செய்தித் தொகுப்பு



பள்ளிக் கல்வித்துறை அதிரடி  அறிவிப்பு!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி அறிவிப்புகள் புதிய திட்டங்கள் வரிசையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்  பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட  பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் சமீபத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்  பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுவும் இந்த வருடமே கட்டாயம் 5 மற்றும் எட்டாம் வகுப்பிற்கு  பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆனால், ஏன் இந்த பொதுத்தேர்வு என்றால், மாணவர்கள் 10ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும்  என்றும் நீட் தேர்வு முதலான அனைத்துத் தேர்வுகளிலும் மாணவர்கள்  தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஐந்து  மற்றும் எட்டாம் வகுப்பிலேயே ஆயத்தப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்து இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

நெட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்!

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை  பெறுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்தத் தகுதித் தேர்வில்,  வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெறவுள்ள இந்த நெட் தேர்வானது 

புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் எனவும், புதிய பாடத்திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசியத் தேர்வுகள் முகமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வானது வரும் 2019 ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட  உள்ளது. தேர்வுக்கு மார்ச் 1ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கப்படவுள்ளது. பதிவு செய்ய மார்ச் 30  கடைசி நாளாகும்.

தமிழக பட்ஜெட் 2019 பள்ளிக் கல்வித்துறை முக்கிய அம்சங்கள்!

* பள்ளிக் கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு
* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு
* பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது
* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு
* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு
* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு ரூ.2,791 கோடி ஒதுக்கீடு
* முதல் முறையாகப் பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு  ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  ரூ.1,552 கோடி ரூபாய் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2018-19ம்  ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்த ஓ.பன்னீர்செலவம், 2019-20ம் ஆண்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு  ரூ.1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

அண்ணா பல்கலையில் மீண்டும் ‘அரியர்’ முறை தேர்வு!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017-ஆம் ஆண்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு,  விருப்பப்  பாடத் தேர்வு முறையும் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ்)  தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு  துறைப் பாடம் ஒன்றை எடுத்தும் படிக்க முடியும்.

  மேலும், இந்தப் புதிய கல்வித் திட்டத்தின்படி அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. அதாவது, ஒரு பருவத் தேர்வில் பாடங்களில்  தோல்வியடையும் மாணவர், அடுத்து வரும் தேர்வில் அவர் தோல்வியடைந்த தேர்வை எழுதமுடியாது. மீண்டும் அந்தப் பாடத்துக்கான  தேர்வு எந்தப் பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு  (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.

இந்தப் புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவ,  மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை அண்மையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 2017 கல்வித் திட்ட  நடைமுறைகளைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என  பல்கலைக்கழகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழகக் கல்விக்குழு கூட்டத்தில், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் அரியர்  நடைமுறையை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக ஆட்சிக்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.