உலக சாதனை படைத்த மாணவி… சாதிக்கவைத்த ஆசிரியை!



*சாதனை

உலக சாதனைகள் பலவிதமாக படைக்கப்படுகின்றன. அவற்றில் புதுவிதமாக சாதனை படைத்துள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவி தர்ஷினி. டிரையும்ப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் 289 விநாடிகளில் 150 திருக்குறள் பாடல்களைச் சரளமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தர்ஷினியின் திறமையைக் கண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாகப் பசுமை வீடு திட்டத்தின்கீழ் புதிய வீடு, ஒரு பவுன் தங்கச் செயின், விருது மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்துள்ளார் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி. மாணவி உலக சாதனை படைக்கத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி பயிற்சியளித்துவரும் ஆசிரியை ரஷீனாவிடம் பேசியபோது, ‘‘தர்ஷினியை உலக சாதனை படைக்க வைத்தது இரண்டு வருட முயற்சிக்கும் பயிற்சிக்கும் கிடைத்த வெற்றி.


ஆரம்பத்தில் உலக சாதனை படைக்க வைக்க வேண்டும் என்று நினைத்து அவருக்கு நான் பயிற்சி அளிக்கவில்லை’’ எனக் கூறும் ரஷீனா பல்வேறு புது முயற்சிகளை அந்த அரசுப் பள்ளியில் முன்னெடுத்துள்ளார். 2019ம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான ‘நாளைய கலாம்’ விருதும் பெற்றுள்ளார் ரஷீனா.:‘ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். பின் 2010ம் ஆண்டு தான் இப்பள்ளியில் சேர்ந்தேன். தனியார் பள்ளிகளில் வேலை செய்துவிட்டு அரசுப் பள்ளியில் சேரும்போது பல நிகழ்வுகள் வித்தியாசமாக இருந்தன.

கிராமத்தில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள்தான் பெரும்பாலும் இப்பள்ளியில் படிக்கின்றனர். நான் சேரும்போது பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளில் கிடைக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்து தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கி ஆண்டுவிழா நடத்தினோம். அதுவரை ஆண்டு விழா போன்ற நிகழ்வைப் பார்த்திராத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து பள்ளி அளவில் நடைபெறும் ஓவியம், பேச்சு, எழுத்துப் போட்டிகளில் எங்கள் மாணவர்களைப் பங்கேற்க ஊக்கமளித்து பயிற்சி கொடுத்தேன். மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை வென்றனர். அப்போது பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இரும்பினாலான விதவிதமான செல்போன் டவர்கள், கழிவுநீர் மேலாண்மை என பத்துவிதமான பொருட்கள் செய்து கண்காட்சி வைத்தோம். சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்தது. அடுத்த வருடக் கண்காட்சியிலும் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்தது. இவ்வாறு பல்வேறு போட்டிகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து அவர்களிடையே ஆர்வத்தைக் கொண்டுவந்தோம்’’ என்கிறார் ஆசிரியை ரஷீனா.


‘‘பெரும்பாலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களைத் தான் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கச் செய்தேன். ஏனெனில் அவர்கள் அடுத்த வருடம் ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்குச் செல்வதால் திறனை மேம்படுத்தும் விதமாக இப்பயிற்சிகள் அமையும் என நினைத்தோம். இதுபோன்ற சூழலில் தான் அப்போது ஒன்றாம் வகுப்பு படித்து வந்த தர்ஷினி, எங்களையும் போட்டிகளுக்குக் கூப்பிட்டு போங்க டீச்சர் என கூறினார்.

அதே ஆண்டு தான் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார், பள்ளிகளில் கலைத்திருவிழாவை கொண்டுவந்தார். அதன்படி ஓவியம், நடனம், நாட்டுப்புறக் கலை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும். அப்போது ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 30, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் 60 திருக்குறள் சொல்ல வேண்டும் என டாபிக் கொடுக்கப்பட்டது. எனவே, ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களைப் போட்டிகளுக்குத் தயார்படுத்தும் முயற்சிகளில் இறங்கினேன்.

