படிப்புக்கேற்ற வேலையா வேலைக்கேற்ற படிப்பா?



வழிகாட்டல்

வாழ்வை வளமாக்கும் வங்கிப் பணி!


அரசுப் பணிகளுக்குத் தயார் செய்கிற இளைஞர்கள், மத்திய - மாநிலப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்கிறார்கள். சரி. ஆனால் அத்தனை தேர்வர்களுக்குமே பணி கிடைத்து விடுமா?

அரசுப் பணி கிடைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். உதாரணமாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வையே சொல்லலாம். கடந்த இதழில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் என்று சொன்னதே இதுதான். இப்போது தமிழக அரசின் பல்வேறு பிரிவில் அதிகாரி தரத்திலான 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எத்தனை லட்சம் பேர் போட்டியிடப்போகிறார்கள் என்று பாருங்கள், நிலைமை உங்களுக்கே புரியும்.  ஆனால், முழு முயற்சியோடு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.

இதேபோல் இந்திய அளவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் பொதுத்துறை எது தெரியுமா..?
ரயில்வே..? காப்பீடு..? இரண்டும் சரிதான். மூன்றாவதாக ஒன்று உண்டு.
அதுதான் - வங்கித்துறை.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பாங்க்.... போன்ற அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளைப் பொதுத்துறை வங்கிகள் என்கிறோம்.‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி’, ‘கிரிண்ட்லேய்ஸ்’ வங்கி போன்றவை, அயல்நாட்டு முதலீடுகளுடன் செயல்படும் வங்கிகள் என்பது நாம் அறிந்ததுதான். இவை மட்டுமல்லாமல், இந்திய தனியார் வங்கிகளும் உண்டு. மூன்றாவதாக ஒரு பிரிவு இருக்கிறது. கூட்டுறவு வங்கிகள். மாநில, மாவட்ட அளவில் செயல்படும் இவை, மக்கள் மத்தி
யில் பிரபலமானவையாகவும், சிறந்த சேவை ஆற்றுபவையாகவும் உள்ளன.

அனைத்து வகை வங்கிகளிலுமே ஆண்டுதோறும் ஏராளமானோர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். எல்லா இடங்களிலுமே வங்கிப் பணி அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆகவே, இப்பணி குறித்த  பொதுவான புரிதலும் பொதுவான திறமையும் இருந்தால் போதும், இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் எந்த மூலையில் உள்ள எந்த வங்கியிலும் வேலைக்குப் போகலாம்.

ஆச்சரியமாக இல்லை..? ஆனால் இது உண்மை. தமிழகத்தின் தென்கோடியில் ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு வங்கிப் பணியாளர் செய்கிற அதே வேலையைத்தான் அமெரிக்காவின் நியூயார்க் நகர மையத்தில் இருக்கிற ஒரு வங்கியும் செய்கிறது. வங்கிப்பணி என்பது - உலகளாவிய வாய்ப்புகளைக்கொண்டது.

ஒரேமாதிரியான வேலை என்றால், அதற்கான தகுதியும் எதிர்பார்ப்பும்கூட ஒரேமாதிரியாகத்தானே இருக்கமுடியும்..?
ஆமாம். கணிதம், கணிப்பொறி - இரண்டிலும் திறன் பெற்றவர்கள் - சர்வ நிச்சயமாக, சிறந்த வங்கியாளராகப் பரிணமிக்க முடியும்.
வங்கிப் பணிக்கான ‘ஆள் தேர்ச்சி முறை’ (Recruitment Process) எளிமையானதா...? கடினமாக இருக்குமா...?
பொதுவாக, இரண்டு நிலைகளில் தேர்வுகள் இருக்கின்றன.
 
1. எழுத்தர் (Clerk) நிலை. 2. அலுவலர் (Officer) நிலை.

நமக்கே நன்கு தெரியும் - முதலாவது எளிமையாக இருக்கலாம்; இரண்டாவது, சற்றே கடினமாக இருக்கும்.
எந்த அடிப்படையில், ‘எளிது’, ‘கடினம்’ என்று பிரிப்பது..?

