தமிழக அரசின் மருத்துவத்துறையில் நர்ஸ் வேலை!* 2865 பேருக்கு வாய்ப்பு

தமிழக மருத்துவத்துறையில் நர்ஸ் பணிக்கு 2865 பேரைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு ஆணையம் சுருக்கமாக டி.என்.எம். ஆர்.பி (TNMRB) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த  அமைப்பு தமிழக மருத்துவத்துறையில், குழந்தைகள் பிறப்பு பிரிவில் நர்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மொத்தம் 520 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவை ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்...கல்வித்தகுதி: அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் நர்சிங் பட்டப்படிப்பு மற்றும்  டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் நர்சிங் கவுன்சிலில் 6.2.2019-க்கு முன்பாக பெயரை பதிவு செய்து  வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 1.7.2019-ம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 32 வயதுக்கு  உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., டி.என்.சி., எம்.பி.சி. மற்றும் பி.சி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள்  57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350-ம் மற்றவர்கள் ரூ.700-ம்  கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன்,  ஆஃப்லைன் (வங்கி மூலமாக) இரு வழிகளிலும்  கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தைச்  சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியே விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் 26.2.2019 கடைசி நாளாகும். வங்கி வழியாக  கட்டணம் செலுத்துபவர்கள் 28.2.2019-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு 9.6.2019 அன்று நடைபெற  உள்ளது.

மேலும் 2345 நர்ஸ் பணிகள்   மற்றொரு அறிவிப்பின்படி ஒப்பந்த அடிப்படையில் 2345 நர்ஸ் பணியிடங்களை நிரப்பவும் அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இதில் ஆண்களுக்கு 1549 இடங்களும், பெண்களுக்கு 796 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 213  பின்னடைவுப் பணியிடங்களும் அடக்கம். இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை  http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf  என்ற இணையதள விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்தப் பணிகளுக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு 57 வயது வரை வயது  வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. நர்சிங் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்  குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி 27.2.2019-ம்  தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு 23.6.2019-ம் தேதி நடக்க  உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும் http://www.mrb.tn.gov.in/notifications.html   என்ற இணையதள  பக்கத்தைப் பார்க்கலாம்.
    
- தோ.திருத்துவராஜ்