+1 வணிகவியல் பாடத்தில்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்!



பொதுத்தேர்வு டிப்ஸ்

‘‘11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களில் எடுக்கும் மதிப்பெண்கள் உயர்கல்வி பயில கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அரசு அறிவித்தாலும், தற்போது+1  வகுப்பிற்கு புதிதாக வந்துள்ள பாடத்திட்டம் என்பது தரமானதாகவும் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாகவும் உள்ளதால் மாணவர்கள் இங்கேயே திறம்பட பயில்வதன் மூலம் உயர்கல்வியில் ஜொலிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.’’ என்கிறார் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் வ.எழிலன். அதிக மதிப்பெண் பெற அவர் தரும் டிப்ஸைப் பார்ப்போம்…

தற்போது +1 வகுப்புக்கு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வணிகவியல் பாடம் என்பது மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வணிகவியல் பற்றிய ஒரு முழுமையான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் ஆர்வத்துடனும், புரிதல் திறனுடன் இப்பாடத்தை கற்றால் 100/100 உறுதி. தற்போது அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதன் முக்கிய நோக்கமே அதற்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது என்பதாலும், நன்றாக படித்தால் இந்தப் பிரிவிலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்ற நம்பிக்கையுமே காரணமாக உள்ளது.

இனிவரும் பொதுத் தேர்வு களில் வினாத்தாள் வடிவமைப்பு ஏதும் பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முழு மதிப்பெண் பெற அனைத்து பாடங்களையும் முழுமையாக புரிந்து படிக்க வேண்டும். அதேபோல் 20% வினாக்கள் புத்தகத்தின் உள்ளிருந்து creative முறையில் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20% வினாக்களை எதிர்கொள்ள புத்தகத்தை முழுமையாகப் புரிந்து படிக்க வேண்டும். முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு அதனை தெளிவாக படிக்க வேண்டும்.

ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையை மட்டும் எழுதாமல் விடைக்கான குறியீட்டையும் (அ, ஆ, இ, ஈ) கட்டாயம் எழுத வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பெண் வழங்கப்படும். ஏதாவது ஒன்றை மட்டும் எழுதினால் மதிப்பெண் வழங்கப்படாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கையெழுத்து தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். எழுதுவதற்கு நீலம் (அ) கறுப்பு மை பேனா இதில் ஏதாவது ஒன்றை மட்டும் முழுத்தேர்வு எழுதுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

பள்ளியில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக படித்து எதிர்கொள்ள ஆரம்பம் முதலே எந்த தேர்வாக இருந்தாலும் அதனை சிறப்பாக எழுதி அதில் முழு மதிப்பெண் 100/100 பெற்று வந்தால் பொதுத்தேர்விலும் 100/100 உறுதி. மாதிரி வினாத்தாள்களை அதிக அளவில் பயிற்சிகொள்வதன் மூலம் வினாக்கள் எப்படி கேட்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் தேர்வறையில் பயம் பதற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள முடியும். இனி வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.

பகுதி - 1
 
* ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 20 வினாக்கள் கேட்கப்படுகின்றன. 100/100 மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்து படிப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதே இந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகும். இவை அனைத்தும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகின்ற அடிப்படையில் கேட்கப்படுகின்றன. இதில் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களோடு பாடத்தின் உள்ளிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

பகுதி - 2


* 2 மதிப்பெண் வினாக்கள் 10 வினாக்கள் கேட்கப்படும். இவற்றில் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இதில் 21-ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும்.
* 2 மதிப்பெண் வினாக்களுக்கு 2 points எழுதினால் போதுமானது. இதில் பெரும்பாலும் பாடத்தின் பின்னால் உள்ள வினாக்களே கேட்கப்படுகின்றன. எனவே, புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்களை முழுமையாக படித்தால் இந்தப் பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவிட முடியும். (வினா எண்: 21-30)

பகுதி - 3

* 3 மதிப்பெண் வினாக்கள் 10 கேட்கப்படும். இவற்றில் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது. இதில் 31-ம் எண் வினாவிற்கு கட்டாயம் விடையளிக்கவும். இந்தப் பிரிவிலும் பாடத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களே கேட்கப்படுகின்றன. அவற்றை மட்டும் படித்தால் இந்தப் பிரிவிலும் முழு மதிப்பெண் பெற முடியும். (வினா எண்: 31-40)

பகுதி - 4

* 5 மதிப்பெண் வினாக்கள் 7 கேட்கப்படும். இதில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். இவை அனைத்தும் ‘அல்லது’ என்ற அடிப்படையில்
கேட்கப்படும். (வினா எண்: 41-47) சரியான முயற்சியும், பயிற்சியும் இருந்தால் 100/100 உறுதி.

(மாதிரி வினாத்தாள் அடுத்தடுத்த பக்கங்களில்…)

மாடல்: திவ்யா  
படம்: ஏ.டி.தமிழ்வாணன்