இரண்டுமே கணிதத்தை மையமாக வைத்து நடத்தப்படுவனதாம். ‘வேகம்’ மற்றும் ‘துல்லியம்’ ஆகியனதாம் தேர்வின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
சுமார் 30 நிமிடங்களில் 30 கேள்விகளுக்கு பதில் தருவதாக எழுத்தர் தேர்வு இருந்தால், அதே 30 நிமிடங்களில் 50 வினாக் களுக்கு விடை அளிப்பதாக, அலுவலர் தேர்வு இருக்கலாம்.

விரைந்து முடிவெடுத்து வேகமாக விடை எழுதுவதுதான் வங்கிப் பணிக்கான தேர்வுகளில் வெற்றிக்கான ஒரே வழி. அநேகமாக எல்லா வினாக்களுமே, பள்ளி வகுப்புகளில் படித்த கணிதப் பாடங்களிலிருந்து நேரடியாகக் கேட்கப்படுவனதாம். இவை மட்டுமல்லாமல், ‘திறனறி’ பகுதியில், பொதுஅறிவு மற்றும் அணுகுமுறை அடிப்படையில், ‘aptitude / reasonong’ சார்ந்த வினாக்கள், முக்கிய இடம் வகிக்கின்றன.

வேறு எந்தப் போட்டித் தேர்வையும் விட, வங்கிப் பணிக்கான தேர்வுகளுக்கு, பயிற்சி மிக முக்கியம்.எத்தனைக்கு எத்தனை, தீவிரப் பயிற்சி எடுத்துக்கொள்ள முடிகிறதோ, அத்தனைக்கும் அது, தேர்வில் மிகவும் பயன் தருவதாக இருக்கும். கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள்இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

கணிதப் பகுதிகளை முயற்சிக்கிறபோது, விடை தெரியாத அல்லது கடினமானதாகத் தோன்றுகிற வினாக்களுக்கு, எளிதில் விடை காணுகிற யுத்தியையும் இணையத்திலேயே பலர் பதிவிட்டு உள்ளனர். இதன் உதவியினால், தானாகவே புரிந்துகொள்ளலாம். யாரிடமும் தனியே பயிற்சிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், கூட்டமாக ஒரு வகுப்பறையில் இருந்து கற்றுக் கொள்கிற அனுபவம் தனக்குத் தேவை என்று கருதினால், தரமான பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தும் பயன் அடையலாம்.

பொதுத்துறை வங்கிகளுக்கான போட்டித் தேர்வுகளை, IBPS ‘இந்திய வங்கிகள் பணியாளர் தேர்ச்சி’ என்கிற அமைப்பு திறம்பட நடத்திவருகிறது. எழுத்தர் தேர்வு இரண்டும், அலுவலர் தேர்வு இரண்டுமாகக் குறைந்தபட்சம் நான்கு தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அதாவது, சராசரியாக  மூன்று மாதங்களுக்கு ஒரு வங்கித்தேர்வு நடைபெறுகிறது. இவை தவிர்த்து, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் தம் பங்குக்கு ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்குத் தொடர்ந்து பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவருகின்றன.

ஒரு தோராயக் கணக்கின்படி, ஓர் ஆண்டுக்கு சுமார் 50,000 பணியிடங்கள், வங்கித் துறையில் எழுந்த வண்ணம் உள்ளன. வங்கிப் பணிதான் வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், மற்ற போட்டித் தேர்வுகளைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல், முழு நேரமும், இதற்காகவே பயிற்சி எதுத்துக்கொள்ளுதல் நலம். ஓரிரு ஆண்டுகளில் ஏதேனும் ஒரு வங்கிப்பணி, மிக உறுதியாகக் கிடைத்துவிடும்.

பணியில் சேர்ந்த பிறகு, மேற்கொண்டு பிற போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்தி, மேலும் உயரிய நிலை அடையலாம். ஆமாம்.... அரசுப் பணி, வங்கிப் பணி.... இவையெல்லாம் விட, மிக அதிக எண்ணிக்கையில் வாய்ப்புகள் கொண்டது.... தனியார் துறை.  அங்கே வேலை கிடைக்க என்ன செய்யலாம்....?

(வளரும்)

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி