கண்கள் பொய் பேசுவதில்லை!



உடல்மொழி -4

மனிதர்களின் பேச்சுமொழி மூலமான தகவல் தொடர்பிற்கு உடல்மொழி மிகவும் அவசியமானது, தவிர்க்க முடியாதது.  ஒரு கருத்தைச்  சொல்ல வேண்டும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தபின் முதலில் உடல்தான் அதனை ‘உடல்மொழி’யாக  வெளிப்படுத்தத் தொடங்குகிறது. வாயும், குரலும் ஒரு கருவியாக அதற்குச் செயல்படுகிறது.

உடல்மொழியைப் பொறுத்தவரை அதுபற்றிய ஆய்வு என்பது, சார்லஸ் டார்வினின் ‘மனிதனிலும் மிருகங்களிலும் உணர்வுகளின்  வெளிப்பாடு’ என்ற நூல் மிக முக்கியமானது, முதன்மையானது.  அது 1872-ல் வெளியானது. அன்றைய காலகட்டங்களில் உடல்மொழி  பற்றி விளக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே கவனித்தார்கள், விவாதித்தார்கள். டார்வினின் விளக்கம் பல திறப்புகளுக்கு  உறுதுணையாகவே இருந்ததோடு, அவரது யோசனைகளும், கருத்துகளும் முக்கிய பங்களிப்பைத் தந்தன.  

உடலசைவு, முகபாவனைகள் பற்றிய குறிப்புகள் யாவும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தன. டார்வினின்  குறிப்புகள் எல்லாம் விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டன. அதில் தொடங்கி பல்வேறு ஆராய்ச்சிகளின் வழியாக பத்து லட்சத்திற்கும்  அதிகமான வார்த்தைகளற்ற சைகைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து பதிவு செய்தார்கள்.  19ம் நூற்றாண்டின் மத்தியில்  முன்னணி உடலசைவு நிபுணரான ‘ஆல்பர்ட் மேராபியன்’ பேசுமொழியின் மொத்த பாதிப்பில் 7%  வார்த்தைகளாலும் 38% குரலாலும்  (குறிப்பாய் சப்தங்கள்) 55% வார்த்தைகளற்ற அசைவுகளாலும் ஏற்படுவதாக தெரிவித்தார்.

வார்த்தைகளற்ற தகவல் தொடர்பை மானுடவியல் ஆய்வாளர் ரே பேர்ட்விசல் ‘கைனசிக்ஸ்’ என்றழைத்தார். ஒரு நாளில் ஒரு  மனிதன் சராசரியாக 25 - 30 நிமிடங்கள் பேசுகிறான்  (இன்றைய செல்போன் பேச்சுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது)  அதேபோல் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமாக முக பாவனைகளை உண்டுபண்ணி உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்,  புரிந்துகொள்கிறான் என்று வார்த்தைகளற்ற தகவல் தொடர்பின் அளவை அளந்து சொன்னார்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகெங்கும் விற்பனை மேலாண்மை பெரிய அளவில் மேம்பட, அதன் உள்ளீட்டிற்காக உடல்மொழி  குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கென மனிதர்களின் பேச்சுகளையும், குரல்களையும், விவாதங்களையும்  ஒலிநாடாவில் பதிந்து ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.  அதன் முடிவில் வர்த்தக ரீதியான பேச்சு வார்த்தைகளில் 60% - 80%  வரை  உடல்மொழிதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். அது இன்றுவரை தொடர்வதுதான் உடல்மொழி  காட்டும் விசித்திரம்.

ஒரு நபரைப் புதிதாக பார்த்த முதல் 4 நிமிடங்களுக்குள் அவரது உடல் மொழியைக் கொண்டு ஒரு ஆரம்ப கருத்திற்கு மனிதர்கள்  வந்துவிடுகிறார்கள். அதுவே தொலைபேசியில் உரையாடும்போது வாதத்திறமைகொண்ட மனிதர்களே ஆளுமை செலுத்தக்கூடியவராக  இருக்கிறார்கள். அதே நபர் நேரில் வரும்போது, அவரது வாதத்திறமையை விட உடல்மொழியே பிரதானமாகத் தெரிவதால்,  உடல்மொழியைக்கொண்டே அந்த நபர் மதிப்பிடப்படுகிறார். உடல்மொழியின் வெளிப்பாட்டில் அந்த நபரின் அதிகார தோரணையற்ற  தோழமையான குணம், வசீகரமான குரல், கனிவான பேச்சு, புன்னகை ஆகியவைதான் அடிப்படையாக இருந்து ஒரு முன் முடிவுகளை  உருவாக்குகின்றன.

தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் மொழியின் வார்த்தைகள் முக்கியப் பங்கு வகித்தாலும் மனோபாவங்களை  பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள உடல்மொழிதான் பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் வார்த்தைகளுக்கு பதிலாகவும் பயன்படுகிறது.  உடல்மொழிக்கு கண்கள் ஒரு ஆயுதம்தான். கண்கள் ஒருபோதும் பொய்யைப் பிரதிபலிப்பதேயில்லை. ஆண்களைவிட பெண்களே  தங்கள் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு (உடல்மொழிக்கு) கண்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவரை முகத்திற்கு நேராகப் பார்த்துப்  பேசும்போது கண்களை வைத்தே அந்த நபர் எந்த அளவுக்கு உண்மை பேசுகிறார் என்பதை கண்டறிந்துவிட முடியும். பொய் பேசும்  தருணங்களில் கண்கள் இங்கும் அங்குமாக அலைபாயும்.  இதைத்தான் பெரியவர்கள் ‘என்னைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து பேசு’  என்று கண்டிப்பு காட்டினார்கள்.

உலகெங்கும் கலாசார வேறுபாடுகளைத் தாண்டி உடல்மொழியின் வெளிப்பாடானது மனிதர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகவே  இருக்கிறது. அதற்கு மனித அடிப்படை உணர்ச்சிகள் ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். ஒரு நபரைப் பார்க்காமலே அவர்  பேசும்  குரலை வைத்தே அவர் என்ன சைகைகளை செய்வார் என்பதை கைதேர்ந்த மனிதரால் சொல்லிவிட முடியும் என்பதை பேர்ட் விசல்  என்ற உளவியலாளர் நிரூபித்தார்.  அதேபோல் ஒருவரது உடல் அசைவுகளை தூரத்திலிருந்து கவனித்தே அவர் என்ன பேசுகிறார்  என்பதை கண்டறிந்துவிட முடியும் என்பதையும் நிரூபித்தார். இதை ஒவ்வொரு வரும் தங்களது நெருங்கிய நபர்களைக் கொண்டு  (குறிப்பாக அம்மா) கண்டறிந்து கொள்ளமுடியும்.  இது கவனமுடன் கூடிய பார்வையால் மாத்திரமே சாத்தியமாகிறது, புரிந்துகொள்ள  பேருதவிபுரிகிறது.

மனிதர்களின் செயல்கள், உடல் மொழிகள், சைகைகள், குரல், பார்வை  எல்லாம் உயிரியல் விதிகள்படிதான் கட்டுப்  படுத்தப்படுகின்றன. இதனாலேயே மன உணர்ச்சிகளை சைகைகள், அபிநயங்கள் எல்லாம் உடல்மொழியாக வெளிப்படுத்திக்  கொண்டிருக்கும்போது மனம் வேறு எதையோ சிந்தித்துக்கொண்டும், வாய் எதையோ பேசிக்கொண்டும் இருக்கும். இந்த  தன்னிச்சையான செயல்பாடு களும் கூட மனிதரது உயிரியல் விதிகள்படி இருப்பதுதான் சுவாரஸ்யம்.  இதற்கு நல்ல உதாரணம், சில  பெண்கள் வீட்டில் பாடல்களை ரசித்துக்கொண்டே, காய்கறிகளை கவனமாக நறுக்கிக்கொண்டே, பக்கத்தில் சுவாரஸ்யமாக  பேசிக்கொண்டும் இருப்பதை பார்த்திருக்கலாம்.

மனிதர்களது உணர்வு நிலையின் புறவயமான வெளிப்பாடுதான் உடல்மொழி. உடல்மொழி எப்போதும் ஒரு நபர் அந்த நிமிடம் என்ன  உணர்கிறார் என்பதையே வெளிக்காட்டும். உடல் பருமனான ஆண் தனது தாடையின் சதைப் பகுதியை அடிக்கடிஉள்ளிழுத்துக்  கொள்வதும், பருமனான பெண் தன் உடைகளைக் கீழே இழுத்துவிட்டுக் கொள்வதும் அப்படித்தான் தன்னிச்சையான செயல்பாடாக  நடந்துகொண்டிருக்கிறது.   ஒரு மனிதன் ஒரு கருத்தைச் சொல்லும்போது, எந்தச் சூழலில் சொல்கிறான் என்பதைத்தான் கவனிக்க  புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் உடல்மொழியைப் புரிந்துகொள்வதற்கான முதல்படி.

- தொடரும்

ஐந்து விநாடி களுக்கு மேல் ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால், நீங்கள் உங்கள் கண்களால் அவளைத் தொடுகிறீர்கள் என்று  அர்த்தம்
- ஓஷோ  (நடைமொழி)

உடை வழி - சாக்ஸ்

கட்டட வேலை செய்யும் தொழிலாளி முதல் கார்ப்பரேட் கம்பெனி முதலாளி வரை பாகுபாடின்றி அணியும் ஒன்றாகிவிட்டது ஷூ.  இந்த ஷூ அணிவதற்கு முன்பாக சாக்ஸ் அணிவது வழக்கம். இந்த சாக்ஸ் Sykchos என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை.  இது Soccus என்று லத்தீன் தேசத்தில் காலூன்றி, பின் Socc என்று ஜெர்மனிக்குள் நடந்து, அங்கிருந்து ஆங்கிலத்திற்கு ஓடி வந்த  வார்த்தை. சாக்ஸிற்கு மெல்லிய செருப்பு - Light low heeled shoe என்று பொருள்.

சாக்ஸ்,மனிதனின் கட்டாயத் தேவைக்காக கண்டுபிடிக்கப்பட்ட உடை.  மனிதனுக்கு உள்ளங்கால்களில்தான் வியர்வை அதிக அளவில்  வெளியேறும்.  அவற்றை துடைத்துக்கொண்டே இருப்பது நேர விரயம் என்பதை உணர்ந்து, அதற்கு மாற்றாக… தானாக  உறிஞ்சக்கூடியதாக, காற்றோட்டம் நிறைந்ததாக, உடலுக்கு தீங்கு விளைவிக்காததாக, பனி காலங்களில் snowbite-லிருந்து  காக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற தேவைகளை முன்வைத்து  கண்டுபிடிக்கப்பட்ட உடைதான் சாக்ஸ்.

பண்டைய கிரேக்கர்கள் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் ‘piloi‘ என்ற பெயரில் சாக்ஸை மிருகங்களின் ரோமத்திலிருந்து தயாரித்து  அணிந்திருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் கிரேக்க கவிஞர் Hesoid. ரோமானியர்களும் தோல் மற்றும் மிருகங்களின் ரோம  இழைகளிலிருந்து பின்னப்பட்ட சாக்ஸை அணிந்திருக்கிறார்கள். அவை பாதங்கள், கணுக்கால், முழங்கால் வரை மறைக்கக்கூடியதாக  இருந்திருக்கிறது.  கி.பி.2 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் ரோமானியர்கள் அதை ‘Udones’ என்று பெயரிட்டு அணிந்திருக்கிறார்கள்.  கி.பி. 5 ஆம் நூற்றாண்டில்,‘Puttees’ என்றழைக்கப்பட்ட சாக்ஸ் ஐரோப்பாவிற்குச் செல்ல, அவை முதலில் மத குருக்களால்  அணியப்பட்டன. அன்றைய காலகட்டங்களில் சாக்ஸ் அணிந்திருப்பது பரிசுத்தத் தன்மையை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது.

இடைக்காலத்தில் ஆண்-பெண்களின் கால்சட்டையின் நீளம் நீட்டிக்கப்பட்ட போது,சாக்ஸ் காலோடு இறுக்கமாக இணையும்  வகையிலும், பிரகாசமான நிறங்களில் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டது. அன்றைய காலகட்டங்களில் சாக்ஸுடன் எலாஸ்டிக்  இணைக்கப்படாததால் அவை  காலினின்றும் சறுக்கி விழாமல் இருக்க மேல்கட்டு கட்டப்பட்டு வந்தது.

1589ல் பின்னல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, அது கைகளால் பின்னப்படுவதைவிட ஆறு மடங்கு வேகமானதாக பின்னக்கூடிய  முறையில் இருக்க, சாக்ஸ் இயந்திர முறைக்கு மாறியது. 1924ல் நைலான் அறிமுகப்படுத்தப்பட, சாக்ஸ் நைலானிற்கு மாறியது.  அதன் பின்னர், பருத்தி & கம்பளி இரண்டின் இணையோடும் தயாரிக்கப்பட்டது. சாக்ஸ் இன்றுவரை மனிதர்களின் கால்களோடு  உறவாடிக் கொண்டேயிருக்கிறது.

ஸ்ரீநிவாஸ் பிரபு