்றும் விண்ணப்பம் எழுதும்போதும் 150 முதல் 200 வார்த்தைகளுக்குள் அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுரை மற்றும் கடிதம் எழுதும் பகுதிக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வு 1 மணி நேரம் நடைபெறும்.

இத்தேர்வு போட்டியாளரின் எழுத்துத்திறன் மற்றும் தகவல் தொடர்புத்திறனை மதிப்பீடு செய்யும் விதத்தில் அமைக்கப்படும். மேலும் போட்டியாளர்கள், ‘கடமை மற்றும் பணிச்சுமை’களை (Duties and Workload) திறமையான முறையில் கையாளும் செயல்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? என்பதையும் அறிந்துகொள்ள உதவும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

சுற்றுச்சூழலில் நிகழ்கின்ற நிகழ்வுகள் மற்றும் தற்கால நிகழ்வுகள் பற்றிய போட்டியாளரின் விழிப்புணர்வுத் திறனை அளவிடும் விதத்திலும் இந்தத் தேர்வில் கேள்விகள் அமைக்கப்படும். தேசியத் தலைப்புகள், சுற்றுப்புறப் பிரச்னைகள், சமுதாயப் பிரச்னைகள், நிதி மற்றும் பொருளாதாரம், அரசியல், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், தொழில்நுட்பம், விளையாட்டு, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தலைப்புகள், அரசியல் அறிவியல் பற்றி புரிந்துகொள்ளுதல் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு கட்டுரையை எழுதவேண்டிய நிலை உள்ளதால் போட்டியாளர்கள் ‘கட்டுரை எழுதும் பயிற்சி’ பற்றி கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.

நாள்தோறும் நாளிதழ்களை வாசிப்பதும், அவற்றில் கொடுக்கப்பட்ட முக்கியத் தலைப்புகள்பற்றி சிந்திப்பதும், குறிப்பெடுப்பதும், கட்டுரை எழுத பேருதவியாக அமையும். ஆங்கில நாளிதழ்களையும் தொடர்ந்து வாசிப்பதும், அகராதி (Dictionary) துணைகொண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் புரிந்துகொள்வதும், அடிப்படை ஆங்கில இலக்கணத்தை (Basic Grammar) முறையாக கற்றுக்கொள்வதும் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

கட்டுரைப் பகுதிக்கு மட்டும் மொத்தம் 50 மதிப்பெண்கள் தனியாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுரையை மொத்தம் 30 நிமிடங்களுக்குள் போட்டியாளர்கள் கண்டிப்பாக எழுதி முடிக்க வேண்டும்.

பொதுவாக கட்டுரை எழுதும்போது அதனை மூன்று முக்கியப் பிரிவுகளாக பிரித்துக்கொள்வார்கள்.

1. முன்னுரை (Introduction) - சுமார் 40 வார்த்தைகளுக்குள் அமைய வேண்டும்.
2. கட்டுரையின் உடற்பகுதி (Body of the Essay) - சுமார் 160 வார்த்தைகள் அமைந்தால் நல்லது.
3. முடிவுரை (Conclusion) - சுமார் 50 வார்த்தைகளுக்குள் நிறைவு செய்யலாம்.

கட்டுரை எழுதும்போது சரியான புள்ளிவிவரங்கள், உண்மைகள் (Facts), உதாரணங்கள் ஆகியவற்றை இணைத்து எழுதுவது நல்லது. கட்டுரையை சிறுசிறு பத்திகளாகப் (Paragraph) பிரித்து எழுதுவது கட்டுரைக்கு வலுசேர்க்கும். சில முக்கிய குறிப்புகளை தெளிவாக கட்டுரையில் தெரிவிக்க விரும்பினால், அதனை தனித்தனியாக புள்ளியிட்டு குறிப்பிடுவது (Bullet Points) நல்லது.

கட்டுரைகளை தாள்களில் எழுத வேண்டியிருப்பதால், கையெழுத்துத் தெளிவாக அமைவது நல்லது. கட்டுரைகளை இந்தி அல்லது ஆங்கிலமொழிகளில் எழுதலாம். இந்தத் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (Minimum Qualifying Marks) 33 சதவீதம் ஆகும்.
உங்களுக்கு உதவும் வகையில் சில கட்டுரை தலைப்புகள்:

* Article 370 of the Constitution of India
* Black Money
* Capital Punishment
* Child Labour
* Corruption
* Digital India
* Environment
* Food Security Bill
* Honour Killing
* Impact and Scope of GST Bill in India
* Intellectual Property Rights
* Internal Security
* Judicial Activism
* Kashmir problem: Is it a creation of our unwise policies?
* Make in India
* Political System in India
* Pollution
* Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDSA)
* Ragging
* Reservation
* Right to Information Act
* Role of Media
* Science - A Blessing or A Curse
* Surgical Strike
* Swachh Bharat Abhiyan
* Terrorism
* UDAN Scheme
* Union Budget
* Women Empowerment
* Women Reservation

விரிவான விளக்க விடைத் தேர்வில் “கட்டுரை எழுதுதல்” போன்றே “கடிதம் மற்றும் விண்ணப்பம் எழுதுதல்” (Letter / Application Letter) மிக முக்கியமான ஒன்றாகும்.  “கடிதம் மற்றும் விண்ணப்பம் எழுதுதல்” பகுதிக்கு மட்டும் 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்விக்கான பதில்களை 30 நிமிடத்திற்குள் போட்டியாளர்கள் எழுதி முடிக்க வேண்டும். கடிதங்கள் 100 முதல் 200 வார்த்தைகளுக்குள் அமைய வேண்டும்.  

கடிதம் எழுதும்போது “இலக்கணத் தவறு” நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ஒரே கருத்தை மறுபடியும் வலியுறுத்தி கடிதம் அமைவது நல்லதல்ல. எழுத்துப்பிழைகள் இல்லாமல் (Spelling Mistakes) கடிதம் அமைய வேண்டும்.

உதாரணமாக - Write a letter in 200 words to the Editor, the ‘Times of India’, New Delhi-14 about making Higher Education Curriculum more flexible and interesting. - போன்ற கேள்விகள் இடம்பெறலாம். இதுபோன்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி முறையான தயாரிப்பை மேற்கொள்வது கடிதம் எழுதுதல் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற உதவிகரமாக அமையும்.

‘டைப்பிங் தேர்வு / திறன் தேர்வு (நிலை-III)’(TYPING TEST / SKILL TEST [TIER-III])

“கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேஷன்” தேர்வில் ‘டைப்பிங் தேர்வுத் திறன் தேர்வு (நிலை-III)’ (Typing Test / Skill Test [Tier-III]) என்னும் தேர்வு ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’  (Data Entry Operator), ‘சார்டிங் அசிஸ்டென்ட்’  (Sorting Assistant), ‘போஸ்டல் அசிஸ்டென்ட்’   (Postal Assistant), ‘லோயர் டிவிஷன் கிளார்க்’  (Lower Division Clerk), ‘கோர்ட் கிளார்க்’  (Court Clerk) ஆகிய பணிகளில் சேர நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களுடைய விருப்பம் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்

நெல்லை கவிநேசன்