போர்டில் திருக்குறள் எழுதி மாணவர்களைப் படித்துவரச் சொன்னேன். ஒன்றாம் வகுப்பு மாணவர்களில் தர்ஷினிதான் 30-க்கு 21 திருக்குறள்கள் சரளமாக ஒப்புவித்தார். எனவே, பள்ளி அளவில் நடந்த போட்டிக்கு தர்ஷினியை அழைத்துச் சென்றேன். பதினெட்டுப் பள்ளிகள் கலந்துகொண்ட அந்தப்போட்டியில் அனைவரும் பத்து பன்னிரண்டு திருக்குறள்கள் சொல்ல தர்ஷினி மட்டுமே 20-க்கு மேல் ஒப்புவித்து பரிசை வென்றார்.

அடுத்ததாக 32 பள்ளிகள் கலந்துகொண்ட போட்டியிலும் தர்ஷினி வென்றார். அப்போதுதான் தர்ஷினியின் நினைவுத்திறன் பற்றித் தெரிந்துகொண்டேன்’’ என்று சொல்லும் ஆசிரியை ரஷீனா தர்ஷினிக்கு வழங்கப்பட்ட பயிற்சி பற்றியும் விவரித்தார். ‘‘தர்ஷினியை ஒவ்வொரு வாரமும் ஐந்து ஐந்து திருக்குறளாக சொல்லி படித்துவர சொன்னேன். அவ்வாறு 30 திருக்குறள் ஒப்புவித்த தர்ஷினி 35, 40, 45 படித்தார். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே 50 திருக்குறள் ஒப்புவிக்கும் அளவிற்கு பயிற்சி அளித்தேன். இரண்டாம் வகுப்பின் ஆரம்பத்தில் 100 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் அளவிற்கு தர்ஷினி முன்னேறினார். மாவட்ட கலெக்டருக்கும், கல்வி அதிகாரிக்கும் தர்ஷினி ஒப்புவிக்கும் வீடியோவைக் காட்டினேன். இன்னும் கொஞ்சம் பயிற்சி அளிக்கலாமே என கூறினர்.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது 110 திருக்குறள் ஒப்புவிக்கும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார். கலெக்டர் முன்னிலையில் திருக்குறள் ஒப்புவிக்க அனுமதி கிடைத்தது. வெறும் ஒப்புவித்தலாக இருக்கக்கூடாது புதுமையாக ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என எனக்குத் தோன்றியது. எனவே, குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஒப்புவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து மூன்று நாட்களில் அதற்கான பயிற்சியை அளித்தேன். வார்த்தை உச்சரிப்புகள் தெளிவாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் வேகமாகவும் ஒப்புவிக்க வேண்டும் எனப் பயிற்சி கொடுத்து 4 நிமிடத்தில் 110 திருக்குறள் ஒப்புவிக்க வைத்தேன்.

அடுத்ததாக நிமிடத்திற்கு 30 திருக்குறள்கள் வீதம் ஐந்து நிமிடத்தில் 150 திருக்குறள் ஒப்புவிக்க பயிற்சி அளித்தேன். இந்த நேரத்தில்தான் சிறந்த ஆசிரியருக்கான ‘நாளைய கலாம்’ விருது எனக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் Triumph World Records நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்தது. தர்ஷினியின் திறமையை அவர்களிடம் கூறினேன். டிரையும்ப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவத்தினர், கலெக்டர், ஆசிரியர்கள், பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் ஐந்து நிமிடத்தில் 150 திருக்குறள்கள் ஒப்புவிக்கும் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. ஆனால், தர்ஷினி 289 விநாடிகளிலேயே (4.49 நிமிடங்கள்) 150 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்தார்’’ எனக் கூறும் ரஷீனா மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விவசாயத்தையும் பழக்கிவருகிறார்.

தாமாக இயற்கை உரங்கள் செய்து கத்தரிக்காய், கீரை வகைகள் விளையவைத்து பள்ளி சார்பில் சந்தை அமைத்து விளைந்த காய்களை மக்களுக்கு விநியோகமும் செய்துவருகிறார். இதுபோன்று மாணவர்கள் நலனுக்காக முழுமனதோடு செயல்படும் தன்னலமில்லா ஆசிரியர்களால்தான் சமூக அக்கறை உள்ள எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ரஷீனா.

 - வெங்கட் குருசாமி